ஸ்ரீவிஜயபுரம் ஆகிறது போர்ட் பிளேர்: பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு
13 புரட்டாசி 2024 வெள்ளி 22:35 | பார்வைகள் : 1544
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை ஸ்ரீவிஜயபுரம் என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ' எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: காலனித்துவ முத்துரைகளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை ஸ்ரீவிஜயபுரம் என மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
முந்தைய பெயரானது, காலனித்துவ பாரம்பரியத்தை கொண்டு இருந்தது. ஸ்ரீவிஜயபுரம் என்ற பெயரானது, நமது சுதந்திர போராட்டத்தின் வெற்றியையும், அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளின் தனித்துவத்தையும் பிரதிபலிக்கிறது.
நமது சுதந்திர போராட்டம் மற்றும் வரலாற்றில், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு. சோழ அரசின் கடற்படை தளமாக செயல்பட்ட இந்த தீவானது, இன்று நமது பிராந்திய மற்றும் வளர்ச்சி நோக்கங்களுக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.இங்கு தான் நேதாஜி முதன்முறையாக நமது தேசியக் கொடியை ஏற்றினார். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீர சாவர்க்கர் மற்றும் பலரை இங்கு தான் சிறையில் அடைத்தனர். இவ்வாறு அந்த பதிவில் அமித்ஷா கூறியுள்ளார்.