பா.ஜ., கோரிக்கை நிறைவேறுமா?: தமிழக அரசுக்கு அமித் ஷா கடிதம்
15 ஆடி 2024 திங்கள் 03:27 | பார்வைகள் : 1261
திருச்சியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:
கடந்த 2019ம் ஆண்டு, சிறு, குறு விவசாயிகள் நலனுக்காக, பி.எம்., கிசான் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார். தமிழகத்தில், அதிகபட்சமாக 43 லட்சம் விவசாயிகள், அந்தத் திட்டத்தில் பயன்பெற பதிவு செய்தனர்.
படிப்படியாக குறைந்து, தற்போது இந்தத் திட்டத்தில், 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயனடைகின்றனர். 39 லட்சம் சிறு, குறு விவசாயிகள் உள்ள தமிழகத்தில், தகுதியான விவசாயிகளை நீக்கி, மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கலெக்டர்களும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தி, தகுதியான விவசாயிகளை பி.எம்., கிசான் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
இல்லாவிட்டால், திருச்சியை மையமாகக் கொண்டு, பா.ஜ., மாநில பொதுச்செயலர் முருகானந்தம் தலைமையில் போராட்டம் நடத்தப்படும்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், குற்றவாளிகள் தொடர்பான வீடியோ வெளியிட்டுள்ள தமிழக அரசு, தொடர்ந்து உண்மையை மூடி மறைக்கிறது. கொலை சம்பவத்தில் உள்ள மர்ம முடிச்சை அவிழ்ப்பதற்கு, போலீசாரோ, தமிழக அரசோ முயற்சி செய்யவில்லை.
ஆம்ஸ்ட்ராங் கொலையை சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும் என தமிழக பா.ஜ., சார்பில் அமித் ஷாவுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினோம்.
அதன் அடிப்படையில், தமிழக உள்துறை செயலரிடம் விளக்கம் கேட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடிதம் அனுப்பி உள்ளார்.
தமிழக விவசாயிகளுக்கு காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி, விவசாய சங்கத்தினர் வரும் 26ல் போராட்டம் நடத்துகின்றனர். அப்போராட்டத்தில் பா.ஜ.,வும் பங்கேற்கும்.
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தில், அனைத்து மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், துறை சார்ந்த அதிகாரிகளும் உறுப்பினர்களாக உள்ளனர். மேலாண்மை ஆணையம் நடத்தும் கூட்டங்களை, தமிழக அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். அதனால், நதிநீர் பங்கீடு பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.