இஸ்ரேல் பிரதமர் மற்றும் ஹமாஸ் தலைவருக்கு எதிராக பிடியாணை!
21 வைகாசி 2024 செவ்வாய் 09:23 | பார்வைகள் : 2855
யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக இஸ்ரேலிய பிரதமருக்கும் ஹமாஸ் தலைவருக்கும் எதிராக பிடியாணையை பிறப்பிக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2023 ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் மற்றும் ஹமாஸ் தலைவருக்கு எதிராக பிடியாணையை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிஎன்என்னிற்கு வழங்கிய பேட்டியில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் கரிம்கான் இதனை தெரிவித்துள்ளார்.
பெஞ்சமின் நெட்டன்யாகு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் ஹமாசின் தலைவர்கள் யஹ்யா சின்வர் முகமட் டெய்வ் இஸ்மாயில் ஹனியா ஆகியவர்களிற்கு எதிராக பிடியாணையை பிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் உக்ரைன் யுத்தத்திற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போன்றவர்களின் பட்டியலில் பெஞ்சமின்நெட்டன்யாகு இணைந்துகொண்டுள்ளார்.
இந்த பிடியாணை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
அதேவேளை இதன் மூலம் அமெரிக்காவிற்கு ஆதரவான அரசியல்வாதியொருவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல்முறை இலக்குவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.