இந்தியர் கால் பதிக்கும் வரை நிலவுக்கான பயணம் தொடரும்
18 சித்திரை 2024 வியாழன் 01:59 | பார்வைகள் : 2091
மனிதர்களை அனுப்பும் வரையில், நிலவை ஆய்வு செய்வதற்கான விண்கலம் அனுப்பும் முயற்சிகள் தொடரும்,” என, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் சோம்நாத் குறிப்பிட்டார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளதாவது:
நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது நம் மிகப்பெரிய இலக்கு. கடந்தாண்டு ஆகஸ்டில், சந்திரயான் -- 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்பகுதியில் இறங்கியது. நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன், அது குறித்த தொழில்நுட்பத்தில் நாம் நிபுணத்துவம் பெற வேண்டும். அதாவது மனிதர்களை வெற்றிகரமாக அனுப்பி, திரும்பவும் பூமிக்கு அழைத்து வருவதற்கு நிபுணத்துவம் தேவை.
அந்த வகையில், ககன்யான் எனப்படும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதலில் ஆளில்லாமல் விண்கலம் செலுத்தி சோதித்து பார்க்கப்படும்.
இவ்வாறு அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக அமைந்தால், அடுத்தாண்டு இறுதியில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப முடியும்.
அதனடிப்படையிலேயே, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். நிலவில் இந்தியர் ஒருவர் கால் பதிக்கும் வரையில், நிலவுக்கு விண்கலங்கள் அனுப்பும் சோதனைகள் தொடர்ந்து நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.