Paristamil Navigation Paristamil advert login

கருணாநிதி நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கருணாநிதி நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

26 மாசி 2024 திங்கள் 16:56 | பார்வைகள் : 1674


இந்திய அரசியலில் முதுபெரும் தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி. தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக 18 ஆண்டுகள் பதவி வகித்தவர். 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந்தேதி அன்று தனது 95 வயதில் மரணம் அடைந்தார். 

தனது அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலேயே தனது உடலையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பது கருணாநிதியின் விருப்பமாக இருந்தது. ஆனால் அதற்கு தடை ஏற்பட்டது. இதையடுத்து தி.மு.க. தரப்பில் நீதிமன்றம் சென்றனர். அனுமதி ஆணை பெற்று, அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பொதுப்பணித்துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இவைகளின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. முதலில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிட கல்வெட்டு மற்றும் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடம் முன்பு நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தை பொதுமக்களின் பார்வைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அமைச்சர் துரைமுருகன், நடிகர் ரஜினிகாந்துடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டரி வாகனத்தில் சென்று கருணாநிதி நினைவிடத்தை பார்வையிட்டார். நினைவிடத்தில், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்