பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகை: பங்கேற்கும் நிகழ்ச்சிகள்..முழு விவரம்
26 மாசி 2024 திங்கள் 17:02 | பார்வைகள் : 1937
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்தி வரும் என் மண் என் மக்கள் யாத்திரையின் இறுதி நிகழ்வு வரும் 27-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பிப்ரவரி 27, 28ஆம் தேதிகளில் 2 நாட்கள் தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
பிரதமர் பங்கேற்றுப் பேசும் இந்தப் பொதுக் கூட்டம் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக் கூட்டத்திற்காக பல்லடம் அருகே மாதப்பூர் கிராமத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் மைதானத்தைத் தயார்படுத்தும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. .
பிப்ரவரி 27ஆம் தேதி மதியம் கோவை சூலூர் விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்வார். மதியம் 2.45 மணியளவில் மாதப்பூர் வந்தடையும் அவர், ஒரு மணிநேரம் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார். இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுவார்.
அதன் பிறகு அங்கிருந்து மதுரைக்கு பிரதமர் மோடி புறப்படுகிறார். மதுரையில் உள்ள டி.வி.எஸ் லட்சுமி பள்ளியில் 'டிஜிட்டல் மொபிலிட்டி இனிஷியேட்டிவ் பார் ஆட்டோமோட்டிவ் எம்.எஸ்.எம்.இ.' என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அன்று இரவு மதுரையில் தங்குகிறார் பிரதமர் மோடி. அப்போது, தமிழக பாஜக நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாகத் தெரிகிறது.
மறுநாள், அதாவது பிப்ரவரி 28ஆம் தேதி, காலை தூத்துக்குடிக்குச் சென்று பல்வேறு திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் . அங்கிருந்து நெல்லை செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்குச் செல்ல உள்ளார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருப்பூரில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.