விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

13ஆவது திருத்தமும் தமிழ் அரசியல் சமூகமும் – ஒரு யதார்த்த அணுகுமுறை

21 February, 2022, Mon 9:57   |  views: 7558

இன்றைய தமிழ் அரசியல் பரப்பில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ள விவகாரம் இலங்கை அரசியல் யாப்பில் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தம் பயனுள்ளதா, பயனற்றதா என்பதும், அதன் விளைவாக ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை அரசு முறைமை உண்மையிலேயே தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் தன்மையை கொண்டதா, இல்லையேல் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அடையக்கூடிய கணிசமான அதிகார பகிர்வை தடுத்து நிறுத்தும் ஒரு பயனற்ற நிறுவனமாக இருக்கின்றதா? என்பதுமாகும்.

 
இந்த விவாதம் முன்னரங்கிற்கு கொண்டுவரப்பட்டதின் முக்கிய காரணம், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல தமிழ் அரசியல் கட்சிகள் அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கைக்கான இந்திய தூதுவருக்கூடாக அனுப்பிய கடிதமொன்றில், 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்துவதற்கு இலங்கை அரசை இந்திய அரசு உரிய முறையில் ஊக்குவிக்க வேண்டும் என்று கோரியிருந்ததுடன், இந்த 13ஆவது திருத்தமானது 1987இல் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டது என்பதையும் அதில் சுட்டிக்காட்டி இருந்தனர்.
 
இந்த விவகாரம், 13ஆவது திருத்தத்தை எதிர்ப்பவர்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு ஆர்பாட்டங்களை தூண்டிவிடவும் காரணமாய் அமைந்துவிட்டது. கோட்டாபய அரசு புதிய அரசியல் யாப்பொன்றை தயாரிப்பதற்காக நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்து, அக்குழு மிக விரைவில் புதிய நகல் அரசியல் யாப்பொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக செய்திகள் வெளிவரும் இவ்வேளையில், இந்த வாதப்பிரதி வாதங்கள் மேலும் அதி முக்கியத்துவம் பெறுகின்றன என்று கூறலாம்.
 
13ஆவது பற்றிய வாதப்பிரதிவாதங்களின் சரியான நியாயங்களை தீர்மானிப்பதற்கு 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டிருக்கும் சாராம்சங்களையும், 1988இலிருந்து வடக்கு கிழக்கு தவிர்ந்த இலங்கை முழுவதும் 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டு, தொடர்ச்சியாக நடைமுறையில் இருந்த மாகாண அரசுகளின் செயற்பாடுகள்பற்றியும் பார்ப்பது முக்கியமாகும்.
 
இந்த மாகாண அரசு முறைமை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் நீண்ட கால கோரிக்கையான சமஷ்டி அடிப்படையிலான அதிகார பரவலாகத்தின் விளைவாகவே ஏற்பட்டது என்பதுடன், ஆரம்பத்தில் இது வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்திற்கு மாத்திரமே அமைக்கப்படும் என்று கருதப்பட்ட போதிலும், இந்த முறைமை சிங்கள மக்களை பெரும்பான்மையாகக்கொண்ட இலங்கையின் ஏனைய பாகங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. அப்போது, இந்த மாகாணங்களில் மாகாண அரசுக்கான கோரிக்கை எழவில்லை என்பதும் குறிப்பிடப்படவேண்டியது.
 
முதலாவது மாகாணசபை தேர்தல்கள் ஏப்ரல் 1988இல் வட மத்திய, வடமேற்கு, சப்ரகமுவ மாகாணங்களுக்கும் பின்னர் ஏனைய மாகாணங்களுக்கும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் செப்ரெம்பர் 1988இல் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரே நிர்வாக அலகாக இணைக்கப்பட்டு, நவம்பர் 1988இல் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. பின்னர் 1990இல் வடக்கு கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டது. இதன் பின்னர், இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் மத்திய அரசினால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தத்தால், இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெறவில்லை. 2006ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பொன்றின் பிரகாரம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்துக்கான தேர்தலும், யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி வடக்கு மாகாணத்துக்கான தேர்தலும் நடைபெற்றது. எனவே, இந்த மாகாண சபை முறைமை நீண்ட காலமாக செயற்பட்டுவந்திருப்பதை அவதானிக்கலாம். ஆனால், இந்த நீண்ட கால கட்டத்தில், மாகாணசபை பட்டியல் 1இன் 9ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்ட, 13ஆவது திருத்தத்தின் குறித்த சில பிரிவுகள் செயல்படுத்தப்படாமல் இன்னமும் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த அநுபந்தங்கள் பின்வரும் விடயங்களைக் கையாள்வதற்கான ஏற்பாடுகளாகும்:
 
அநுபந்தம் 1: சட்டம் ஒழுங்கு தொடர்பானது. இது பிரதானமாக, தேசிய பொலிஸ் பிரிவுடன் இணைந்த ஒரு மாகாண பொலிஸ் பிரிவின் பொலிஸ் அதிகாரத்துடனும் அதன் நிறுவன கட்டமைப்புடனும் சம்பந்தப்பட்டது.
 
அநுபந்தம் 2: காணியும் குடியேற்ற அதிகாரமும் தொடர்பானது.
 
அனுபந்தம் 3: கல்வி அதிகாரம் தொடர்பானது.
 
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களோடு, மாகாண சபைக்கென ஒதுக்கப்பட்ட ஏனைய எல்லா விடயங்களிலும் சட்டவாக்க அதிகாரத்தையும் நிறைவேற்று அதிகாரத்தையும் அது கொண்டிருக்கின்றது.
 
மாகாணங்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டியலில் பின்வரும் விடயங்கள் உள்ளன. அவை: மாகாண வீடமைப்பும் நிர்மாணமும், விவசாயமும் விவசாய சேவைகளும், கிராமிய அபிவிருத்தி, சுகாதாரம், காணி, நீர்ப்பாசனம், மாகாண எல்லைக்குள்ளான வீதிகள் பாலங்கள், மாகாணத்துக்குள்ளான போக்கு வரத்துக்கான கப்பல் சேவைகள், மாகாணத்துக்குள்ளான பொருளாதார திட்டமிடலும் அமுலாக்கலும். கல்விச்சேவையும் மேற்பார்வையும், உள்ளூர் ஆட்சி நிர்வாகம் என்பனவாகும்.
 
இந்த மாகாண சபைக்கான பட்டியலில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என மத்திய அரசினால் பிரகடனப்படுத்தப்படாத, பழமை வாய்ந்த வரலாற்று நினைவிடங்களும் உள்ளடங்கும். அண்மையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில், அமைக்கப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சி தொடர்பான நடவடிக்கைக் குழுவில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவில்லை என்பதை மனதிற்கொண்டு இதைக் குறிப்பிடுகிறேன்.
 
அத்துடன், பகிரப்பட்ட அதிகாரங்கள் தொடர்பிலான ஒரு பட்டியல் குறிப்பிடப்பட்ட விடயங்களில் மாகாண சபைகளும் மத்திய அரசும் அதிகாரங்களைப் பிரயோகிக்கலாம். இதில் மாகாண மட்டத்தில் நடைபெறும் திட்ட அமுலாக்கல் தொடர்பான மூலோபாயங்களை மேற்பார்வை செய்யவும் மதிப்பீடு செய்யவும் மாகாண சபைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கல்வியும் கல்விச்சேவையும், உயர் கல்வி, விவசாயமும் விவசாய சேவைகளும், சுகாதாரம், நீர்ப்பாசனம், சுற்றுலா போன்றவை இந்தப் படியலில் உள்ள சில முக்கிய விடயங்களாகும். மாகாண சபைக்கும் மத்திய அரசிற்கும் அதிகாரமுள்ள விடயங்களில் அதிகார வரம்புகள் பற்றிய சர்ச்சைகள் உருவாகுவது எதிர்பார்க்கப்பட வேண்டியதொன்றே. மாகாண சபை நிரலில் உள்ள விடயங்கள் தொடர்பாகவும் பகிரப்பட்ட பொது நிரலில் உள்ள விடயங்கள் தொடர்பாகவும் மாகாண சபைகள் சட்டங்களை ஆக்கவும் அவற்றின்மீது நிறைவேற்று அதிகாரங்களை அவை பிரயோகிக்கவும் முடியும்.
 
இந்த அதிகாரங்கள் பெரும்பாலும் இந்திய அரசியல் யாப்பின் 6ஆவது பிரிவின் பிரகாரம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படட அதிகாரங்களை ஒத்தவை. இந்திய மாநிலங்கள் மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதில் வினைத்திறனுடன் செயற்படுவதை அவதானிக்கலாம். குறிப்பாக, தமிழ் நாடு தற்போது முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இந்த விடயங்களில் மிகவும் வினைத்திறனுடன் இயங்குவது அவதானிக்கப்படுகிறது.
 
இங்கு எமக்கு முன்னால் உள்ள முக்கியமான கேள்வி, இலங்கையில் ஏன் மாகாணசபை முறைமை மக்களுக்கு சேவையாற்றுவதில் வெற்றிகரமாக செயற்பட முடியாமலுள்ளது? ஏன் பணத்தை வீண் விரயமாக்கும் ‘வெள்ளை யானை’ என வர்ணிக்கப்படுகின்றது? இவ்வாறு இருப்பதை நிவர்த்தி செய்வதற்கும், காத்திரமானதாக மக்களுக்காக செயற்பட வைப்பதற்கும் இந்த கட்டுமானத்தில் உள்ள தடைகளை நீக்கி, அத்தியாவசியமான திருத்தங்களை மேற்கொள்வதே சரியான அணுகு முறையாகும். எதிர்பார்த்தபடி செயற்படவில்லை என்பதற்காக, மாகாண சபை முறைமையை முழுமையாக நிராகரிப்பது என்பது, ‘குளிப்பாட்டியபின், குளிப்பாட்டிய நீருடன் குழந்தையையும் சேர்த்து வீசிவிடுவது’ போன்றதற்கு ஒப்பானதாகும்.
 
மாகாண சபைகள் பற்றி நிதானமாக மதிப்பீடு செய்து பார்த்தால், அவை முறையாகவும் முழுமையாகவும் இயங்கமால் இருப்பதற்கான பெரும்பாலான தடைகள், 13ஆவது திருத்தத்துடன் 1987ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 42ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் விளைவாகவே எழுவது தெரியவரும். இந்த சட்டத்தின்படி, மாகாண சபைகளுக்கான நிதி அதிகாரம், மாகாண பொது சேவைகளுக்கான அதிகாரம், மற்றும் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அதிகாரம் என்பன ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
13ஆவது திருத்தத்தின்படி நிறைவேற்று அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருந்தாலும் ஆளுநர் மாகாண மந்திரிகள் சபையூடாக அல்லது மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு ஊடாகவே இந்த அதிகாரத்தைப் பிரயோகிக்கலாம். அதேவேளை, முதலமைச்சரும் மந்திரிகள் சபையும் ஆளுநர் எவ்வாறு செயற்படவேண்டும் என்கிற ஆலோசனையை வழங்குவதோடு, ஆளுநர் எல்லா சந்தர்ப்பங்களிலும் அந்த ஆலோசனைக்கு அமையவே செயற்படுதலும் வேண்டும். இந்த நடைமுறைக்கு விதிவிலக்காக உள்ள விடயமும் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அரசியல் யாப்பில் குறித்துரைக்கப்பட்ட விடயங்களில் மாத்திரம் ஆளுநர் தனது தீர்மானத்திற்கு இசைவாக செயற்படலாம்.
 
இந்திய அரசியல் யாப்பிலும் இதுபோன்றே நிறைவேற்று அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருப்பினும் அங்கு வெஸ்ற்மின்ஸ்ரர் ஆட்சி முறைமையில், முதலமைச்சரின் ஆலோசனையின் படியே ஆளுநர் செயற்படுகிறார். ஆளுநர் என்பவர் பெயரளவிலான தலைமையை வகிக்கும் ஒருவராகவே செயற்படுகிறார். மாறாக, இலங்கையில் தமிழரை பெரும்பான்மையாகக்கொண்ட மாகாணங்களில் ஆளுநர்கள் பல சந்தர்ப்பங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர்கள்போல் அதிகாரங்களைப் பிரயோகிப்பதைக் காணலாம். மாகாண அரசு நடைமுறையில் நிதி அதிகாரத்தை பொறுத்தவரையில் ஆளுநரின் அதிகாரக் கட்டுப்பாடு மிகவும் துல்லியமாக தெரியும். மாகாண சபையை நடத்துவதற்கு நிதி அவசியம். நிதியை பெறுவதில் உள்ள தடையே மாகாண சபைகள் முழுமையாக செயற்பட முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. மாகாண சபை சட்டத்தினூடாகவே மாகாணத்தின் நிதிக் கட்டுப்பாட்டை ஆளுநர் பெறுகின்றார். மாகாணத்துக்கான நிதியமும் ஆளுநரின் கீழேயே உள்ளது. ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் வரி விதிப்பு, வரி விலக்கு போன்றவற்றுக்கான சட்ட மூலங்களை மாகாண சபை நிறைவேற்ற முடியாது. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட மத்திய அரசுக்கும் – மாகாணங்களுக்குமான உறவுகள் தொடர்பான பாராளுமன்ற உப குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டியதுபோன்று, அரசியல் யாப்பின் கட்டமைப்பானது, வரிவிதிப்புகளின் மூலம் நிதி திரட்டும் மாகாண அரசின் முயற்சிகளை கடுமையாக கட்டுப்படுத்துகின்றது. இதன் காரணமாகவே மாகாண சபைகள் தமது நிதித் தேவைகளுக்கு பெருமளவில் மத்திய அரசினது கொடுப்பனவுகளிலேயே தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
முக்கியமாக திருத்தி வரையப்படவேண்டிய மற்றொரு விடயம் நிர்வாக கட்டமைப்பு தொடர்பானதாகும். மாகாண சபைகளை திறனுடன் நிர்வகிப்பதற்கு நிதிகளின் மீதான கட்டுப்பாடுகள் மட்டும் போதாது. அதனுடன் நன்கு வரையறுக்கப்பட்ட திறன்களைக்கொண்ட நிர்வாக பிரிவுகளின் மீதான கட்டுப்பாடுகளும் அவசியமாகும். தற்பொழுது மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் என்போர் மத்திய அரசின் கீழேயே செயற்படுகின்றனர். இந்த உத்தியோகத்தர்கள் மாகாண சபைக்கு உட்பட்ட பிரதேசங்களிலேயே தமது நிர்வாக கடமைகளை புரிகின்றார்கள். ஆனால், இந்த உத்தியோகத்தர்கள்மீது மாகாண சபை நிர்வாகத்திற்கு எதுவித கட்டுப்பாடும் கிடையாது. உள்ளூராட்சி நிர்வாகங்கள் மாகாண சபைக்கென பகிர்ந்தளிக்கப்பட்ட நிரலின் மூலம், மாகாண சபை நிர்வாகத்தின் மேற்பார்வை, கட்டுப்பாட்டுக்குள் இருப்பினும் உள்ளூர் மட்டத்தில் அவை மத்திய அரசின் அங்கமாகவே செயற்படுகின்றன. மாகாண சபை நிர்வாகம் வினைத்திறனுடன் செயற்படுவதற்கு மாகாண அரசின் செயற்பாட்டு எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்படல் வேண்டும். நடைமுறையில் மாகாண அரசிற்கென பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் தொடர்ச்சியாக மத்திய அரசினால் அத்துமீறப்படுகின்றன. அதிகார பகிர்வு தொடர்பாக மத்திய அரசுக்கென ஒதுக்கப்படட நிரல் 2இல், ‘எல்லா விடயங்களிலுமான தேசிய கொள்கைகள்’ என்றே தலைப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான தலைப்பு, மாகாண சபைக்கென ஒதுக்கப்பட்ட விடயங்கள் உட்பட, சகல விடயங்களையும் மத்திய அரசே எடுத்துக்கொள்ள வழிவகுத்துள்ளது.
 
தேசிய கொள்கைகள் என்றால் என்ன? தேசிய தரம் என்பதை எவ்வாறு தீர்மானிப்பது? என்பதுபோன்ற விடயங்கள், அனைத்து மாகாணங்களினதும் பங்கேற்புடனான ஒரு செயல்முறையிலும், மத்திய அரசும் மாகாணங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பாராளுமன்றத்தினூடாக அவற்றைச் சட்டங்களாக்குவதன் முலமுமே சீராக்கப்படலாம். இந்த விடயம், 2006இல் நிபுணர்கள் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக கவனிக்கப்பட வேண்டிய விடயம், பகிரப்பட்ட அதிகாரங்கள் தொடர்பிலான பொது நிரலை முற்றாக நீக்கி, அந்த பட்டியலில் உள்ள விடயங்களில் மத்திய அரசுக்கு உரிய விடயங்கள் எவை, மாகாண அரசுக்கு உரியவை எவை என்பதை திட்டவட்டமாக வரையறுத்துக்கொள்ளல் வேண்டும்.
 
இவ்வாறான ஒரு சுருக்கமான கட்டுரையில் இந்த விடயங்கள் தொடர்பாக ஆழமாக அலசுவது சாத்தியமில்லை எனினும், மாகாண சபைகள் அர்த்தமுள்ள அதிகார பகிர்வுடன் செயற்படுவதற்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்களை அடையாளப்படுத்தியுள்ளேன். திருத்தப்படவேண்டிய விடயங்களில் சில பின்வருமாறு:
 
ஆளுநரின் வகிபாகம் இதுவரை மாகாண சபைகளின் செயற்பாடுகளுக்கு தடையாகவே இருந்திருக்கின்றது. எனவே, ஆளுநர் மாகாண சபைகளை செயற்படுத்துவதை தெரிவு செய்யப்படட அங்கத்தவர்களிடமே விட்டுவிட்டு, தொடர்ந்து ஒரு தலைமைத்துவ அடையாளமாக மாத்திரம் செயற்படவேண்டும், இதுவும் 2016ஆம் ஆண்டு கூட்டப்பட்ட பாராளுமன்ற உப குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஆளுநரின் அதிகாரங்களைச் சுருக்கும் வகையில் மாகாண சபை சட்டம் திருத்தப்படல் வேண்டும். மாகாண சபைகளின் வரி சேகரிக்கும் அதிகாரம் மேலும் வலுவாக்கப்படல் வேண்டும். மாகாண சபைகள் வெளி நாட்டு உதவிகளை நேரடியாக பெறுவதற்கான ஏற்பாடுகள் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் வெளிநாட்டு உதவிகளுடன் நடைபெறும் வேலைத்திட்டங்களை நிர்வகிக்கும் அதிகாரம் இருத்தல் வேண்டும்.
 
இன்னுமொரு முக்கிய விடயம், மாகாண சபைகள் மக்களுக்கான சேவைகளை ஆற்றக்கூடிய வகையில் நிர்வாகம் மீள கட்டமைக்கப்படல் வேண்டும். இவ்வாறான நிர்வாக மீள் கட்டுமானம் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் போன்ற உத்தியோகத்தர்களை மாகாண நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதுடன் அவர்கள் மத்திய அரசின் வேலைகளையும் கவனிக்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும். மாகாணங்களுக்கென பகிரப்பட்ட நிரலில் உள்ளூராட்சி நிர்வாகமும் அடங்குகின்றது. ஆனால் இந்த ஏற்பாடு, நகர அபிவிருத்தி திணைக்களம், மகாவலி அதிகாரசபை போன்ற மத்திய அரசின் நிறுவனங்களால் பலவீனப்படுத்தப்படுகின்றது. எனவே, இவ்வாறான மத்திய அரசின் நிறுவனங்கள் மாகாணங்களில் செயற்படும்போது மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் ஆகியவற்றின் சம்மத்துடனும் இணைந்து செயற்படக்கூடிய வகையிலும் ஏற்பாடுகள் கட்டாயமாக்கப்படல் வேண்டும்.
சட்டம், ஒழுங்கு தொடர்பான விடயங்கள், 9ஆவது பிரிவில் உள்ள அநுபந்தம் 1 நிரல் 1இல் குறிப்பிட்டதுபோல, மாகாண சபைகள் கோரும் பட்சத்தில் மத்திய அரசிலிருந்து மாகாண சபைக்கு மாற்றப்படலாம். இதேபோன்ற ஓர் ஏற்பாடு ஐக்கிய இராச்சியத்தில், பொலிஸ் அதிகாரம் மத்தியில் இருந்தாலும் 2010ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்து சபை அதிகாரத்தை கோரியதன் அடிப்படையில், பொலிஸ் அதிகாரம் ஹில்ஸ்பரோ ஒப்பந்தத்தின் பிரகாரம் மத்தியிலிருந்து அயர்லாந்து சபைக்கு மாற்றப்பட்டது.
 
இவ்வாறான முறையில் பொலிஸ் அதிகாரம் மாற்றப்படும் வரையில் தற்காலிக ஏற்பாடாக வடக்கு கிழக்கில் பணிக்கு அமர்த்தப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் குறித்த சத விகிதம் க. பொ. த சாதாரண தரம் தமிழில் சித்தியடைந்தவர்களை நியமிப்பதுபோன்ற ஏற்பாடுகள், இந்த மாகாணங்களில் பொலிசார் தமது கடமையை வினைத்திறனுடன் புரிவதற்கு உதவும். இதேபோன்ற ஏற்பாடுகள் மத்திய மாகாணத்திலும் செய்யப்படுவதன் மூலம் மலையக தமிழரும் பயனடைவர்.
 
இதேபோன்று, நில அதிகாரம் தொடர்பான அநுபந்தம் 2 முழுமையாக அமுல்படுத்தப்படல் வேண்டும். இது, மாகாணங்களின் நிலம் தொடர்பான பாதுகாப்புக்கு அவசியமானதாகும். ஜனாதிபதியின் கட்டளையின் பெயரில் அரச காணிகள் பாவனைக்கு சுவீகரிக்கப்படுவதும் பகிர்ந்தளிக்கப்படுவதும் மாகாண சபைகளுடன் கலந்தாலோசித்தும், அவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயுமே செய்யப்படல் வேண்டும். அநுபந்தம் 2இன் பிரகாரம் மூவின அங்கத்தவர்களையும் கொண்ட தேசிய காணி ஆணைக்குழு உடனடியாக அமைக்கப்படல் வேண்டும்.
 
தமிழ் கட்சிகள் இந்த சீர்திருத்தங்கள் தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் என்பதே எனது பரிந்துரையாகும்.
 
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மற்றைய பங்காளரென்ற வகையில், 13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படல் வேண்டும் என்றும், அதன் மூலமே தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கம் சாத்தியமாகுமென்றும், ஒப்பந்தத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் சரித்திர பூர்வமான தாயகம் என்றும் இந்திய அரசு சட்டபூர்வமாக வற்புறுத்தமுடியும்..
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கு அமைய இலங்கை அரசு காலதாமதமின்றி மாகாண சபை தேர்தல்களை நடாத்தி, சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள மாகாண சபை நிறுவனங்களை செயற்பட வைத்தல் வேண்டும். மாகாண சபைகள் இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் பயனுள்ளதாக இருப்பதுடன், ஓர் ஒழுங்கு படுத்தப்படட மக்கள் சேவையை அனைத்து மக்களுக்கும் வழங்கும் நிறுவனமாகவும் இருக்கும்.
 
ஜனாதிபதி வரவுசெலவுத்திட்ட உரையின்போது, மக்களின் தேவைகளிலும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தும்படி தமிழ் கட்சிகளுக்கு ஆலோசனை தெரிவித்திருந்ததை கவனித்திருந்தேன். இது, உண்மையான ஜனநாயகமும், மக்களின் பங்குபற்றுதலும் ஆலோசனைகளுமுடனான பொருளாதார அபிவிருத்தி தொடர்பான மூலோபாயங்களை வகுப்பதன் மூலமுமே சாத்தியமாகும். இது, மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் போன்றவற்றினூடாக அடிமட்ட மக்களின் பங்களிப்புடன் செய்யப்படுவதே அர்த்தமுள்ளதாகும். அவர்களுக்கே அவர்களது தேவைகள் நன்கு புரியும். கொழும்பிலிருந்து திட்டமிடும் நிர்வாகிகளுக்கு அடிமட்ட மக்களின் சூழ்நிலைகளோ, தேவைகளோ புரியாது.
 
எனது பார்வையில், தமிழ் பேசும் மக்களுக்கு பயனுள்ளதும் சேவை செய்யக்கூடியதுமான அதிகார பரவலாக்க அலகு மாகாண அலகே. இது, அவர்களது பாரம்பரிய பிரதேசத்தில் ஓரளவுக்கு சுயாதீனமாக செயற்பட உதவும். ஐக்கிய இராச்சியத்தில் ஒற்றை ஆட்சியின் கீழ் உள்ளது போன்ற தனித்துவமான இன அடையாளங்களைக்கொண்ட ஸ்கொட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து ஆகியன 13ஆவது திருத்தத்திற்கு ஒத்ததான சட்டவாக்க சபைகளையே கொண்டிருக்கிறன. ஸ்கொட்லாந்தில் ‘பாராளுமன்றம்’ என்றே அழைக்கிறார்கள் .
 
நான் இந்த கட்டுரையில் பரிந்துரைத்துள்ள ஆளுநரின் அதிகாரங்கள், மாகாண சபைகளுக்கான நிதி வளங்களை ஏற்படுத்துதல், நிர்வாக கட்டமைப்புகளை சீர்படுத்துதல் போன்ற குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அனைத்தும் பின்வரும் அறிக்கைகளில் பரிந்துரைக்கப்பட்டவையே. அவையாவன: 2006ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டுக்கு ஆலோசனைகளை வழங்கிய நிபுணர் குழு அறிக்கை, 2010இல் தயாரிக்கப்பட்ட நகல் அரசியலமைப்பு. 2016ஆம் ஆண்டின் மத்திய – மாகாண உறவுகள் பற்றிய உப குழு அறிக்கை என்பவையாகும்.
 
இந்த சூழ்நிலையில் தற்போது பேசப்படும் புதிய அரசியல் யாப்பானது, ஏற்கனவே ஆராயப்பட்டுள்ள பரிந்துரைகளை உள்வாங்கிக்கொள்ளலாம். இது தொடர்பாக புதிதாக ஆலோசிக்கப்படவோ, கண்டுபிடிக்கப்படவோ தேவைகள் எதுவும் இல்லை.
 
என்னைப் பொறுத்தவரையில், மாகாண சபை முறைமை, அதிலுள்ள குறைபாடுகளை நீக்குவதற்கு தேவையான திருத்தங்களை செய்யுமிடத்து, வினைத்திறனுள்ளதாகவும் வெற்றிகரமாக செயற்படக்கூடியதாகவும் இருக்கும். இவ்வாறான மாற்றங்கள் செய்யப்படுவதற்கு பாரிய அரசியல் சட்ட மாற்றங்கள் அவசியமில்லை. இம் மாற்றங்கள் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடனேயே நிறைவேற்றப்படலாம். அத்துடன், நிர்வாக மாற்றங்களை 13ஆவது திருத்தத்தை பாவித்தே, ஜனாதிபதியின் வர்த்தமானி அறிக்கைகள் மூலம் அமுல் படுத்தலாம்.
 
(கட்டுரையாளர் – 2006 நிபுணர்கள் குழு உறுப்பினரும், இக் குழுவின் பெரும்பான்மை அறிக்கையில் ஒப்பமிட்டவருமாவார் – அத்துடன், அண்மையில் கூட்டமைப்பின் சார்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள சந்திப்புக்களில் ஈடுபட்ட மூவர் அடங்கிய நிபுனர் குழுவிலும் ஒருவராவார்).
 
நன்றி சமகளம்

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18