சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கு இந்திய தீவுகளில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் களமிறங்கிய கோலி அபாரமாக விளையாடி சதமடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
மேலும், இப்போட்டியில் 32ஆவது ஓவரில் அவர் விளையாடிக்கொண்டிருந்தபோது ஒட்டுமொத்தமாக 11,363 ரன்களைக் கடந்து, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார்.
இதன் மூலம் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்துவந்த முன்னாள் வீரர் சவ்ரவ் கங்குலி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
18 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர், இப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.