கனடா இடைத்தேர்தல்கள் - பிரதமர் மார்க் கார்னி கட்சி அமோக வெற்றி

கனடா இடைத்தேர்தல்கள் - பிரதமர் மார்க் கார்னி கட்சி அமோக வெற்றி

1 புரட்டாசி 2026 செவ்வாய் 14:53 | பார்வைகள் : 125


கனடா இடைத்தேர்தல்கள் மூன்றிலும் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

திங்கட்கிழமை நடைபெற்ற மூன்று இடைத்தேர்தல்களிலும் பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி, முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

திங்கட்கிழமையன்று, ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், மூன்றிலுமே பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளார்கள்.

தேர்தலில், லிபரல் கோட்டைகளான ஒன்ராறியோவின் Beaches–East York தொகுதியையும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் North Vancouver–Capilano தொகுதியையும் லேபர் கட்சி தக்கவைத்துக்கொண்டுள்ளதுடன், பியர் பொய்லியேவின் கன்சர்வேடிவ் கட்சியிடமிருந்து கியூபெக்கின் Chicoutimi–Le Fjord தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.

விடயம் என்னவென்றால், கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த தொடர் ராஜினாமாக்களுக்குப் பிறகு, திங்கட்கிழமை இரவு நிலவரப்படி, ஆளும் லிபரல் கட்சி 170 இருக்கைகளைக் கொண்டிருந்தது.

தற்போது இந்த மூன்று தொகுதிகளில் கிடைத்துள்ள வெற்றியால் லிபரல் கட்சிக்கு 173 இருக்கைகள் கிடைத்துள்ளன. 173 இருக்கைகள் என்பது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறத் தேவையானதை விட ஒரு இடம் கூடுதலாகும்.

ஆக, இந்தப் பெரும்பான்மையுடன், லிபரல் கட்சியினர் எதிர்க்கட்சியால் கவிழ்க்கப்படும் அபாயம் இன்றி 2029 வரை ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து படிக்க