ஜார்க்கண்டில் முடிவுக்கு வருகிறது நக்சல்கள் சாம்ராஜ்யம்!
1 புரட்டாசி 2026 செவ்வாய் 08:02 | பார்வைகள் : 120
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முக்கிய நக்சல் தலைவர் உள்ளிட்ட 6 பேர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1.34 கோடி வெகுமதி வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.
ஜார்க்கண்டில் நக்சல்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை நக்சல் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் ரூ.2.2 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய நக்சல் தலைவர்களான மிசிர் பெஸ்ரா, ரவிந்திர கன்ஜூ ஆகியோர் போலீசில் சிக்கினர்.
இந்நிலையில், மற்றொரு முக்கிய நக்சல் தலைவரான ஆசிம் மொண்டலை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி வெகுமதி வழங்கப்படும் என ஜார்க்கண்ட் போலீசார் அறிவித்துள்ளனர். நக்சல் குழுவின் தலைவர்களில் இவரே கடைசி நபர் என கூறப்படுகிறது. இவருடன் மேலும் 5 பேருக்கும் ஜார்க்கண்ட் போலீசார் வெகுமதி அறிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 6 பேருக்கான வெகுமதி தொகை ரூ.1.34 கோடியாகும். இவர்கள் 6 பேரும் மேற்கு சிங்பும் பகுதியைவிட்டு வெளியேறி இருக்கக்கூடும் என போலீசார் நம்புகின்றனர்.
இதுகுறித்து டி.எஸ்.பி., தயானந்த் குமார் கூறியதாவது:
மேற்கு வங்கத்தின் புருலியா, மேற்கு மிட்னாபூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் பதுங்கி இருக்கலாம். ஒரு மாதத்துக்கும் மேலாக இவர்களின் வெளிப்படையான நடமாட்டம் எதுவும் இல்லை.
இவர்களைப் பற்றி தகவல் அளிப்பவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். எனவே, எந்த தகவல் கிடைத்தாலும் பொதுமக்கள் தயக்கமின்றி போலீசாரிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.



