போரை முடிவுக்கு கொண்டு வர! புடினிடம் மோடி வலியுறுத்தல்

போரை முடிவுக்கு கொண்டு வர! புடினிடம் மோடி வலியுறுத்தல்

1 புரட்டாசி 2026 செவ்வாய் 10:58 | பார்வைகள் : 118


மனித குலத்தின் நலனுக்காக முடிவற்ற போரில் இருந்து விலகி, போருக்கு முடிவு காணும் திசையில் நகர வேண்டும் என ரஷ்ய அதிபர் புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தான் சென்றடைந்தார். அங்கு ஆர்மீனியா பிரதமர் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

**சந்திப்பு**

ஈரான் அதிபருடனான சந்திப்பின்போது, ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கடல் மாலுமிகள் மீதான தாக்குதல் தொடர்பான இந்தியாவின் கவலையை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புடினை பிரதமர் மோடி சந்தித்தார். பிரதமர் மோடியை கட்டியணைத்தும், கைகுலுக்கியும் புடின் வரவேற்றார்.

**புடினிடம் வலியுறுத்தல்**

அதிபர் புடினிடம் பிரதமர் மோடி கூறியதாவது:

உக்ரைன் போர் விவகாரம் குறித்து இருவரும் தொடர்ந்து பேசி வருகிறோம். கடந்த முறை சந்தித்தபோது, நீங்கள் இது குறித்து விரிவாக விளக்கம் அளித்தீர்கள். அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும். எதிர்காலத்திலும் அது தொடரும்.

**அழைப்பு**

தினமும் நடைபெறும் போரால், ஒவ்வொரு நாளும் மனித குலம் பின்னுக்கு தள்ளப்படுகிறது. அமைதியை நோக்கி எடுக்கப்படும் ஒவ்வொரு அடியும் மனித குலத்திற்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. எனவே, முடிவில்லாத போரில் இருந்து விலகி, போரை முடிவுக்கு கொண்டு வரும் திசையில் நாம் நகர வேண்டும். இது மனித குலத்தின் நல்வாழ்வுக்கு இன்றியமையாதது.

அனைத்து பிரச்னைகளுக்கும் விரைவில் அமைதியான தீர்வு காண்பதே மனித குலத்தின் அழைப்பு. இதுவே இந்தியாவின் செய்தி. காந்தியின் பூமியும், புத்தரின் பூமியும் ஒரே செய்தியை பகிர்ந்து கொள்கின்றன. மனித குலத்தின் நலனுக்காக முடிவற்ற போரில் இருந்து விலகி, போரின் முடிவை நோக்கி நகர வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

**கவனம்**

இந்த சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்தியா - ரஷ்யா இடையிலான சிறப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விரிவான உத்திசார் கூட்டணி உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதித்தோம். சமீப நாட்களில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியா - ரஷ்யா இடையிலான நட்புறவில் எரிசக்தி, புதுமை, விண்வெளி, உரம் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகள் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

**ஒரே காரில் பயணம்**

இந்த சந்திப்பு முடிந்த பிறகு, கிர்கிஸ்தானின் பிஸ்கெக் நகரில் தொடங்கிய உலக நோமாட் விளையாட்டு போட்டிகளின் துவக்க விழாவுக்கு பிரதமர் மோடியும், அதிபர் புடினும் ஒரே காரில் பயணம் செய்தனர்.
 

தொடர்ந்து படிக்க