முதல்வர் விஜய் பெயரில் மத்திய பிரதேசத்தில் பண மோசடி!

முதல்வர் விஜய் பெயரில் மத்திய பிரதேசத்தில் பண மோசடி!

1 புரட்டாசி 2026 செவ்வாய் 05:14 | பார்வைகள் : 102


முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் அறக்கட்டளை நடத்தி, நிதியுதவி மற்றும் தொழில் தொடங்க கடன் வழங்குவதாகக் கூறி, 'ஆன்லைன்' மூலம் பணமோசடி செய்யப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச போலீசில் ஆறு புகார்கள் பதிவாகியுள்ளன.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் ஜோசப் விஜய்க்கு சொந்தமான அறக்கட்டளை நிர்வாகிகள் எனக்கூறி, மோசடி கும்பல் ஒன்று 'ஆன்லைன்' மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டுள்ளது. நிதியுதவி வழங்குவதாகவும், சிறுதொழில் தொடங்க கடன் பெற்றுத் தருவதாகவும் அந்த கும்பல் ஆசை வார்த்தை கூறியுள்ளது.

இதையடுத்து, பதிவு கட்டணம், சரிபார்ப்பு கட்டணம், செயலாக்க கட்டணம் என பல்வேறு காரணங்களை கூறி, ஒவ்வொருவரிடமும் ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அந்த கும்பல் வசூலித்துள்ளது. ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் நிதியுதவியோ, கடனோ வழங்காமல் பொதுமக்களை ஏமாற்றியுள்ளது.

விஜய் பெயரில் மோசடி நடந்துள்ளதாக இந்தூர் போலீசில் கடந்த மாதம் ஆறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் ராஜேஷ் தன்டோடியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்த அவர், இதுபோன்ற மோசடிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படிக்க