டிஎன்ஏ பரிசோதனை: நேபாளம் விரைந்த இந்திய தடயவியல் குழு
31 ஆவணி 2026 திங்கள் 07:34 | பார்வைகள் : 155
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை டி.என்.ஏ., பரிசோதனை மூலம் அடையாளம் காண்பதற்காக, இந்திய தடயவியல் குழு நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 750ஐ கடந்துள்ளது. மேலும், 2,419 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட உடல்கள், சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பெரும்பாலான உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடல்களை டி.என்.ஏ., பரிசோதனை மூலம் அடையாளம் காண தேவையான உதவிகளை வழங்குமாறு நேபாள அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது.
இதன் அடிப்படையில், இந்தியா சார்பில் நேபாளத்திற்கு அனுப்பப்பட்ட 4வது கட்ட நிவாரணப் பொருட்களுடன், தடயவியல் குழுவையும் மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
இந்த தடயவியல் குழுவினர், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை டி.என்.ஏ., பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணியில் ஈடுபட உள்ளனர்.
இதற்கிடையே, நேபாளத்திற்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவாஸ்தவா, காத்மாண்டுவில் இந்திய தடயவியல் குழுவினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.



