மழையில் கண்ணாடி போல மாறும் ஒரு அதிசய பூ!
30 ஆவணி 2026 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 189
ஜப்பானின் குளிர்ந்த மலைக் காடுகளில் ஒரு வித்தியாசமான பூ பூக்கிறது. இதன் பெயர் Diphylleia grayi. இதை எலும்புக்கூடு பூ என்றும் சொல்வார்கள்.
சாதாரண நாட்களில் இந்த பூவின் இதழ்கள் பால் போல வெண்மையாக இருக்கும். ஆனால் தொடர்ந்து மழை பெய்து, இதழ்கள் நன்றாக நனையும் போது நடக்கும் அதிசயத்தைப் பாருங்கள். அதன் இதழ்கள் கிட்டத்தட்ட கண்ணாடி போல மாறி, உள்ளே இருக்கும் நரம்புகள் எல்லாம் தெரியும் அளவுக்கு ஒளி ஊடுருவும்.
இது ஏதோ மாயாஜாலம் இல்லை. இதற்குப் பின்னால் ஒரு அழகான அறிவியல் இருக்கிறது.
இந்த பூவின் இதழ்களுக்குள் மிகச்சிறிய காற்று இடைவெளிகள் இருக்கின்றன. காய்ந்த நிலையில் அந்த காற்று இடைவெளிகள் வெளிச்சத்தை சிதறடிப்பதால் பூ வெள்ளையாகத் தெரிகிறது. மழைநீர் அந்த இடைவெளிகளுக்குள் நிரம்பும் போது, வெளிச்சம் சிதறுவது குறைந்து நேராக ஊடுருவிச் செல்கிறது.
அதனால் தான் இதழ்கள் கண்ணாடி போல மாறுகிறது.
இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், பூ காய்ந்ததும் மீண்டும் பழையபடி வெள்ளை நிறத்திற்கே திரும்பிவிடும். இது உடனே நடக்காது, தொடர்ந்து மெல்லிய மழை பெய்யும் போது தான் இந்த மாற்றம் நிகழும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஜப்பானில் இதை Sankayō என்று அழைக்கிறார்கள். இது வடக்கு மற்றும் மத்திய ஜப்பான் மற்றும் சகாலின் பகுதிகளில் உள்ள ஈரமான காடுகளில் தான் வளர்கிறது.



