நேபாள வெள்ளம்: 90 தமிழர்களை காணவில்லை! அமைச்சர் ராஜ்மோகன்
30 ஆவணி 2026 ஞாயிறு 08:40 | பார்வைகள் : 190
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 400 பேர் சிக்கியுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 103 என அறிவிக்கப்பட்டு வந்தது. அவர்களில் பலரது நிலைமை குறித்த தகவல் தெரியாத நிலையில், மீட்கப்பட்ட 21 பேர் சென்னை திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்று சிக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 400 வரை இருக்கலாம் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
சென்னை மற்றும் கும்பகோணத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் ஏஜென்சிகள் மூலம் முன்பதிவு செய்து 103 பேர் நேபாளம் சென்றதாக முதலில் தெரியவந்தது. இதில், கும்பகோணம் ஏஜென்சி மூலம் சென்ற 21 பேர் மட்டுமே பத்திரமாக சென்னை திரும்பியுள்ளனர்.
மேலும், தமிழகத்தில் இருந்து ரயில் மூலம் நேபாளம் சென்ற 140 பேர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களைத் தவிர, சிறு சிறு குழுக்களாகவும் பலர் நேபாளம் சென்றுள்ளனர். அவர்களைக் கண்டறியும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் இருந்து சுமார் 400 பேர் வரை நேபாளம் சென்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 140 பேர் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ளது. 21 பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். மேலும், 90 பேரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அவர்களைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.



