நேபாள வெள்ளத்தில் சிக்கிய சிட்னித் தமிழ்க் குடும்பம்! 39 அவுஸ்திரேலியர்களை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய சிட்னித் தமிழ்க் குடும்பம்! 39 அவுஸ்திரேலியர்களை தேடும் பணி தீவிரம்

29 ஆவணி 2026 சனி 12:03 | பார்வைகள் : 1859


கைலாஷ் மலை யாத்திரை சென்ற அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த தமிழ்ப் பொறியியலாளர் குடும்பத்தினர் உட்பட 39 அவுஸ்திரேலியர்கள், நேபாள - திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமாகியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த பிரபல தமிழ்ப் பொறியியலாளர் சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி ஷைலஜா (42), மகன்கள் அஷ்வின் (14) மற்றும் ஆருஷ் (11) ஆகியோர் ஆன்மீகப் பயணமாக கைலாஷ் மலைக்குச் சென்றுள்ளனர்.

'ஹிமாலயன் கிளேசியர் அட்வென்ச்சர்ஸ்' அமைப்பின் மூலம் சுற்றுலாப் பயணிகளாகச் சென்ற இவர்கள், திபெத் - நேபாள எல்லைக்கு அருகிலுள்ள குடியேற்றச் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்ல தயாராக இருந்தபோதுதான் இந்தத் பேரிடர் நிகழ்ந்துள்ளது.

காலை உணவுக்குப் பிறகு குடும்பத்தினருடன் எந்தவித தொடர்பும் கிடைக்கவில்லை என உறவினர்கள் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கோர வெள்ளப்பெருக்கால் அப்பகுதியிலுள்ள கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டு மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேபாள எல்லைப் பகுதியில் குறைந்தது 39 அவுஸ்திரேலியர்கள் மாயமாகியுள்ளதை அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களைக் கண்டறிய அவசர மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணாமல் போன தமிழ்க் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என உலகத் தமிழர்களும், அவுஸ்திரேலியத் தமிழ் சமூகத்தினரும் மனமுருகிப் பிரார்த்தித்து வருகின்றனர்.

தொடர்ந்து படிக்க