இலங்கையில் பாரிய போராட்டத்திற்கு தயாராகும் அரச ஊழியர்கள்!

29 ஐப்பசி 2023 ஞாயிறு 15:35 | பார்வைகள் : 7319
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி நாளை (30) நண்பகல் 12 மணிக்கு இந்தப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க கூட்டின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி குறிப்பிட்டார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி, அலுவலக சேவைகள் மற்றும் மாகாண அரசாங்க சேவைகள் என பல சேவைகள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சந்தன சூரியஆராச்சி குறிப்பிட்டார்.
இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அடுத்த வாரத்திற்குள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.