பரிஸ் : பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர்! - தொடருந்து நிலையத்தில் பரபரப்பு!

31 ஐப்பசி 2023 செவ்வாய் 10:09 | பார்வைகள் : 10799
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள மெற்றோ நிலையம் ஒன்றில் வைத்து பெண் ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.
இன்று, செவ்வாய்க்கிழமை காலை இச்சம்பவம் Bibliothèque François-Miterrand மெற்றோ நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இஸ்லாமிய பெண் ஒருவர் காவல்துறையினருடன் ஆக்ரோஷமாக நடந்துகொண்டுள்ளார். இஸ்லாமிய கலாச்சார உடையான பர்தா அணிந்த குறித்த பெண்ணை காவல்துறையினர் சோதனையிட முற்பட்டபோது, அவர் அதற்கு ஒத்துழைப்பு வழங்காமல், காவல்துறையினரை தாக்க முற்பட்டதாக அறிய முடிகிறது.
அதையடுத்து, காவல்துறையினர் குறித்த பெண்ணை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இத்துப்பாக்கிச்சூட்டில், வயிற்றுப்பகுதியில் காயமடைந்து மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
இச்சம்பவத்தை அடுத்து தொடருந்து நிலையம் மூடப்பட்டது. பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. தொடருந்து நிலையம் முழுமையாக சோதனையிடப்பட்டு வருகிறது.
***
சற்று முன்னர் கிடைத்த தகவல்களின் படி, குறித்த மெற்றோ நிலையத்தில் எவ்வித வெடிபொருட்களும் கைப்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.