Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஆரம்பம் முதலே இந்தியாவை சந்தேகித்த விடுதலைப் புலிகள்!

ஆரம்பம் முதலே இந்தியாவை சந்தேகித்த விடுதலைப் புலிகள்!

7 மாசி 2013 வியாழன் 12:16 | பார்வைகள் : 16439


தலைவர் பிரபாகரன் ஒரு தீர்க்கதரிசி: ஈழ மண்ணில் இந்தியப் படைகளால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களின் மிக மோசமான அத்தியாயங்கள் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னதாக, இந்தியா தொடர்பாக அக்காலத்தில் விடுதலைப் புலிகள் கொண்டிருந்த நிலைப்பாடு பற்றி ஓரளவு மேலோட்டமாகப் பார்த்துவிடுவது நல்லது என்றே நினைக்கின்றேன்.

இந்தியாவின் விடயத்தில் ஆரம்பம் முதல் புலிகள் ஓரளவு எச்சரிக்கை உணர்வுடனேயே இருந்து வந்துள்ளார்கள். குறிப்பாக புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், இந்தியா பற்றி அதிக எச்சரிக்கையை தன்னகத்தே கொண்டுள்ளவராகவே இருந்து வந்துள்ளார் என்பதற்கு, அந்நாட்களில் வெளியான பல செய்திகள் சாட்சி பகர்வனவாக இருக்கின்றன.

தனது பிராந்திய மேலாதிக்க நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தியா ஈழத்தமிழ் அமைப்புக்களை வளர்க்க முனைந்ததே தவிர, ஈழத்தமிழர்களில் ஒன்றும் அக்கறை கொண்டு அது எந்தக் காரித்தையும் மேற்கொண்டிருக்கவில்லை.

இதனை புலிகள் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள். இந்தியாவின் இந்த நோக்கத்தை இயன்றவரை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே புலிகளும் எண்ணியிருந்தார்கள்.

இந்திய அரசியலை, அந்த அரசியலில் உள்ள ஓட்டைகளை, தமது இன விடுதலைப் போருக்கான ஒரு தளமாக முடியுமான அளவு பயன்படுத்திக் கொள்ளும் திட்டமே புலிகளின் தலைமையிடம் இருந்து வந்துள்ளது.

ஈழ விடுதலைக்காக போராட முன்வந்த அனைத்து இயக்கங்களும் இந்திய அரசினால் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டன என்பதில் எந்வித மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை. ஆனால், புலிகளைப் பொறுத்தவரையில், ஆரம்பம் முதலே அவர்கள் இந்தியாவின் விடயத்தில் அதிக எச்சரிக்கை உணர்வுகளைக் கொண்டிருந்தார்கள்.

இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையின் உண்மையான நோக்கம் பற்றி அவர்கள் அதிகம் சிந்தித்தார்கள். இந்தியாவின் ஒவ்வொரு அசைவினதும் உண்மையான காரணம் பற்றிய தெளிவினை அவர்கள் நன்றாகவே பெற்றிருந்தார்கள்.

மற்றைய இயக்கங்கள் போன்று முற்று முழுதாக இந்தியாவை மட்டுமே நம்பி புலிகள் ஒருபோதும் தமது போராட்டத்தை நடாத்தவில்லை. மற்றைய இயக்கங்கள் அனைத்தும் காலத்தால் அழிக்கப்பட்டுவிட, புலிகள் அமைப்பு மட்டும் காலத்தையும் வென்று, இன்றும் நிலைத்து நிற்பதற்கு இதனைத்தான் பிரதான காரணம் என்று நான் கூறுவேன்.

இன்று உலகத் தலைவர்களால் வியப்புடன் நோக்கப்படும் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள், அக்காலத்திலேயே இந்தியாவிடம் ஏமாறாத ஒரு மனிதனாக, எதிர்காலத்தை கணிப்பிடும் ஒரு அறிஞராக இருந்து வந்திருக்கின்றார் என்பதற்கு அக்காலத்தில் வெளியான பல செய்திகள் சான்று பகர்கின்றன.

கதறி அழுத கிட்டு:

80களின் ஆரம்பத்தில், இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் வைத்து புலிகளின் ஒரு தொகுதி போராளிகளுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சியை வழங்கியது. பொன்னம்மான் (குகன்) என்பவர் தலைமையில், விடுதலைப்  புலிகள் அமைப்பின் ஒருதொகுதிப் போராளிகள் பயிற்சிக்காக சென்றிருந்தார்கள்.

புலிகளின் முன்னாள் யாழ் தளபதி கிட்டு அவர்களும் பயிற்சிக்காகச் சென்றிருந்தார். மிகவும் குளிர் சூழ்ந்த இடத்தில் நடைபெற்ற பயிற்சிகளின் போது, போராளிகள் அதிக கஷ்டங்களை அனுபவித்தார்கள்.

பயிற்சி நெறிகளுக்கு இந்தியப் படையைச் சேர்ந்த கேணல் ஒருவர் பொறுப்பாக இருந்தார். அவர் இலங்கைத் தமிழ் மக்கள் பற்றி அதிக அனுதாபம் கொண்டவராக இருந்ததுடன், பயிற்சி பெறச் சென்ற போராளிகள் விடயத்திலும் அதிக அக்கறையை வெளிப்படுத்தினார். புலிகளுடன் அதிக பரிவுடனும், பாசத்துடனும் அவர் நடந்துகொண்டார்.

பயிற்சிகள் முடிவடைந்து விடைபெறும் நேரம். அந்த இந்திய கேணலின் கண்கள் கலங்கிவிட்டன. போராளிகளும் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் கிட்டு ஓடிச் சென்று அந்த இந்திய கேணலின் மடியில் புரண்டு விம்மி விம்மி அழத்தொடங்கிவிட்டார். பயிற்சியை முடித்துக் கொண்ட புலிகள் கண்ணீரோடு விடைபெற்று சென்னையை வந்தடைந்தார்கள்.

சென்னை அடையாற்றில் தங்கியிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் தமது பயிற்சி அனுபவங்களை போராளிகள் பகிர்ந்து கொண்டார்கள். இடைநடுவே, கிட்டு இந்தியப்படை கேணலின் மடியில் புரண்டு விம்மியழுத கதையையும் போராளிகள் பிரபாகரனிடம் கூறிவைத்தார்கள்.

அதனை கேட்டு சிறிது நேரம் மௌனம் சாதித்த பிரபாகரன் இவ்வாறு தெரிவித்தார்:

“நாங்கள் ஒரு நோக்கத்திற்காகப் பயிற்சி எடுக்கப் போனோம். ஆனால் இந்தியாவோ வேறொரு நோக்கத்திற்காக எங்களுக்குப் பயிற்சி தந்திருக்கின்றார்கள்.

எங்களுடைய நோக்கத்திற்கு எதிராக என்றோ ஒரு நாள் இந்திய இராணுவம் திரும்பினால், இதே கேணலுக்கு எதிராக சண்டை பிடிக்கும்படி கிட்டுவுக்கு நான் உத்தரவிடுவேன். கிட்டுவும் சண்டை பிடித்தேயாகவேண்டும்.”

கிட்டுவும் மற்றைய போராளிகளும் திகைத்துப் போனார்கள். முழுத் தமிழ் இனமும் இந்தியாவை மட்டுமே நம்பி இருந்த அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக பிரபாகரன் தெரிவித்த கருத்துக்கள் அவர்களுக்கு அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தன.

புலிகளின் தலைவர் ஆரம்பம் முதலே ஒரு நிதர்சனத் தலைவராக இருந்து வந்துள்ளார் என்பதுடன், அவர் இந்தியாவின் விடயத்தில் மிகவும் அவதானமாகவே சிந்தித்து வந்துள்ளார் என்பதற்கு மேற்குறிப்பிட்ட சம்பவம் சான்று பகர்கின்றது.

வெளிநாடுகளிடம் இருந்து ஆயுதங்கள்:


இந்தியா பற்றி புலிகளின் தலைவர் கொண்டிருந்த எச்சரிக்கை உணர்வுக்கு,  அக்காலத்தில் நடந்ததாகக் கூறப்படுகின்ற மற்றொரு நிகழ்வையும் உதாரணமாகக் கூற முடியும். இந்தியா ஈழத் தமிழ் போராளிகளுக்கு பயிற்சியை வழங்கிய பின்னர் ஆயுதங்களையும் கொடுக்க முன்வந்தது.

இந்தியா தமக்கு ஆயுதங்களைத் தர முன்வந்த செய்தியை அறிந்த போராளிகளுக்கும், இயக்கத் தலைவர்களுக்கும் அளவு கடந்த மகிழ்ச்சி. தமது விடுதலை நோக்கிய பாதையில் இனிமேல் துணிகரமாக பயணிக்கலாம் என்ற எண்ணம் ஒவ்வொரு போராட்ட அமைப்புக்கள் மத்தியிலும் காணப்பட்டது.

புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் மத்தியிலும் இந்த மகிழ்ச்சி காணப்படவே செய்தது.

இந்தியா தமக்கு ஆயுதம் வழங்கப் போகின்றது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை பகிர்ந்து கொள்வதற்காக புலிகளின் முக்கியஸ்தர்கள் பிரபாகரனைச் சந்திக்கச் சென்றார்கள். கிட்டுவும் அவர்களுடன் சென்றிருந்தார். மிகவும் குதூகலத்துடன் சென்ற அவர்களிடம் தலைவர் பிரபாகரன் தெரிவித்த கருத்து, அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“நாங்கள் உடனடியாக வெளியில் இருந்து ஆயுதம் வாங்கவேண்டும்” என்று பிரபாகரன் அவர்களிடம் தெரிவித்தார்.

பிரபாகரனின் கருத்தைக் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி. இந்தியாதான் ஆயுதம் தரப் போகின்றதே.... பின்னர் எதற்காக வெளியில் இருந்து ஆயுதம் வாங்கவேண்டும்?  அவர்களுக்கு எதுவுமே புரியவில்லை.

அவர்களுடைய மனங்களில் ஓடிய எண்ணங்களைப் புரிந்துகொண்ட பிரபாகரன் இவ்வாறு தெரிவித்தார்:

“இந்தியா ஆயுதம் தருகின்றது என்றால், எம்மை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கத்தில்தான் அது எமக்கு ஆயுதங்களைத் தருகின்றது. நாம் எமது சொந்தக் காலில் நிற்க வேண்டுமானால், சொந்தமாகவும் நாம் ஆயுதங்களைத் தேடிக்கொள்ளவேண்டும்” என்று தெரிவித்தார்.

அப்பொழுது, பிரபாகரன் அவர்களுக்கு ஒரு புதிராகவே தென்பட்டார். பிரபாகரன் அவர்களின் உள்நோக்கத்தின் ஆழத்தை புரிந்துகொள்ள அவர்களுக்கு பல வருடங்கள் பிடித்தன. இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு, புலிகள் ஒப்படைக்க வேண்டிய ஆயுத விபரங்கள் இந்தியப் படையினரால் வெளியிடப்பட்ட போதுதான், தமது தலைவனின் தீர்க்கதரிசனத்தின் பரிமானத்தை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.

இந்தியப்படைகள் புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பலவந்தமாக களைய ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கிடையேயும் பாரிய யுத்தம் மூண்ட போதுதான், புலிகள் வெளியில் இருந்தும் ஆயுதங்களைத் தருவித்துக்கொண்டதன் அனுகூலத்தை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

ஒரு தலைவன், எதிர்காலம் பற்றி எந்த அளவிற்கு சிந்திக்கவேண்டும், எப்படியான தொலைநோக்குகளையெல்லாம் கொண்டிருக்கவேண்டும் என்பதற்கு, புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு சிறந்த உதாரணம்.

இந்தியாவின் ஏஜண்டுகள்:

இந்தியாவின் உள்நோக்கத்தை ஆரம்பம் முதலே புலிகள் அறிந்து செயற்பட்டிருந்தார்கள் என்பதற்கு பல உதாரணங்களை கூறமுடியும்.

1986ம் ஆண்டு மே மதம் 7ம் திகதி புலிகளுக்கும், டெலோ அமைப்பினருக்கும் இடையில் பாரிய மோதல் வெடித்தது. டெலோ அமைப்பிற்கு எதிராக புலிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், அந்த அமைப்பையும் தடைசெய்தார்கள்.

டெலோ அமைப்பின் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் புலிகளால் கொலை செய்யப்பட்டார். நுற்றுக்கணக்கான டெலோ உறுப்பினர்கள் புலிகளால் கொல்லப்பட்டும், கைதுசெய்யப்பட்டும் இருந்தார்கள்.

டெலோ அமைப்பிற்கு எதிராக புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களுக்கும், டெலோ அமைப்பை புலிகள் தடைசெய்ததற்கும், அந்த அமைப்பிற்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களை புலிகள் முன்வைத்திருந்தார்கள்.

1) டெலோ உறுப்பினர்கள் மக்களைத் துன்புறுத்தி, கொள்ளையிட்ட குற்றவாளிகள்.

2) டெலோ - இந்திய ஏகாதிபத்தியத்தின் “ஏஜண்டாக” செயற்பட்டுக்கொண்டு இருந்தது.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் பாதையை திசை திருப்புவதில் இந்தியா காண்பித்து வந்த அக்கறையை ஆரம்பத்திலேயே புலிகள் அறிந்துவைத்திருந்தார்கள். இந்தியா தனது திட்டத்திற்கு டெலோ அமைப்பை பயன்படுத்த ஆரம்பித்ததையும் புலிகள் அறிந்துவைத்திருந்தார்கள்.

தமிழீழத்திற்கு எதிரான இந்தியாவின் எந்தவொரு திட்டத்தையும் தவிடுபொடியாக்கும் மாற்றுத் திட்டங்களை வகுப்பதில் புலிகள் ஆரம்பம் முதலே மிகவும் எச்சரிக்கையுடன் செயலாற்றி வந்துள்ளார்கள். டெலோ அமைப்பிற்கு எதிராக 1986ம் ஆண்டு மே மாதத்திலேயே புலிகள் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

இந்த அடிப்படையில்தான், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும் அதனைத் தொடர்ந்து ஈழமண்ணில் இந்தியா புலிகளுக்கு எதிராக மேற்கொள்ள ஆரம்பித்திருந்த ஆயுதக் களைவையும் புலிகள் அணுகினார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்