Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை மறந்து விட்டதா அமெரிக்கா?

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை மறந்து விட்டதா அமெரிக்கா?

12 பங்குனி 2012 திங்கள் 00:01 | பார்வைகள் : 16911


வருது வருது என்று மிரட்டிக் கொண்டிருந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வரைபை, ஐ.நா மனித உமைகள் பேரவையில் ஒருவழியாக கடந்த புதன்கிழமை அமெரிக்கா சமர்ப்பித்து விட்டது.

இந்தத் தீர்மான வரைபு தமிழர் தரப்பில் சிலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பதை, வெளியாகும் கருத்துகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

சர்வதேச போர்க்குற்ற விசாரணையை அமெரிக்கா கைவிட்டு விட்டதே என்ற ஆதங்கம் பலரிடம் இருந்து வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நகர்வுகளையும் அறிக்கைகள் மற்றும் கூற்றுகளையும் உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமான விடயமாக இருக்காது. சர்வதேச போர்க்குற்ற விசாரணையை அமெரிக்கா முன்னர் அடிக்கடி நினைவுபடுத்தி வந்தபோதும் அதன் தெளிவான நிலைப்பாடு நம்பகமான விசாரணைப் பொறிமுறை ஒன்று பற்றியதாகவே இருந்தது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னர், போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறும் வகையில் அமையவில்லை என்று குற்றம்சாட்டிய அமெரிக்கா, சர்வதேச விசாரணைப் பொறிமுறை பற்றி வாய் திறக்கவில்லை.

நம்பகமான புதிய விசாரணையை நடத்த வேண்டும் என்றே அது கூறியது.

அதைவிட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அது கூறியது.

இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துமா என்ற சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்காவுக்கு, நம்பகமான விசாரணையை இலங்கை நடத்தாது என்பது தெரியாமல் இருக்கப் போவதில்லை.

ஆனாலும் அதைப் பற்றி அமெரிக்கா இப்போது எதுவும் சொல்லவில்லை.

ஏனென்றால், முதற்கட்டமாக இலங்கைக்கு இத்தகைய தீர்மானம் ஒன்றின் மூலம் கடிவாளம் போட்டு விடப் போகிறது.

அதன் பின்னரும், இலங்கையை தனது வழிக்கு கொண்டு வர முடியாது போனால் அடுத்த தீர்மானத்தை சுலபமாகவே அமெரிக்கா தயார் செய்யும்.

இதற்காகவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றும் பொறிமுறை ஒன்றுக்குள் இலங்கையை சிக்க வைக்க அமெரிக்கா முனைந்துள்ளது.

அமெரிக்காவின் தீர்மான வரைபில் கூறப்பட்டுள்ளதும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பேரவையில் நிகழ்த்திய தொடக்கவுரையில் கூறியுள்ளதும் ஒரே விடயத்தைத் தான்.

நவநீதம்பிள்ளை தனது தொடக்க உரையில், இலங்கை அரசாங்கம், நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் தமது அலுவலகத்துடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

அதையே தான் அமெரிக்காவின் தீர்மானம் கூறுகிறது.

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்துமாறும், அதற்காக வழங்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை உதவிகள் குறித்த அறிக்கையை பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்தத் தீர்மானம் கோருகிறது.

22ஆவது கூட்டத்தொடர் என்பது இலங்கைக்கு மறைமுகமாக வழங்கப்பட்டுள்ள ஒரு வருட கால அவகாசமாகும்.

நேரடியாக இந்தக் காலக்கெடுவை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கவில்லை.

இலங்கையே ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்மானம் கோரவும் இல்லை.

எல்லாவற்றையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகமே மேற்கொள்ளப் போகிறது.

ஒருவகையில் இலங்கை விவகாரத்தைக் கையாள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு நவநீதம்பிள்ளைக்கு கொடுக்கப்படும் மறைமுகமான அதிகாரம் என்று கூட இதனைச் சொல்லலாம். மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஜெனீவாவில் வருடத்தில் மூன்று தடவைகள் நடைபெறும்.

மார்ச், ஜுன்„ செப்ரெம்பர் மாதங்களில் நடைபெறும் வழக்கமான கூட்டத்தொடர் நடக்கும்.

இப்போது நடந்து கொண்டிருப்பது 19 ஆவது கூட்டத்தொடர்.

22ஆவது கூட்டத்தொடர் என்பது, 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கப் போகும், அடுத்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர்.

இந்தவகையில், இந்தக் கூட்டத்தொடரில் தீர்மானத்தை நிறைவேற்றி இலங்கைக்கு ஒருவருட கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

இந்த ஒருவருட கால அவகாசத்துக்குள் இலங்கை என்ன செய்தது என்றெல்லாம், அமெரிக்காவோ அல்லது சர்வதேச சமூகமோ கேள்வி எழுப்பப் போவதில்லை.

அதற்குப் பதிலளிக்கப் போவது நவநீதம்பிள்øளயின் அலுவலகம் தான்.

அந்த அறிக்கை இலங்கைக்கு சாதகமாக அமையாது போனால், அடுத்த கட்டமாக அமெரிக்காவும், ஏனைய மேற்கு நாடுகளும் இன்னொரு தீர்மானத்துக்குத் தயாராகி விடும்.

இந்தத் தீர்மானம் இலங்கைக்கு ஒரு வருட கால அவகாசத்தை வழங்கப் போகிறது.

அதற்குள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும்.

இது அரசுக்கு ஒரு இக்கட்டான நிலை.

மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துடன் இணைந்து செயற்படுவது இலங்கை அரசுக்கு கடுமையானதொன்றாகவே இருக்கும்.

இதற்கு அரசாங்கம் இலகுவில் ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை.

அப்படி ஒப்புக்கொண்டாலும் சிக்கல் தான் அதிகமாக ஏற்படும்.

ஏனென்றõல், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மீதும் அவரது அலுவலகம் மீதும் அரசாங்கம் கடும் சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அங்கு பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகள் மேற்குலகை சார்ந்தவர்கள்.

இது இலங்கைக்கு சாதகமாக இருக்காது.

ரஸ்யா, சீனா சார்ந்த அதிகாரிகளானால் சமாளித்து விடலாம்.

மேற்குலகைச் சார்ந்த அதிகாரிகளை அவ்வளவு இலகுவில் சமாளிப்பது சிரமம்.

இதனால் தான், மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் நிதி மற்றும் ஆளணி நிர்வாகம் தொடர்பான தீர்மானம் ஒன்றை பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகளுடன் இணைந்து கொண்டு வரும் முயற்சிகளை இலங்கை மேற்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், இப்போது அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த சர்வதேச விசாரணையை உருவாக்கப் போவதில்லை என்பது உறுதி.

இதற்காக மேற்குலகின் மீது குற்றம் சுமத்தவும் முடியாது. அமெரிக்கா ஏமாற்றி விட்டது என்று புலம்பவும் கூடாது. மிகையான எதிர்பார்ப்பு எப்போதும், எங்கேயும் தவறான விளைவுகளையே தரும்.

மேற்குலகம் சார்ந்த விடயத்திலும் அப்படித் தான்.

மூன்று ஆண்டுகள் பொறுத்திருந்து பார்த்து விட்டது சர்வதேச சமூகம் என்று மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொது மக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான கீழ்நிலைச் செயலர் மரியா ஒட்டேரோ கூறியிருந்தார்.

இலங்கைக்கான காலம் நழுவிக் கொண்டிருக்கிறது என்ற அவரது கருத்தும் ஒரு எச்சரிக்கை தான்.

அமெரிக்காவின் தீர்மான வரைபில், போர்க் குற்றச்சாட்டுகளுக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பதிலளிக்கப்படவில்லை என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, அடுத்த ஓர் ஆண்டுகால அவகாசம் இலங்கைக்குக் கிடைக்கப் போகிறது.

அந்தக் கால அவகாசத்தையும் அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளாமல் நழுவ விடுமானால், இனிமேல் பொறுப்பதற்கு நேரம் இல்லை என்ற நிலை அமெரிக்காவுக்கும், அதைச் சார்ந்த நாடுகளுக்கும் ஏற்படும்.

அதன் பின்னர் தான் சர்வதேச விசாரணைப் பொறிமுறை பற்றிய விவாதங்கள் தொடங்கும்.

இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களுக்கு நியாயமான முறையில் பொறுப்புக் கூறப் போவதில்லை.

அவ்வாறு செய்வதாயின் கடந்த மூன்றாண்டுகளை அது வீணே கழித்திருக்காது.

எனவே, போர்க்குற்றச்சாட்டுகளும், அது குறித்த சர்வதேச விசாரணை பற்றிய அழுத்தங்களும் இத்தோடு ஓய்ந்து விடப் போவதில்லை.

இதை ஒரு தொடக்கமாகவே கருத வேண்டும். ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்பது கொக்குக்கே உரிய தந்திரம் மட்டுமல்ல தமிழருக்கானதும் தான்.

வர்த்தக‌ விளம்பரங்கள்