Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

வடக்கு படைச்செறிவு குறித்த உண்மையும் பொய்களும்

வடக்கு படைச்செறிவு குறித்த உண்மையும் பொய்களும்

3 ஆனி 2012 ஞாயிறு 20:43 | பார்வைகள் : 16472


வடக்கில் படைச்செறிவைக் குறைக்கும் விவகாரம் பலத்தை சர்ச்சையாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட இந்திய நாடாளுமன்றக் குழுவின் வருகையோடு தொடங்கிய இந்தச் சர்ச்சை இப்போது மேலும் தீவிரமடைந்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து வடக்கே செல்லும் இராஜதந்திரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பொது அமைப்புகளும் வடக்கின் படைச்செறிவைச் சுட்டிக்காட்டுவதும், இராணுவத் தலையீடுகளற்ற இயல்பு வாழ்வு உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதும் வழக்கமானது தான்.

போருக்குப் பின்னர் வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது, அங்கு ஜனநாயக சூழல் நிலவுகிறது, சுதந்திரக் காற்றை மக்கள் சுவாசிக்கிறார்கள் என்று அரசாங்கம் செய்து வந்த பிரசாரங்கள் அனைத்தையுமே இந்தப் படைச்செறிவு விவகாரம் தூக்கித் தின்று விட்டது.

சர்வதேச சமூகம் வடக்கில் வழக்கத்துக்கு மாறான வகையில்  படைச்செறிவு அதிகம் என்பதை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. ஜெனீவா தீர்மானத்தின் போதும் இது கூறப்பட்டது.
அமெரிக்கா தொடர்ந்தும் இதையே கூறிவருகிறது. இந்தியா, பிரித்தானியாவும் அதையே சொல்கின்றன..

எந்தப் பக்கம் திரும்பினாலும், வடக்கில் படைக்குறைப்பை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த மே 19ஆம் திகதி நடத்தப்பட்ட போர் வெற்றிவிழாவில் உரையாற்றிய ஜனதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, வடக்கில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.

வொஷிங்டன் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் பீரிஸிடம், அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஹிலாரி கிளின்ரன் வடக்கில் படைக்குறைப்பை வலியுறுத்திய சில மணிநேரங்களில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

"வடக்கும் இலங்கையின் ஒரு பகுதி தான், நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே அங்கும் படைகளை நிறுத்தியுள்ளோம்" என்று முகத்தில் அறைந்தாற்போல ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் அரசாங்கம் வடக்கு படைக்குவிப்பை எந்தவகையில் நியாயப்படுத்தினாலும், இந்த விவகாரம் இப்போதைக்கு ஓய்ந்து விடப் போவதில்லை. காரணம், நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று வடக்கிலும் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என்ற அரசின் வாதத்தை யாரும் நம்பத் தயாராக இல்லை. அதேவேளை, வடக்கில் உள்ள தமிழ்மக்கள் படைக்குறைப்பை வலியுறுத்தவில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் அதை வலியுறுத்துகிறது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்‌ஷவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், கூட்டமைப்பு படைவிலக்கலை வலியுறுத்தவில்லை.

தாம் படைச்செறிவைக் குறைக்கவே கோருகிறோம் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விளக்கமளித்துள்ள போதும், அரசாங்கம் அதைக் கண்டுகொள்வதாக இல்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே பத்தியில், வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள படைப்பிரிவுகள் பற்றிய விபரங்கள் குறித்து விரிவாக விபரிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். எனவே, மீண்டும் ஒருமுறை அதுபற்றி இங்கு குறிப்பிடுவது பொருத்தமற்றது.

வடபகுதிக்குச் சென்று வரும் ஒருவரால் அங்கு அதிகளவு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதை கண்டுணர முடியும். பத்து இலட்சம் பேர் கூட இல்லாத வடக்கு மாகாணத்தில் தான் இலங்கை இராணுவத்தின் பெரும் பகுதி நிலை கொண்டுள்ளது.

இந்த உண்மையை அரசாங்கம் ஏற்கத் தயாராக இல்லை ஏனைய பகுதிகளைப் போலத் தான் வடக்கிலும் உள்ளனர் என்கிறது.

இலங்கையின் சனத்தொகையில், 22 இல் ஒரு பங்கு மக்கள் வாழும் வடக்குப் பகுதியில் இராணுவத்தின் பெரும்பகுதி நிலைகொள்வதை சாதாரணமான படைக்குவிப்பாக எடுத்துக்கொள்ள முடியாது.

யாழ்ப்பாணத்தில் மட்டும் 51, 52, 55 என இராணுவத்தின் 3 டிவிஷன்கள் நிலை கொண்டுள்ளன. ஒரு டிவிஷன் என்பது சுமார் 10 ஆயிரம் படையினரைக் கொண்டது. ஆனால் இலங்கை இராணுவத்தில் ஒரு டிவிஷனில் சுமார் 8000 படையினரே உள்ளனர். மூன்று டிவிஷன்களையும் சேர்த்தால், அங்கு 24 ஆயிரம் படையினர் இருக்க வேண்டும்.

டிவிஷன்களின் ஆளணி அதிலும் குறைவு என்று வைத்துக் கொண்டால் கூட, குறைந்தது 20 ஆயிரம் படையினராவது யாழ்.குடாநாட்டில் நிலைகொண்டிருப்பர்.

ஆனால் யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கடந்தவாரம் இரு ஆங்கில ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில், 15,600 படையினரே யாழ்.குடாநாட்டில் நிலைகொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான படையினரைக் கொண்ட இராணுவத்தின் மூன்று டிவிஷன்களில் 15,600 படையினரே உள்ளனர் என்றால், அது இராணுவ நியமங்களுக்கு அப்பாற்பட்டது.

போர்க்காலங்களில் கூட, யாழ்ப்பாணத்தில் எந்தவொரு டிவிஷனும் 5200 படையினருடன் இருந்ததில்லை. அதைவிட, இலங்கையின் மொத்த சனத்தொகையில் 36 இல் ஒரு பங்கினர் தான் யாழ்ப்பாணத்தில் வசிக்கின்றனர்.

ஆனால், மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க சொல்வதுபோல 15,600 படையினரே அங்கு உள்ளனர் என்றால் கூட, இராணுவத்தில் 14இல் ஒரு பங்கு படையினர் நிலைகொண்டுள்ளனர்.

இதுவே ஏனைய பகுதிகளுக்கும் வடக்கிற்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தப் போதுமானது. வன்னியில் இதைவிட நிலைமை மோசம்.

அதேவேளை, கடந்தவாரம் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க "ஐலன்ட்" டுக்கு அளித்த பேட்டியில், 2009 டிசம்பர் 17ஆம் திகதி தான் பதவியேற்ற போது யாழ். குடாநாட்டில் 27 ஆயிரம் படையினர் நிலைகொண்டிருந்ததாக கூறியுள்ளார்.

அதேவேளை "லக்பிம நியூஸ்"க்கு அளித்த பேட்டியில் அவர், 2009 ஓகஸ்ட் 5ஆம் திகதி தான் பதவியேற்ற போது யாழ்.குடாநாட்டில் 26,000 படையினர் இருந்ததாக கூறியுள்ளார்.

ஒரே வாரத்தில் வெளியான இரு ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவர் அளித்த வித்தியாசமான தரவுகள் இவை.

ஜனாதிபதியோ வடக்கில் படைக்கு றைப்பு இல்லை என்கிறார். மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவோ வடக்கில் கிரமமான முறையில் படைகளை குறைத்து வருகிறோம் என்று வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் கூறிவருகிறார்.

அப்படியானால் எது சரி யார் சொல்வது உண்மை?

யாழ்.குடாநாட்டில் இராணுவத்தின் 3 டிவிஷன்கள் நிலை கொண்டுள்ளதைப் போன்று, வடக்கு தவிர்ந்த வேறு எந்தவொரு மாவட்டத்திலாவது 3 டிவிஷன்களை இலங்கை இராணுவம் நிறுத்தியுள்ளதா? இல்லை. இவையே அரசாங்கம் சொல்வது பொய் என்பதை ஆதாரபூர்வமாக உறுதி செய்கின்றன.

2002இல் போர்நிறுத்த உடன்பாடு நடைமுறைக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் பிரச்சினைகளை தீர்க்கும் சந்திப்புகள் தொடங்கின. முகமாலையிலும், ஓமந்தையிலும் முக்கியமான சந்திப்புகள் ‹னியப் பிரதேசத்தில் நடந்தன. முகமாலையில் நடந்த சந்திப்பின் போது, யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்களை விலக்க வேண்டும் என்று புலிகள் கோரினர்.

அப்போது வடபகுதி இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா அதற்கு மறுத்து விட்டார். உயர்பாதுகாப்பு வலயங்களை விலக்க முடியாது என்று இராணுவத்தரப்பு அடம்பிடித்ததால், புலிகளுக்குச் சந்தேகம் வலுத்தது.

இந்தச் சூழலில் இந்திய இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சதீஸ் நம்பியாரை அரசாங்கம் அழைத்து வந்தது. அவரும் சரத் பொன்சேகாவுக்கு சார்பாக அறிக்கையைக் கொடுத்தார்.
அதன்விளைவாக இராணுவ மட்டப் பிரச்சினைகளைத் தீர்க்கும் சந்திப்புகளில் தமது தளபதிகளை ஈடுபடுத்தும் முடிவை புலிகள் கைவிட்டனர். அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட அதுவும் ஒரு காரணமாகியது.

அதுபோலத் தான் இப்போதைய படைக்குறைப்பு விவகாரத்தையும் கருதத் தோன்றுகிறது. ஆனால் இப்போது ஒரு வித்தியாசம். அப்போது இந்தியாவில் இருந்து வந்த மேஜர் ஜெனரல் சதீஸ் நம்பியார் உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்கக் கூடாது என அரசுக்கு ஆலோசனை கூறினார்.இப்போது இந்தியா, அமெரிக்கா எல்லாமே படைகளை குறையுங்கள் என்கின்றன.
இதைச் சொல்லியதால் தான், இங்கிலாந்து தூதுவர் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு அவர் கண்டிக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

இது வடக்குப் படைச்செறிவு விவகாரத்தை வெளிநாடுகள் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்ற அரசின் இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

ஆனால் அரசின் இந்த உறுதிப்பாடு எந்தளவுக்குச் சாத்தியமாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. ஏனென்றால் அரசுக்கான அழுத்தங்கள் இத்தோடு முடிந்துவிடப் போவதில்லை.

- சுபத்ரா

வர்த்தக‌ விளம்பரங்கள்