Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பேராயரின் அரசியல்

பேராயரின் அரசியல்

3 ஆவணி 2019 சனி 15:38 | பார்வைகள் : 13653


இலங்கை அரசியலில் மதத் தலைவர்கள் எப்போதும் செல்வாக்கு மிக்கவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என நான்கு பிரதான மதங்கள் இருந்தாலும், பௌத்த மதத் தலைவர்கள் தவிர்ந்த ஏனைய மதத் தலைவர்கள், பெரும்பாலும் அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பது அல்லது வெளிப்படுத்துவது கிடையாது.
 
சிறுபான்மை மதங்களின் தலைவர்களாக இருப்பதாலோ என்னவோ, இந்த மூன்று மதங்களின் தலைவர்களும், மதில்மேல் பூனையாக இருக்கவே முற்பட்டிருக்கிறார்கள்.
 
விதிவிலக்காக சில கிறிஸ்தவ மதத் தலைவர்கள், செயற்பட்டிருப்பினும், அவர்கள் தேசிய அரசியலைத் தீர்மானிப்பதில் வகிபாகம் கொண்டிருப்பதில்லை.
 
தமிழ் அரசியலில் அவர்கள் அக்கறையோடு கரிசனையோடு செயற்பட்டிருக்கிறார்கள். எனினும், வெளிப்படையாக எந்த அரசியல் சார்பு நிலையையும் எடுத்ததில்லை.
 
கத்தோலிக்கத் திருச்சபையின் தற்போதைய பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அவ்வாறான ஒருவர் அல்ல என்பதை கடந்தவாரம் நிரூபித்திருக்கிறார்.
 
கர்தினால் மல்கம் ரஞ்சித், முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் என்றே பொதுவாக அறியப்பட்டவர்.
 
அவர் ஒரு கத்தோலிக்க மதத் தலைவராக இருப்பதை விட, தன்னை ஒரு சிங்களவராக வெளிப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் உள்ளவர். சிங்கள பௌத்தத்துக்கான முன்னுரிமையை எப்போதும் அங்கீகரிப்பவர்.
 
அவ்வாறான கோதாவில் தான், அவரது இப்போதைய அரசியல் வெளிப்பாடுகளும் அமைந்துள்ளன.
 
21/4 தாக்குதல்கள், பேராயர் மல்கம் ரஞ்சித்துக்கு பெரும், அதிர்ச்சியையும், சீற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவர், ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிட்டு வருகின்ற கருத்துக்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
 
21/4 தாக்குதல்களுக்குப் பின்னர், அவர் வெளிப்படுத்திய- வெளிப்படுத்த முற்பட்டுள்ள கருத்துக்கள் உள்நாட்டு அரசியலுக்கும் அப்பாற்பட்டதாகவும் இருக்கிறது.
 
பேராயர் மல்கம் ரஞ்சித் 21/4 தாக்குதல்களுக்குப் பின்னர், தீவிரமான அரசாங்க எதிர்ப்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அவரது அந்த வெறுப்பு நிலைக்கு, காரணமாக இருப்பது, தமது பொறுப்பில் இருந்த தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மாத்திரம் என எடுத்துக் கொள்ள முடியாது.
 
கத்தோலிக்க தேவாலயங்கள் தாக்கப்பட்டன என்பதால், அந்த மதப் பிரிவின் தலைவர் என்ற வகையில், அவர் சீற்றம் கொண்டிருப்பது அறமே. ஆனால், ஈஸ்டர் ஞாயிறன்று தாக்கப்பட்டது தனியே கத்தோலிக்க தேவாலயங்கள் மாத்திரமன்று.
 
வெளிநாட்டவர்களைக் குறி வைத்து, நட்சத்திர விடுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கிழக்கில் மட்டக்களப்பில், கத்தோலிக்க மதப்பிரிவைச் சாராத சீயோன் தேவாலயமும் தாக்குதலுக்கு உள்ளானது.
 
இந்த தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்திருந்த போதும், அதனை தடுக்க அரசாங்கமும், பாதுகாப்பு பிரிவுகளும் தவறிவிட்டன என்பதில் சந்தேகமில்லை. அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதில் சந்தேகங்கள் உள்ளன.
 
தாக்குதல் தொடர்பான முன்னெச்சரிக்கை கிடைத்திருந்தால், ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளை நிறுத்தி வைத்திருப்பேன் அனர்த்தங்களை தவிர்த்திருக்கலாம் என்றெல்லாம் பேராயர் கூறியிருந்தார்.
 
ஆனாலும், அவரது பொறுப்பில் இல்லாத- சீயொன் தேவாலயத்திலோ, நட்சத்திர விடுதிகளிலோ குண்டுகள் வெடித்திருக்காது என்று நிச்சயப்படுத்திக் கூறமுடியாது.
 
தாக்குதலை தடுத்திருக்கலாம் என்று உறுதிபடக்கூறும் அவர், தனியே கத்தோலிக்க தேவாலயங்களின் மீதான தாக்குதல்களைப் பற்றி மாத்திரம் சிந்திக்கிறாரே தவிர, அதற்கு அப்பால்,ஏனைய உயிர்களைக் காப்பாற்றும் பொறிமுறை அங்கு இருந்ததா என்பதையிட்டு கவலை கொள்வதாகத் தெரியவில்லை.
 
அரசாங்கத்தின், பாதுகாப்புத்துறையின் தவறுகளினால் தான் அழிவுகள் அதிகமாக நிகழ்ந்தன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், இதுபோன்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்துவது கடினம், அதுவும் போரில் இருந்து விடுபட்டு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இதுபோன்ற ஒரு அழிவில் நாடு சிக்கும் என்று யாரும் கற்பனை செய்து கூடப் பார்த்திருக்கமாட்டார்கள்.
 
புலனாய்வு தகவல்கள் கிடைத்தாலும், அது சரியா, இப்படி நடக்க வாய்ப்புள்ளதா என்று சந்தேகப்படும் நிலையே இருந்திருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.
 
2004 இல் சுனாமி  ஏற்பட்டபோது சர்வதேச அளவில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால் அதனை பல நாடுகள், அரசாங்கங்கள் கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால், சுனாமி என்ற சொற்பதத்தையே அப்போது இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்த யாரும் அறிந்திருக்கவில்லை.
 
இப்படியொரு இயற்கைச் சீற்றம் நிகழும் என்று கற்பனையே செய்திராத நிலையில், அந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் யாராலும் கண்டு கொள்ளப்படவில்லை.
 
அந்த எச்சரிக்கையையும் அதன் விளைவுகளையும், சம்பந்தப்பட்டவர்கள் உரிய முறையில் அடையாளம் கண்டிருந்தால், இலட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அது முடியவில்லை.
 
ஏனென்றால், அவ்வாறான ஒரு சம்பவத்தை அப்போது யாரும் எதிர்பார்க்கவேயில்லை. அதுபோலத் தான், 21/4 தாக்குதல்களையும் யாரும் எதிர்பார்க்கவில்லை.
 
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க உள்ளிட்ட பலரும், இதுபோன்ற தாக்குதல்களை இலகுவில் தடுக்க முடியாது என்றும் இனிமேலும் நிகழ்வதற்கு வாய்ப்புகள் இல்லை எனக் கூறமுடியாது என்றும்  கூறியிருக்கின்றனர்.
 
எவ்வாறாயினும், இனிமேல், இவ்வாறான தாக்குதல்கள் பற்றிய முன்னெச்சரிக்கைகள் கிடைத்தால், உசாராகவே இருப்பார்கள். ஏனென்றால், 21/4 தாக்குதல்கள் அந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தின.
 
2004 சுனாமியின் பாதிப்புக்குப் பின்னர், நாம், இந்தியப் பெருங்கடலில் நிகழும் நிலநடுக்கங்கள் பற்றிய செய்திகளின் பின்னால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுகிறதா என்று உன்னிப்பாக பார்ப்பது போல, இனி குண்டு எச்சரிக்கைகள், புலனாய்வுத் தகவல்கள் விடயத்தில் அலட்சியம் காட்டப்படாது என்பது திண்ணம்.
 
ஆனால், பேராயர் மல்கம் ரஞ்சித், முன்னர் பலம்மிக்கதாக இருந்த புலனாய்வுப் பிரிவுகள் வெளிநாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்காக, அரசாங்கத்தினால் சீர்குலையச் செய்யப்பட்டு விட்டது என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
 
மகிந்த ராஜபக்ச தரப்பு எவ்வாறு புலனாய்வுப் பிரிவு பற்றிய மிகையான- உள்நோக்கத்துடன் கூடிய விமர்சனங்களைச் செய்கிறதோ, அதுபோலவே மலினத்தனமான கருத்துக்களை பேராயரும் வெளியிட்டிருக்கிறார்.
 
அரச புலனாய்வுப் பிரிவுகளை தற்போதைய அரசாங்கம் சீர்குலைத்து விட்டது- அதனால் தான் இந்தக் கதி என்று பேராயர் கூறியுள்ளதற்குப் பின்னால் உள்ள அரசியலை விளங்கிக் கொள்வது கடினமல்ல.
 
புலனாய்வுப் பிரிவு எப்படி சீர்குலைக்கப்பட்டது என்று அவர் கூறவில்லை. ஆனால் யாரால் சீர்குலைக்கப்பட்டது என்று மாத்திரம் அவர் கண்டுபிடித்திருக்கிறார்.
 
புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பலர், கைது செய்யப்பட்டதால் தான், அது பலவீனப்பட்டுப் போனதாக, மகிந்த அணி தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலனாய்வுப் பிரிவினரில், 100 பேர் கூட கைது செய்யப்படவில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டதற்குக் கூட, கடந்த ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த குற்றச்செயல்கள் தான் காரணமாகும். அதற்கு துணைபோன, உடந்தையாக இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
அவ்வாறாயின், அந்தக் குற்றங்களை யாரும் கண்டுகொள்ளக்கூடாது குற்றவாளிகளை தண்டிக்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை பேராயர் எடுக்கிறார் என்றே சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கிறது.
 
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களும், அதில் பறிக்கப்பட்ட உயிர்களும் மாத்திரமே, பேராயருக்கு, முக்கியமானவையாக இருப்பது போலத் தான், கடந்த காலங்களில் நிகழ்ந்த குற்றங்களுக்கு நீதி வழங்கப்படுவதும் முக்கியமானதே.
 
பேராயர் மல்கம் ரஞ்சித் கடந்த கால குற்றச்செயல்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற ஒருவரல்ல. போரில் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்கர்களையும் கூட அவர் கவனத்தில் கொண்டதில்லை.
 
ஒன்பது நாட்கள் இலங்கையில் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் தொடர்பாக  பேராயர் மல்கம் ரஞ்சித்தின் கருத்தை, அவரது பேச்சாளரான ஜூட் கிரிசாந்த வெளியிட்டுள்ள விதம், இந்தக் கருத்தை உறுதிப்படுத்துவதற்குப் போதுமானது.
 
“ஒரே நாளில் குண்டுவெடிப்புகளில்  250 பேர் கொல்லப்பட்டு, 500 பேர் காயமுற்றது பற்றி  ஐ.நா அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் எதுவும் விசாரிக்கவில்லை. அதற்காக கவலைப்படவோ, என்ன நடந்தது என்று கேட்கவோ இல்லை.
 
போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து கேட்டறிவதற்காக மட்டும், வடக்கிற்குப் பயணம் செய்திருக்கிறார் ” என்று விசனத்தை வெளிப்படுத்தியிருந்தார் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் பேச்சாளர் ஜூட் கிரிசாந்த.
 
பேராயர் தரப்புக்கு இப்போது தேவைப்படுவது, ஈஸ்டர் ஞாயிறு குற்றச்செயல்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பது மாத்திரம் தான். ஏனென்றால் அதனுடன் தொடர்புபட்டவர்கள், யாரும் சிங்களவர்கள் அல்ல.
 
தற்போதைய விசாரணைகளில் அவருக்கு நம்பிக்கையில்லை என்கிறார். இதனை விட கடுமையான முறையில் விசாரணைகள் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
 
குற்றங்கள் அனைத்தும் தராதரமின்றித் தண்டிக்கப்பட வேண்டியவை. கடந்தகால குற்றங்களுக்கும், இப்போதைய குற்றங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இதனை பேராயர் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் இல்லை. அவர் குற்றங்களை  இழைத்தவர்கள் எந்த இனத்தவர் – எந்த மதத்தவர் என்ற கோணத்திலேயே பார்க்கிறார்.
 
அதைவிட, பேராயர் மல்கம் ரஞ்சித் எதிர்பார்ப்பது, ஆட்சிமாற்றத்தை தான். அதனை அவர் முன்னரே பலமுறை சூசகமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
 
இப்போதும் கூட  அவர், யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று வெளிப்படுத்தவில்லை. அது தனது அரசியல்சார்புத் தன்மையை வெளிப்படுத்தி விடும் என்று அஞ்சினாலும், தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.
 
ஆற்றல் கொண்டவர்களிடம் நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைக்கும் நேரம் வந்து விட்டது என்று அவர் கூறியிருப்பது யாரை மனதில் வைத்து என்பதை கூறிவிடுவது ஒன்றும் கடினமல்ல.
 
சிங்கள கத்தோலிக்க மக்களை தற்போதைய அரசாங்கத்திடம் இருந்து விலத்தி, மகிந்த தரப்பின் பக்கம் செல்ல வைப்பதே பேராயர் மல்கம் ரஞ்சித்தின் நோக்கம். அதனை அவர் பலமுறை தனது கருத்துக்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
 
இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்கள் கூட, அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று கூறியதில்லை.
 
இதுவரை காலமும், அரசியலில் தீர்க்கமான பங்கை வகித்திராத கத்தோலிக்க திருச்சபையின் உயர் குருவான பேராயர், அந்த அரசியலைக் கையில் எடுத்திருக்கிறார்.
 
வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் முக்கியமானவை. சிங்கள- பௌத்த கடும்போக்காளர்களின் வாக்குகளை நம்பியே கோத்தாபய ராஜபக்ச களமிறங்கப்போகும் நிலையில், அவருக்கு சிங்கள கத்தோலிக்க மக்களின் வாக்குகள் கிடைப்பதை உறுதி செய்யும் வேலையைத் தான் பேராயர் மல்கம் ரஞ்சித் மேற்கொள்கிறார்.
 
ஆனால், தமிழ் கத்தோலிக்க வாக்குகளை அவரால் திசை திருப்ப முடியுமா என்பது சந்தேகம்.
 
ஏனென்றால், பேராயர் ஒரு கத்தோலிக்க மதத் தலைவராக தன்னை வெளிப்படுத்துவதை விட, ஒரு சிங்களவராக வெளிப்படுத்துவதில் தான் ஆர்வம் கொண்டுள்ளவர்.
 
எனவே, தமிழ் கத்தோலிக்கர்களும், முதலில் தம்மை கத்தோலிக்கர்களாக பார்ப்பதை விட, தமிழர்களாக பார்க்கவே முற்படுவார்கள் என்றே எதிர்பார்க்கலாம்.
 
எவ்வாறாயினும், கத்தோலிக்க திருச்சபையின் முதல்வர் ஒருவர், இலங்கை அரசியலில் தீர்க்கமான ஒரு கட்டத்தில் அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு கூறும் துணிச்சலைக் கொண்டிருக்கிறார்.
 
அவருக்கு அந்த தைரியத்தைக் கொடுத்தது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
 
நன்றி - வீரகேசரி வாரவெளியீடு

வர்த்தக‌ விளம்பரங்கள்