Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா?

 இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா?

20 ஆவணி 2019 செவ்வாய் 16:28 | பார்வைகள் : 13369


250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட  ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க முடியாத அரசாங்கத்தின் இயலாமையினால்,  கோபமடைந்த இலங்கையர்கள், தங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்து, பொருளாதார வளர்ச்சியை மீண்டும் கொண்டு வரக்கூடிய, வலிமைமிக்க ஒருவர் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை விரும்புகிறார்கள்.
 
போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள போதிலும், கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாகப் பலர் வேரூன்றியுள்ளனர்.
 
தமிழ்ப்  புலிகளை தோற்கடித்ததன் மூலம், சிங்கள பௌத்த பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை தமிழ் குழுக்களுக்கு இடையிலான, 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை, மிருகத்தனமான முறையில், முடிவுக்குக் கொண்டு வந்த, ராஜபக்ச சகோதரர்களான கோத்தாபய மற்றும் மகிந்த ஆகியோர், 2009 ஆம் ஆண்டில் சிறிலங்காவில் அமைதியைக் கொண்டு வந்ததாக பெருமை பெற்றனர்.
 
அந்த நேரத்தில் பாதுகாப்பு செயலராக கோத்தாபயவும், நாட்டின் தலைவரான மகிந்தவும் இருந்தனர்.
 
“மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஒரு தலைவரைக்  கோரியுள்ளனர்” என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவனர் மற்றும் கோத்தாபய மற்றும் மகிந்தவின் இளைய சகோதரர் பசில் ராஜபக்ச வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில், ஒரு ஊடகவியலாளரை சட்டவிரோதமாகக் கொலை செய்தது மற்றும் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களுக்கு தூண்டியது மற்றும் அதிகாரம் அளித்தது தொடர்பாக கோத்தாபய அமெரிக்காவில் வழக்குகளை எதிர்கொள்கிறார்.
 
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர், சித்திரவதையில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் மகள் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் நோக்கம் கொண்டது என்று  கூறினார்.
 
அதிபர் தேர்தலுக்கான நாள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை, ஆனால் டிசெம்பர் 9 ஆம் நாளுக்கு முன்னதாக, தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
 
சிறிலங்காவின் அரசியலமைப்பு பிரெஞ்சு ஆட்சிமுறையை மாதிரியாகக் கொண்டது, அங்கு  அதிபருக்கு நிறைவேற்று அதிகாரங்கள் உள்ளன, அதே நேரத்தில் பிரதமர் நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்குகிறார்.
 
தற்போதைய அரசாங்கத்திற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குகிறார், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்.
 
கடந்த ஒக்ரோபர் மாதத்தில் இருந்து மோதலில் ஈடுபட்டுள்ள சிறிசேன மற்றும் விக்ரமசிங்க ஆகியோர், இந்தியாவின் எச்சரிக்கைகளை புறக்கணித்து விட்டதாகவும், தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகவும், ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
 
சிறிலங்காவின் பெரும்பான்மை சிங்கள பௌத்த சமூகத்தில் வலுவான ஆதரவைக் கொண்ட, கோத்தாபய போன்ற ஒரு தேசியவாத தலைவருக்கான அழைப்பு, இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளில் வாக்காளர்கள் செய்த ஒத்த தெரிவுகளை பிரதிபலிக்கிறது.
 
இந்தியாவில், மே மாதம் மகத்தான வெற்றி பெற்று இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது இந்து தேசியவாத தளத்தை திரட்டி, தேசிய பாதுகாப்புக்கான போராட்டமாக பரப்புரையை மாற்றியிருந்தார். அத்துடன், பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தினார்.
 
கருத்து வேறுபாடுகளை அடக்குவதாகவும், விமர்சகர்களை சிறையில் அடைப்பதாகவும், விமர்சிக்கப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த டிசம்பரில் நடந்த தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.
 
ரொய்ட்டர்ஸ் சுமார் 60 மக்களிடம் பேசியது. அவர்களில் பலர் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கடந்த ஆண்டு வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள்.
 
அவர்களில் சிலர் வாக்களிப்பதைத் தவிர்க்க திட்டமிட்டுள்ளனர்.  வாக்களிக்கப் போவதாக கூறிய பலர் தங்களுக்கு இன்னும் எதேச்சாதிகாரமுள்ள ஒருவர் வேண்டும் என்று கூறுகிறார்கள்.
 
அதிபர் சிறிசேன போட்டியில் நின்றால் அவருக்கு பல இலங்கை கத்தோலிக்கர்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று மூத்த மதகுரு ஒருவர் தெரிவித்தார்.
 
காவல்துறையினர் சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும், பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டூர்ட்டேயின் போதைப்பொருளுக்கு எதிரான போரை ஒரு முன்னுதாரணமாக அவர் பார்க்கிறார்.
 
“எங்களைப் போன்ற மூன்றாம் உலக நாட்டுக்கு, டூர்ட்டே போன்ற ஒரு இறுக்கமான தலைவர் தேவை – அவர் தனது நாட்டை தீமைகளிலிருந்து விடுவிப்பதற்குத் தேவையானதைச் செய்கிறார்,” என்று தனது பெயரை வெளியிட விரும்பாத மதகுரு கூறினார்.
 
“கோத்தாபய மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர் இறுக்கமானவர், சில ஒழுங்கைக் கொண்டு வருவதற்கு இப்போது எமக்குத் தேவை” என்று அவர் குறிப்பிட்டார்.
 
கத்தோலிக்க திருச்சபையிடம் கருத்துக் கோரிய போதும், உடனடியாக பதிலளிக்கவில்லை.
 
21 மில்லியன் மக்களைக் கொண்ட சிறிலங்கா, குறுங்குழுவாதத்தின் ஒரு பெட்டியாகவும், பெரும்பான்மை சிங்கள பௌத்தமக்களுக்கும் தமிழ் குழுக்களுக்கும் இடையிலும், சமீபத்திய ஆண்டுகளில் சிங்கள பௌத்தர்களுக்கும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையிலும், இனப் பதற்றங்கள் நிலவுகின்ற நாடாக இருந்து வருகிறது.
 
பெரும்பாலான தமிழர்கள் கோத்தாபயவுக்கு வாக்களிக்க வாய்ப்பில்லை என்றாலும், முஸ்லிம் சமூகம் பிளவுபடக் கூடும்.
 
தான் கோத்தாபயவுக்கு வாக்களிப்பேன் என்றும்,  ஏனெனில் தற்போதைய அரசாங்கம் வழங்கத் தவறிவிட்டது எனவும், எஸ்எச்எம். தமீம் என்ற  முஸ்லிம் அரசு பணியாளர் கூறினார்.
 
“அவர் பாதுகாப்பு செயலராக இருந்தபோது முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் சிறிசேனவும் விக்ரமசிங்கவும் அதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர். இது முஸ்லிம்களின் வணிகங்களையும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் மோசமாக பாதித்தது” என்று வட மத்திய மாவட்டமான அனுராதபுரவில் வசிக்கும் தமீம் கூறினார்.
 
கொழும்பில் உள்ள முஸ்லிம் முச்சக்கர வண்டி சாரதி ஜே.எம்.பளீல் வித்தியாசமாக உணர்கிறார்.
 
“எங்களுக்கு ஒரு சர்வாதிகாரி தேவை, ஆனால் இன்று நாம் எதிர்கொள்ளும் பெரும்பாலான துன்பங்களுக்கு கோத்தாபய ஓரளவுக்குப் பொறுப்பு என்பதால்,  நான் அவருக்கு வாக்களிக்கமாட்டேன்” என்று முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பளீல் குறிப்பிட்டார்.
 
முஸ்லிம்களுக்கு எதிரான மிகமோசமான வன்முறை நடந்தபோது, கோத்தாபய நாட்டில் இருக்கவில்லை என்று பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.
 
“ஆனாலும், ஒரு நாளுக்குள் அவரால் அதைத் தடுக்க முடிந்தது. முஸ்லிம் எதிரான கலவரம் பரவுவதை இந்த அரசாங்கத்தால் ஒரு வாரமாக  கட்டுப்படுத்த முடியவில்லை” என்று அவர் ரொய்ட்டர்ஸ்சிடம் கூறினார்.
 
அமெரிக்காவில் உள்ள வழக்கு குற்றச்சாட்டுகள் கோத்தாபயவின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்காது, ஏனெனில் அவருக்கு சிங்கள பௌத்த  பெரும்பான்மையினரின் பெரும் ஆதரவு உள்ளது என்று சிறிலங்காவின் அரசியல் ஆய்வாளர் குசல் பெரேரா தெரிவித்தார்.
 
“இந்தத் தேர்தல், விடயங்களைச் சரியாகச் செய்ய கடுமையான அதிபர் தேவை என்று நம்புகின்ற  பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்களால் தீர்மானிக்கப்படும். அதிபரைத் தீர்மானிப்பதில் இருந்து  தமிழர்களும் முஸ்லிம்களும் விலகி இருப்பார்கள் ”என்றும் குசல் பெரேரா கூறினார்.
 
நன்றி - புதினப்பலகை

வர்த்தக‌ விளம்பரங்கள்