Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்...!!!

ஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்...!!!

24 ஐப்பசி 2019 வியாழன் 16:32 | பார்வைகள் : 12773


போர் வெற்றியை ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தக்கூடாது ; போர் அரசுக்கு சொந்தமானதே தவிர, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல ; போர் வெற்றியை தேர்தல் பிரசாரங்களில் எந்த கட்சியும் பயன்படுத்தமுடியாது என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கடந்தவாரம் செயதியாளர் மகாநாட்டில் கூறியிருந்தார்.  ஆனால், அவரது அறிவுறுத்தலை அரசியல் கட்சிகள் மதித்துச் செயற்படும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. போரின் முடிவுக்கு பின்னர் மாத்திரமல்ல, முன்னரும் கூட போர் சகல தேர்தல்களிலும் முக்கியமான பிரசாரப்பொருளாக  தாராளமாக அரசியல் கட்சிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

 
இராணுவ நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்துவதில் தென்னிலங்கை அரசியல் சமுதாயம் சுமார் நான்கு தசாப்தங்களாக காட்டிவந்த அக்கறையின் விளைவாக சிங்கள மக்கள் மத்தியில் இராணுவவாத அரசியல் உணர்வுகள் மேலோங்கிக் காணப்படுகின்றன. போர் முடிவுக்கு வந்து பத்து வருடங்களுக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்டபோதிலும், அந்த உணர்வுகள் தணிந்தபாடாக இல்லை; தணிவதற்கு அரசியல்வாதிகள் விடுவதாகவும் இல்லை.விடுதலை புலிகளை அரசாங்கப்படைகள் தோற்கடித்தமைக்கு பிரதான காரணம் போர் நடவடிக்கைகளுக்கு தாங்கள் வழங்கிய அரசியல் தலைமைத்துவமே என்று உரிமை கோரும்  ராஜபக்சாக்கள் அதன் மூலமாக உச்சபட்ச அரசியல் அனுகூலத்தை அடைந்தார்கள் ; சகல தேர்தல்களிலும் பெருவெற்றிகளைக் கண்டார்கள்.போர் வெற்றிக் குதூகலத்தில் சிங்கள மக்களை மிதக்கவிடுவதன் மூலமாக என்றென்றைக்கும் ஆட்சியதிகாரத்தில் தாங்கள் இருக்கலாம் என்றும் அவர்கள் நம்பினார்கள். அவர்களது அணுகுமுறைகளும் செயற்பாடுகளும் தென்னிலங்கையை இராணுவவாத அரசியல் ஆக்கிரமிக்க வழிவகுத்தன.
 
அதன் விளைவாக,  போரின் முடிவுக்கு பி்ன்னர் நடைபெற்ற 2010 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அவருடன் சமதையாக போர்வெற்றிக்கு உரிமைகொண்டாடக்கூடியவர் என்று தாங்கள் நம்பிய  முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அன்றைய எதிரணி கட்சிகள் அவற்றின் பொதுவேட்பாளராக களமிறக்கவேண்டியேற்பட்டது.அதன் மூலமாக ராஜபக்சாக்களுக்கு எதிரான அரசியல் முகாமும் இராணுவவாத அரசியல் வலுவடைய  அதன் பங்களிபைச்செய்தது.ஆனால், அவரால் வெற்றிபெறமுடியவில்லை.
 
மூன்று தசாப்தகால போரினால்  அவலத்துக்குள்ளான தமிழ் மக்கள் அந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச மீதான வெறுப்பு காரணமாக பொன்சேகாவுக்கு அமோகமாக வாக்களித்தார்கள். தமிழ் மக்கள் எந்தக் காரணத்துக்காக ராஜபக்சவை வெறுத்தார்களோ அதே காரணத்துக்காகவே சிங்கள மக்கள் அவரை அமோகமாக ஆதரித்தார்கள். இவ்வாறாக போர் வெற்றியுடன் நெருக்கமாக  அடையாளப்படுத்தப்படும்  ராஜபக்சாக்கள் 2015 தேர்தல்களில் தோல்வியடைந்து ஆட்சியதிகாரத்தை இழந்தபோதிலும் சிங்கள மக்கள் மத்தியில்ெதாடர்ந்தும் பெரும் ஆதரவைக்கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சுமார் 10 வருடகால ராஜபக்ச ஆட்சியில் பாரதூரமான ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு நிலவிய போதிலும், தொடர்ந்தும் செல்வாக்குடையவர்களாக விளங்குவதற்கு பிரதான காரணம் போர் வெற்றியின் சூத்திரதாரிகள் அவர்களே என்று பெரும்பான்மையான தென்னிலங்கை மக்கள் நம்புவதேயாகும். ராஜபக்சாக்கள் தங்களது புதிய அரசியல் வாகனமாக மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறுகிய காலத்துக்குள் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றாக வெளிக்கிளம்பக்கூடியதாக இருந்ததற்கும் அதுவே காரணமாகும்.
 
இத்தடவை ஜனதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ராஜபக்ச சகோதரர்களில் ஒருவரான கோதாபய ராஜபக்ச களமிறங்கியிருக்கும் நிலையில், தேர்தல் பிரசாரங்களில் இராணுவவாத அரசியல் மீண்டும் முனைப்படைந்திருக்கிறது. போரின் இறுதிக்கட்டங்களில் பாதுகாப்பு செயலாளராக பதவிவகித்த முன்னாள் இராணுவ அதிகாரியான அவர் கடந்த இரு வருடங்களாக ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு தன்னை தயார்படுத்தியபோது போரில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலரையும் தனது அணியில் இணைத்துக்கொண்டு செயற்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.
 
சகோதரரின் ஆட்சிக்காலத்தில் மெய்நடப்பில்  பாதுகாப்பு அமைச்சர் போன்றே செயற்பட்ட கோதாபய இயல்பாகவே போர் வெற்றியை தனது மாபெரும்  சாதனையாக மக்கள் முன்னிலையில் பிரசாரம் செய்து வாக்குக் கேட்கிறார். பயங்கரவாதம் மீண்டும் தலையெடுத்துவிட்டது என்று எச்சரிக்கை செய்யும் அவர் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்யுமாறு கேட்கிறார்.கோதாபய போர் வெற்றிக்கும் இராணுவத்துக்கும் அதன் தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்புக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக தேர்தல் பிரசாரங்களில் அரசியல் விவாதம் இராணுவவாத அரசியல்மயமானதாக முனைப்படைந்திருக்கிறது. அவரைப் பொறுத்தவரை, நாட்டின் ஜனாதிபதியாக தன்னால் மாத்திரமே பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியும் என்று வெளிப்படையாகவே கூறுகிறார். பொதுஜன பெரமுன  அரசியல்வாதிகளும் பிரசாரக்கூட்டங்களில் கோதாபய ஜனாதிபதியாக வராவிட்டால் நாட்டைா ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியாது என்று பயங்காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
 
அதனால் போர் வெற்றி சுலோகத்தை பயன்படுத்தாமல் ராஜபக்ச முகாமினால் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரங்களைச் செய்யமுடியாது என்பது வெளிப்படையானது. எந்த சட்டத்தின் கீழ் போர் வெற்றியை தேர்தல்களில்  பயன்படுத்தமுடியாது என்று அவர்கள் ஆணைக்குழுவை நோக்கி கேள்வியும் எழுப்புகிறார்கள். கடந்த  வாரம் செய்தியாளர் மகாநாடொன்றில் கருத்து தெரிவித்த எதிரணி பாராளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்தன, ” முன்னைய ஜனாதிபதிகளில் எவரினாலும் விடுதலை புலிகளை தோற்கடிக்க முடியவில்லை. 
 
உகந்த போர்த்தந்திரோபாயங்களை வகுக்கக்கூடிய பாதுகாப்பு செயலாளர் அவர்களிடம் இல்லாததே அதற்கு காரணம். கோதாபய ராஜபக்சவின் ஆற்றல்மிகுந்த தந்திரோபாயங்கள் இல்லாவிட்டால் விடுதலை புலிகளை தோற்கடித்திருக்கமுடியாது. அதன் காரணத்தினால்தான் மீண்டும் பயங்கரவாத அச்சுறுத்தல் தோன்றியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மக்களை அவரின் பின்னால் அணிதிரளுமாறு நாம் கேட்கிறோம். கோதாபயவைப் போன்று தேசிய பாதுகாப்பில் பற்றுறுதி கொண்டவர் வேறு யாருமில்லை.போர் வெற்றியை தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தமுடியாது என்று தேர்தல் ஆணைக்குழு தடைசெய்யுமானால், விடுதலை புலிகளின்  இராணுவரீதியான தோல்விக்கு  வழிவகுத்த காரணங்களைப் பற்றி நாம்  பேசுவோம் ” என்று கூறினார்.
 
பொதுஜன பெரமுனவினதும் ராஜபக்சாக்களினதும் இத்தகைய பிரசாரங்களுக்கு உறுதியான முறையில் எதிர்வினையாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது பிரசாரங்களிலும் இராணுவவாத அரசியலுக்கு முக்கியத்துவத்தை கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். இரு வாரங்களுக்கு முன்னர் கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற தனது முதலாவது தேர்தல் பிரசாரப் பேரணியில் அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு  தனது தலைமையிலான அரசாங்கத்தில் முன்னாள் இராணுவத்தளபதி ஃபீல்ட் மார்ஷால் சரத் பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பதாக உறுதியளித்தார். அப்போது மேடையில் இருந்த பொன்சேகா எழுந்து நின்று மக்களுக்கு கையசைத்து மகிழ்ச்சியைத் தெரிவித்ததை காணக்கூடியதாக இருந்தது. போரில் இராணுவத்தை வெற்றிக்கு வழிநடத்திய இராணுவத் தளபதி பொன்சேகாவே கோதாபயவை விடவும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமிகவும் பொருத்தமானவர் என்றும் சஜித் தனதுரையில் குறிப்பிட்டார்.
 
அதற்கு பிறகு சஜித்தின் பிரசாரக்கூட்டங்களில் பொன்சேகா முக்கியமான ஒரு பேச்சாளராக இருந்துவருகிறார். கோதாபயவின் பிரசாரங்களில் தேசிய பாதுகாப்புக்கு  கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை இப்போது  சஜித்தின் பிரசாரங்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது. போரில் இராணுவத்தினரின் வெற்றிக்கு தனது வழிநடத்தலும் தந்திரோபாயங்களுமே காரணம் என்றும் தான் வகுத்த தந்திரோபாயங்கள் குறித்து பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதாபய அறிந்திருக்கவுமில்லை  என்றும் பொன்சேகா இப்போது கூறுகிறார். கோதாபய ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில் முதன்முதலாக நடத்திய செய்தியாளர் மகாநாடு கடந்தவாரம் கொழும்பு ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றது. அதில் ‘ த இந்து ‘ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்திடம் சரணடைந்ததாக கூறப்படுவோர் காணாமல் போயிருக்கும்  பிரச்சினை குறித்து கேள்வியெழுப்பியபோது கோதாபயவை நோக்கி ‘ அந்த நேரத்தில் இராணுவத்துக்கு தலைமை தாங்கியவர் என்ற வகையில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள் ‘ என்று கேட்டார். அதற்கு பதிலளித்த கோதாபய ‘ இராணுவத்துக்கு நான் தலைமைதாங்கவில்லை. இராணுவத்தளபதியே தலைதாங்கினார் ‘ என்று பொன்சேகாவின் பெயரைக் குறிப்பிடாமல் கூறினார். இதை போர் வெற்றிக்கு தானல்ல, பொன்சேகாவே உண்மையில் காரணம் என்று கோதாபய பத்து வருடங்கள் கழித்து   ஒப்புக்கொண்டுவிட்டதாக அர்த்தப்படுத்தி சஜித் பிரேமதாசவின் மேடைகளில் பிரசாரம் செய்யப்படுகிறது.
 
அந்த செய்தியாளர் மகாநாட்டுக்கு பிறகு பிரசாரக்கூட்டங்களில்  இந்திய செய்தியாளரின் கேள்வியும் கோதாபயவின் பதிலும் தொடர்ச்சியாக எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.இவ்வாறாக, இரு பிரதான வேட்பாளர்களினதும்  பிரசாரங்களை தேசிய பாதுகாப்பும் இராணுவவாத அரசியலும் சூழ்ந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. எஞ்சியிருக்கும் நான்கு வாரங்களிலும் இந்தப் போக்கு  மேலும் தீவிரமடையப்போகிறது. அத்தகையதொரு ஆரோக்கியமற்ற சூழ்நிலை சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான இனவாத அரசியல் கருத்துக்களும் உணர்வுகளும் தென்னிலங்கையில் முழுவீச்சில்  கிளறிவிடப்படும் ஆபத்தை தோற்றுவிக்கும்.அதற்கான தெளிவான அறிகுறிகளை  ஏற்கெனவே காணக்கூடியதாக இருக்கிறது.
 
நன்றி : வீரகேசரி நாளிதழ் 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்