Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

மக்கள் நலன் விடயங்களில் அரசின் அதிரடி நடவடிக்கைகள்!

மக்கள் நலன் விடயங்களில் அரசின் அதிரடி நடவடிக்கைகள்!

5 தை 2020 ஞாயிறு 17:34 | பார்வைகள் : 14962


புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒன்று, பொதுமக்களின் நன்மைகள் குறித்த விடயங்கள்.

 
உதாரணமாக பாண், உருளைக்கிழங்கு, சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் விலைக் குறைப்பு தொடக்கம் ஜனாதிபதி திடீர் திடீரென பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை அவதானிப்பது, நடவடிக்கை எடுப்பது வரையில் நடந்து கொண்டிருப்பது.
 
மேலும் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள பொதுநலத் திட்டங்கள் மற்றும் இலகு நடைமுறை தொடர்பான மாற்றங்களை நோக்கிய பல்வேறு அறிவிப்புகள். இந்த வகையில் ஏறக்குறைய 25க்கு மேற்பட்ட திட்டங்கள்  ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இளைய தலைமுறையினருடைய வேலைவாய்ப்பு, மேற்படிப்பு, உயர் கல்வி தொடர்பாக புதிய கொள்கை ஒன்றைப் பற்றிச் சிந்திப்பதாகவும் தெரிகிறது.
 
அத்துடன் ஊடகங்களின் சுயாதீனத்தன்மையை மேம்படுத்துதல் என்ற அறிவிப்பும் ஊக்குவிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை ஊடகத்துறையினருடனான சந்திப்பின் போது ஜனாதிபதியே நேரில் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக அரச ஊடகங்கள் கூட சுயாதீனத்தன்மையுடன் ஜனநாயக அடிப்படையில் எந்தக் கருத்தையும் வெளியிடலாம். ஆனால், தேசத்தின் பாதுகாப்பைக் கவனத்திற் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இரண்டாவது, அரசியல் நடவடிக்கைகள். குறிப்பாக, எதிரணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்றோர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள். இதனை அரசியல் பழிவாங்கல் என்று விமர்சிக்கிறது எதிரணி.
 
ஆகவே இந்த இரண்டும் புதிய அரசாங்கத்தின் போக்கினை ஓரளவுக்கு அடையாளம் காட்டுகின்றன.
 
ஒரு பக்கத்தில் மக்கள் நலத்திட்டங்களை உருவாக்குதலும் நடைமுறைப்படுத்துதலும் நடைபெறுகின்றன. இது நாட்டுக்கு மிக அவசியமானது. உற்பத்தியை மேம்படுத்த வேண்டியமை, பொருளாதார விருத்தியை வளர்த்தெடுத்தல் இரண்டும் மிக மிகத் தேவையானவை. இளைய தலைமுறையின் ஆற்றலையும் திறனையும் நாட்டின் உற்பத்தித்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்ற வகையில் ஒருங்கிணைப்பது நல்லது. மனித வளத்தைப் பயன்படுத்துதல் என்பது வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு மட்டுமல்ல, நாட்டைக் கட்டியெழுப்புவதில் மக்களைப் பங்காளிகளாக்குவதாகும். ஆகவே இவை வரவேற்கப்பட வேண்டியவை. 
 
இதில் அபிவிருத்தியே இலக்கு. அரசாங்கத்தின் தாரகக் கோட்பாடும் அதுவே. இனப்பிரச்சினைக்கான தீர்வையும் புதிய ஆட்சியாளர்கள் அபிவிருத்தியின் வழியாகவே பார்க்கிறார்கள். இது இன்று வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் ஒரு சிறப்பு உத்தி.  இவ்வாறான வழியிலேயே அரசாங்கம் சிந்திக்கிறது. இதில் அது நம்பிக்கையும் வைத்துள்ளதாகவே தெரிகிறது. இதன்படியான ஆலோசனைக்கும் இந்த வழிமுறைக்கும் அடையாளம் அபிவிருத்தியே. அபிவிருத்தியின் மூலம் சமூகங்களுக்கிடையில் தொடர்பாடலை மேம்படுத்தலாம்.
 
அதேவேளை மக்களின் தேவைகளை நிறைவேற்றி விட்டால் பிறகு அவர்களிடமிருந்து கோரிக்கைகளும் குரல்களும் எழாது. எதிர்ப்பும் உருவாகாது என்று சிந்திக்கப்படுகிறது. இந்தச் சிந்தனையின் தடத்திலேயே காரியங்கள் திட்டமிடப்படுகின்றன. இலங்கையை ஒரு புதிய சூழலுக்குள் இட்டுச் செல்வதாக இந்தத் திட்டங்கள் காணப்படுகின்றன.
 
இவற்றின் நடைமுறைச் சாத்தியங்கள் குறித்த கேள்விகள் உள்ளன. ஆனாலும் தான் ஒரு வினைத்திறனுள்ள ஜனாதிபதி என்பதை கோட்டாபய ராஜபக்ஷ காண்பித்து வருகிறார். இதில் அவர் குறியாகவும் உள்ளார். 
 
 
இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது?
 
இப்போதைய சூழலில் 19வது திருத்தத்தை நீக்க முடியாது. அப்படிச் செய்ய வேண்டுமானால் அது பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகே முயற்சிக்கப்பட வேண்டியது. அதுவும் அப்போது அமையவுள்ள அரசாங்கத்தின் பலத்தைப் பொறுத்தது. அப்படிப் பலமான அரசாங்கம் ஒன்று (பொதுஜன பெரமுனவின் தலைமையில்) அமைந்தாலும் அப்போது கூட 19ஆவதை மாற்றியமைக்க முடியுமா? என்பது கேள்வியே.
 
ஏனென்றால், 19ஐ மாற்றி ஜனாதிபதிக்கு அதிகாரங்களைக் கூட்டினால் பாராளுமன்றம் வெறும் கல்லறையாகி விடும். பிரதமர் பொம்மையாகி விடுவார். எனவே இதை ஏனையவர்கள் விரும்புவார்களா என்ற கேள்வியும் உண்டு.
 
அதற்கிடையில் எந்த வழியிலும் 19ஐ நீக்க முடியாது. அதற்கான சூழலும் இல்லை. ஆகவே இது மெல்ல மெல்ல இந்த மாதிரித்தான் அசைந்து நகர்ந்து கொண்டிருக்கும்.
 
எனவே, அடுத்த பொதுத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒரு கொந்தளிப்பான அரசியல் சூழலை எதிர்பார்க்கலாம். அரசாங்கத்துக்குள்ளேயே ஒரு அதிகாரப் போட்டிக்கு இடமுண்டு.
 
மறுபக்கத்தில் நடந்து கொண்டிருக்கின்ற அரசியல் நடவடிக்கைகளில் முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர்களான ராஜிதவும் சம்பிக்கவும் குற்றஞ்சாட்டப்பட்டு குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
 
இதில் சம்பிக்கவின் ஆதரவுத்தளம் முற்று முழுதாக சிங்கள தேசியவாதச் சிந்தனையாளர்களுடையது. ஆகவே சம்பிக்க மீதான நடவடிக்கைகள் சிங்கள பௌத்த அமைப்புகள், மக்கள், தலைவர்கள், மதகுருக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கும் என்று பார்க்க வேண்டும். கிடைக்கின்ற தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகளைத் தவறு என்று சொல்வோர் இப்பொழுது குறைவாக இருப்பதாகவே படுகிறது. பதிலாக இது அரசாங்கத்தின் சட்ட நடவடிக்கை என்று உணர்த்தப்படுகிறது. சட்ட  நடவடிக்கைக்கு முன்னே யாரும் குறுக்கே நிற்க முடியாது. இதை ஒத்த நிலையே ராஜிதவினுடையதும் ஆகும்.ராஜித சேனாரத்ன ஓரளவுக்கு அனைத்துச் சமூகங்களினாலும் மதிக்கப்பட்டவர். ஜே.வி.பி தொடக்கம் தமிழ் இயக்கங்கள் வரையில் அவருக்கு நெருக்கமாக இருந்திருக்கின்றன. அல்லது அவருக்கு ஏதோ ஒரு வகையில் அவற்றோடு அவ்வப்போது தொடர்பிருந்திருக்கிறது. ஆனால், இதல்லாவற்றையும் கடந்து அவர் கடந்த பொதுத் தேர்தலின் போது வெள்ளைவான் கடத்தலைத் தெரிந்தவர்கள் என இரண்டு பேரைக் கொண்டு வந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாடு அவரைக் கேள்விகளற்ற முறையில் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது.
 
ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு மிக்க அமைச்சர் மிகப் பாரதூரமான ஒரு விடயத்தில் இப்படிப் பொறுப்பற்று நடக்கலாமா? அப்படி உண்மைகளைத் தெரிந்தவர்கள் என்று தெரிந்தவுடன் அவர்கள் மூலமாக குற்றவாளிகளின் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு முயற்சித்திருக்க வேண்டும். பதிலாக தேர்தல் மேடைகளில் அதை வியாபாரப் பொருளாக்கியிருக்கக் கூடாது என்பது பலருடைய அபிப்பிராயம்.அதாவது தேர்தல் பரப்புரை வேறு. குற்றங்களோடு தொடர்புபட்டவர்களையும் கொலைக் குற்றங்களின் சாட்சியாளர்களையும் எப்படி பக்கத்தில் வைத்துக்  கொண்டிருப்பது? என்பது வேறு. அவர்களை முதலில் பொலிசாரிடம் ஒப்படைத்து இருக்க வேண்டும். ஆகவே குற்றங்களைத் தெரிந்தவர்கள், குற்றவாளிகளை நன்றாக அறிந்தவர்கள், இன்னும் இரகசியங்கள் ஏராளமாக உள்ளதென சொல்கின்றவர்களை பொலிசிடம் சேர்ப்பிப்பது ஒரு அமைச்சர் என்ற வகையில் முக்கியமான ஒரு விடயம். ஆனால் ராஜித இதைச் செய்யவில்லை.இப்பொழுது தேர்தல் முடிவுகள் வேறு விதமாக – ராஜிதவின் கணிப்பை மீறி நடந்ததால் நி​ைலமை மிகவும் சிக்கலானதாகி விட்டது. இதனால் ராஜித மறைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் தேடப்படும் ஒரு நபராகி, கைதியாகி, விசாணைக்குட்படுத்தப்பட்டு, பிணையில் வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.  இந்த அரசாங்கம் பெரும்பான்மைச் சிங்கள மக்களுடைய ஆதரவினால் உருவாகியது. ஆகவே சிங்கள மக்களின் அந்த ஆதரவை மிகக் கவனமாகக் கையாள வேண்டிய நிர்ப்பந்தம் இந்த அரசாங்கத்துக்குண்டு.அதேவேளை சிங்கள வரலாற்றில் ஒரு முதன்மைப் பாத்திரமாக உருவகிக்கப்படும் துட்ட கெமுனுவின் வரலாற்றில் இன்னொரு சிறப்புப் பெயராகக் கொள்ளப்படும் கோத்தபாயவை இன்றைய ஜனாதிபதியின் வருகையோடு சிங்கள மக்கள் பொருத்திப் பார்க்கிறார்கள். அப்படிப் பார்க்க வைக்கப்படுகிறார்கள்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்