Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி?

 தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி?

31 வைகாசி 2020 ஞாயிறு 14:17 | பார்வைகள் : 13083


சுமந்திரனின் போட்டியில் அவர் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களைக்  கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சுமந்திரனை விமர்சித்த பலரும் பேட்டியின் ஓரிடத்தில் ஒரு முக்கியமான கேள்விக்குரிய முக்கியமான பதிலை உற்று கவனிக்கத் தவறி விட்டதாகவே தெரிகிறது. நீங்கள் மறுபடியும் வெல்வீர்கள் என்று நம்புகிறீர்களா? என்று கேட்கப்பட்ட பொழுது சுமந்திரன் கூறுகிறார் “ஆம் “என்று. ஆணித்தரமாக அவர் அந்தப் பதிலைக்  கூறுகிறார்.
 
எந்த துணிச்சலில் அவர் அந்த பதிலை கூறுகிறார்? கடந்த முறை வென்றதைப்போல இந்தமுறையும் வெல்லலாம் என்று அவர் நம்புகிறாரா? அல்லது கடந்த ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் தனது வெற்றியை உறுதிப்படுத்தும் விதத்தில் அவர் திட்டமிட்டு வேலை செய்திருக்கிறாரா?
 
இந்த கேள்விக்கான விடை மிகவும் முக்கியம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் சுமந்திரன் வெல்வதற்கான வாய்ப்புகள் சந்தேகத்துக்கு உரியவை என்று நம்பப்பட்டது. எனினும் அவர் வென்றார். இம்முறையும் தான் வெல்வேன் என்று உறுதியாக நம்புகிறார். அந்த நம்பிக்கை எங்கிருந்து வருகிறது ? தமிழரசுக் கட்சிக்குள்ள பாரம்பரிய வாக்கு வங்கியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையிலிருந்து வருகிறதா? அல்லது அவருடைய கடும் உழைப்பில் இருந்து வருகிறதா ?அல்லது தமிழ் வாக்காளர்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது என்ற நம்பிக்கையிலிருந்து  வருகிறதா?
 
சுமந்திரனை எதிர்க்கும் பலரும் இந்த விடயத்தை ஆழமாக ஆராய வேண்டும். கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் வாக்காளர்கள் மத்தியில் தமிழ் தேசிய வாக்கு வங்கிக்கு வெளியே சிறு சிறு வாக்கு வங்கிகள் கட்டி எழுப்பப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தேவானந்தாவுக்கு ஒரு பலமான வாக்கு வங்கி இருந்தது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யப் போதுமான அந்த வாக்கு வங்கி கடந்த 11 ஆண்டுகளில் தேய்ந்து வருக்கிறது. எனினும்  இப்பொழுதும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கத் தேவையான அளவுக்கு அது பலமாக இருப்பதாகவே தெரிகிறது. தேவானந்தாவுக்கு வெளியே விஜயகலா அங்கஜன் பிள்ளையான் போன்றோருக்கும் வாக்கு வங்கிகள் வளர்ந்து வருகின்றன.
 
கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்தேசிய பரப்புக்கு வெளியே தேசிய நோக்குநிலை அற்ற   அல்லது அதற்கு எதிரான சிறு சிறு வாக்கு வங்கிகள் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் வளர்ச்சியுற்று வருகின்றன. இவை வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. தங்களைத்  தமிழ்த் தேசியவாதிகளாக காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள்  விட்ட வெற்றிடமே இந்த தமிழ் தேசிய நீக்கம் செய்யப்பட்ட வாக்கு வங்கிகளின் அல்லது தமிழ்தேசிய எதிர் வாக்கு வங்கிகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஆகும். அதாவது கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்தேசியவாதிகள் பொருத்தமான அரசியல் தரிசனங்களோடு வாக்காளர்களை அணிதிரட்டத் தவறிய ஒரு வெற்றிடத்தில் இப்படிப்பட்ட வாக்கு வங்கிகள் உற்பத்தியாகி பலமடைந்து வருகின்றன. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய வறுமை அறியாமை சாதி ஏற்றத்தாழ்வுகள் சமூக ஏற்றத்தாழ்வுகள் மத முரண்பாடுகள் போன்றவற்றை சமயோசிதமாக கையாண்டு இந்த வாக்கு வங்கிகள் விருத்தி  செய்யப்படுகின்றன. இவ்வாறு கருத்து ரீதியாகவும் நடைமுறை அனுபவ ரீதியாகவும் தமிழ்தேசிய வாக்கு வங்கியில் இருந்து உடைந்து போகும் வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதற்கு இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் பலமான அரசியல்வாதிகள் வந்துவிட்டார்கள்.
 
சுமந்திரனும் அவர்களில் ஒருவர்தான். ஆனால் அவர் தமிழ்த் தேசியக் கொடியின் கீழ் அதைச் செய்கிறார் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. சுமந்திரனின் தொடக்க கால வாக்காளர்கள் பெருமளவிற்கு தமிழ்தேசிய தன்மை மிக்கவர்கள். கூட்டமைப்பின் வாக்கு வங்கிதான் அது. கூட்டமைப்பின் பேரால் தான் சுமந்திரன் வாக்கு கேட்டார். எனவே அந்த வாக்கு வங்கியின் அடித்தளம் தமிழ்தேசிய ஆதரவு தளம் தான்.
 
கடந்த வெள்ளிக் கிழமை நடந்த கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் கதைத்த சம்பந்தர் சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பேட்டி கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தைச் செலுத்துமெனப் பரவலாகத் தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.
 
எனினும் தன்னுடைய சர்ச்சைக்குரிய பேட்டியும் உட்பட தான் தொடர்ச்சியாக தெரிவித்து வரும் கருத்துக்கள்  தனது வாக்கு வங்கியை பலவீனப்படுத்தலாம் என்பதை நன்கு தெரிந்திருந்தும் சுமந்திரன் எந்தத் துணிச்சலில் அவ்வாறு கதைத்தும் செயற்பட்டும் வருகிறார் ?
 
விடை மிக எளிமையானது. தமிழ்தேசிய நீரோட்டத்துக்கு வெளியே ஒரு வாக்கு வங்கி தனக்கு உண்டு என்று அவர் வலிமையாக நம்புகிறார். அங்கஜனும்  டக்ளஸ் தேவானந்தாவும் விஜயகலாவும் சந்திரகுமாரும் நம்புவதைப் போல சுமந்திரனும் நம்புகிறார். தனது வெளிப்படையான கருத்துக்களை கேட்ட பின்னரும் தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் தனக்கு எதிராக திரும்பப் போவதில்லை என்று அவர் நம்புகிறார்.அப்படி நம்பும் அளவுக்கு அவர் வேலை செய்கிறார். தனது வாக்கு வங்கியை கடந்த பத்தாண்டுகளில் தான் எப்படித் திட்டமிட்டுக் கட்டி எழுப்பினார் என்பது சுமந்திரனுக்கு தெரியும். அதன் பலன் தனக்கு கிடைக்கும் என்று அவர் நம்புகிறாரா?
 
இந்த இடத்தில் ஓர் ஆகப் பிந்திய உதாரணத்தை சுட்டிக்காட்ட வேண்டும். வட மாகாணசபையில் முக்கிய பொறுப்பை வகித்த ஒரு அரசியல்வாதி என்னிடம் சொன்னார்…”கோவிட் -19 ற்காக நிவாரண பொருட்களை வழங்கிய பொழுது பழக நேர்ந்த சில நபர்கள் தெரிவித்த அரசியல் கருத்துக்கள் தமிழ்தேசிய எதிர்நோக்கு நிலையை கொண்டவைகளாக காணப்பட்டன “என்று. “தமிழ்த்தேசிய நீக்கம் செய்யப்படட ஒரு தொகுதி வாக்காளர்கள் திரண்டு வருகிறார்கள் ” என்று. தமிழ்தேசிய நோக்கு நிலைக்கு எதிராக மிக இயல்பாக ஒரு வாக்கு வங்கி வளர்ச்சியுற்று வருகிறது. வரலாறு தெரியாமல் அல்லது திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றை நம்பியோ அல்லது தமிழ் தேசியவாதிகளாக தெரியும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் நடவடிக்கைகளில் விரக்தியடைந்து ஒரு தொகுதி வாக்காளர்கள் சுமந்திரனை போன்றவர்களின் பின் போகிறார்கள். இது ஓர் இயல்பான வளர்ச்சி போல நடந்து வருகிறது. சுமந்திரனை குறைகூறும் பலரும் இவ்வாறு தென்னிலங்கை கட்சிகளுக்கும் சுமந்திரனைப்  போன்றவர்களுக்கும் எப்படி வாக்குகள் திரளுகின்றன என்பதைக் குறித்து ஆழமாக ஆராய வேண்டும்.
 
தமிழ் தேசியக் கொடியின் கீழ் அதற்கு எதிரான ஒரு வாக்கு வங்கியை சுமந்திரன் மட்டும் கட்டியெழுப்பவில்லை. சுமந்திரனின் பேட்டியை நியாயப்படுத்திய சம்பந்தனின் தலைமையின் கீழ் கட்சிக்குள்  வேறு சிலரும் அவ்வாறான நிலைப்பாட்டோடு காணப்படுகிறார்கள். ஆனாலவர்கள் சுமந்திரனைப் போல வெளிப்டையாகக் கதைப்பதில்லை. அதாவது தமிழ் தேசியக் கொடியின் கீழ் தமிழ் தேசிய நீக்கம் செய்யப்பட்ட ஒரு வாக்கு வங்கி வளர்க்கப்படுகிறது.
 
சுமந்திரன் ஒரு தனிமனிதர் அல்ல. அவருக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் ஆதரவாளர்கள் உண்டு. மாகாணசபை மட்டத்திலும் ஆட்கள் உண்டு. அவர் வட மாகாண சபைக்குள் ஒரு பலமான அணியை வைத்திருந்தார். உள்ளூராட்சி சபை மட்டத்திலும் அவருக்கு விசுவாசிகள் கூட்டம் ஒன்று உண்டு. தவிர அரசு அலுவலர்கள் புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் அவருக்கு வேலை செய்பவர்கள் உண்டு. முகநூலில் அவருக்காக  பிரச்சாரம் செய்பவர்களைப்  பார்த்தால் அது தெரியும். ஒரு அணியாக அவர்கள் இயங்கி வருகிறார்கள்.சட்டவாளர் தவராசாவை தேசியப் பட்டியலின் மூலம் உள்வாங்குவதற்கு தடையாக இருப்பது சுமந்திரன் என்று கூறி கட்சிக்குள் ஒருபகுதியினர் அவருக்கு எதிராக காணப்படுகிறார்கள். அவருடைய அரசியல் நிலைப்பாட்டுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு பலப்பட்டு வருகிறது. எனினும் இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் தனக்கென்று மிகப் பலமான ஆதரவுத்  தளம் ஒன்றைக்  கட்டியெழுப்பி வைத்திருக்கிறார். அதற்கு கட்சித் தலைமையின் ஆசீர்வாதமும் உண்டு.
 
சுமந்திரனின் ஆதரவாளர்கள் யார் யார் என்று பார்த்தால் அவர்கள் அனைவரும் பிறகு ஒரு காலம் சுமந்திரன் தங்களை நல்ல நிலைக்கு உயர்த்துவார் என்று நம்புவோராகக் காணப்படுகிறார்கள். எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற கனவுடன் காணப்படும் பலரும் அவ்வாறு நம்புகிறார்கள். ஊடகத்துறைக்குள்ளும் கல்விச்  சமூகத்துக்குள்ளும் அரசு அலுவலர்கள் மத்தியிலும் இவ்வாறாக எதிர்காலத்தில் சுமந்திரன் தங்களுக்கு உரிய பதவிகளைத் தருவார் என்று நம்பிக்  காத்திருக்கும் ஒரு தொகை வளர்ந்து வருகிறது.
 
சுமந்திரனை நம்பினால் வாக்குறுதி அளிக்கப்பட்ட பதவிகளை அவர் தமக்கு வழங்குவார் அவர் வாக்குறுதி அளித்த வெற்றியை தமக்கு எப்படியாவது பெற்றுத் தருவார் என்று நம்பும் ஒரு தொகுதி  படித்தவர்கள் இப்பொழுது கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியில் காணப்படுகிறார்கள். யாழ் மாநகர சபையில் ஆர்னோல்ட்டை  சுமந்திரன் எப்படி வெல்ல வைத்தார் என்ற முன்னுதாரணம் அவர்களைக் கவர்ந்திழுக்கிறது. அரசியலில் ஈடுபட்ட விரும்புகின்ற அல்லது ஏற்கனவே அரசியலில் ஈடுபட்டு அடுத்தடுத்த நிலைப்  பதவி உயர்வுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்ற கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பலர் மத்தியிலும்  சுமந்திரனை விசுவாசித்தால் தாம் கனவுகாணும் பதவிகள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை உண்டு. இந்த நம்பிக்கைக்கு ஆர்னோல்ட் ஓர் முன்னுதாரணமாக காணப்படுகிறார்.
 
எனவே சுமந்திரனை விமர்சிப்பவர்களும் சம்பந்தரை விமர்சிப்பவர்களும் ஒரு விடயத்தை தெளிவாக உணர வேண்டும். தமிழ் தேசியக் கொடியின் கீழேயே அதற்கு எதிரான அல்லது தேசிய நீக்கம் செய்யப்பட்ட வாக்குவங்கி  ஒன்று வளர்ந்து வருகிறது. கூட்டமைப்பை யார் உருவாக்கியது என்ற விவாதத்தில் நீங்கள் தலையைப் பிளந்து  கொண்டிருக்க தமிழ் தேசிய நீக்கம் செய்யப்படட வாக்கு வங்கிகள் வளர்ந்து வருகின்றன. இந்த வாக்கு வங்கிகளை உடைக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கட்சிகள் அனைத்துக்கும் உண்டு அதை எப்படி உடைக்கலாம்?
 
ஒரே ஒரு வழிதான் உண்டு தமிழ்த் தேசிய வாக்களிப்பு அலை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அந்தப் பேரலைக்குள் சிறிய சிறிய வாக்கு வங்கிகள் கரைந்து போய்விடும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எப்படி சிறிய சிறிய வாக்கு வங்கிகள் கரைந்தனவோ அப்படித்தான். எனவே ஒரு தேசிய வாக்களிப்பு அலையை உற்பத்தி செய்தால் மட்டும்தான் மேற்சொன்ன சுமந்திரனை போன்றவர்களின் வாக்கு வங்கிகளை உடைக்கலாம். அதற்கு ஒரே ஒரு முன்நிபந்தனை தான் உண்டு. கூட்டமைப்பை விடப்  பலமான ஓர் ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்பினால் மட்டும்தான் தமிழ்த் தேசிய வாக்களிப்பு அலையொன்று தோன்றும்.  இல்லையென்றால் வாக்குகள் சிதறும்.அப்படிச் சிதறும் வாக்குகளை அங்கஜன் அள்ளிச் செல்வார். விஜயகலா அள்ளிச் செல்வார். சுமந்திரனும் அள்ளிச் செல்வார். வடை போய்ச்சே… ?

வர்த்தக‌ விளம்பரங்கள்