Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

அன்னையரின் கண்ணீரைப் பிரிக்காதீர்கள்!

அன்னையரின் கண்ணீரைப் பிரிக்காதீர்கள்!

6 புரட்டாசி 2020 ஞாயிறு 18:01 | பார்வைகள் : 16145


அம்பாறை மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பு நடந்து முடிந்த தேர்தலில் அம்மாவட்டத்தில் போட்டியிட்ட கருணாவை ஆதரிப்பதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது. அவ்வறிவித்தலின் பின்னணியில் தேர்தலுக்குப் பின் அண்மையில் அந்தச்  சங்கத்தின் அலுவலகம் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டது.
 
தேர்தலுக்கு முன் கிளிநொச்சியில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான  சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் சுமந்திரனுக்கும் சிறிதரனுக்கும் வாக்களிக்கக் கூடாது என்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
 
வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது என்று பகிரங்கமாக முடிவெடுத்தது.கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் அந்த அமைப்பு பங்குபற்றவில்லை. பதிலாக சனிக்கிழமை வவுனியாவில் அது ஒரு எதிர்ப்பு நடவடிக்கையை ஒழுங்குபடுத்தியது.
 
அதேசமயம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஞாயிற்றுக் கிழமை நடக்கவிருந்த பேரணிக்கு முன்னதாக சனிக்கிழமை யாழ் நகரப் பகுதியில் அரசியல் கைதிகளுக்காக நீதி கோரி ஓரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியது.ஆனால் ஞாயிற்றுக் கிழமை யாழ் நகரப் பகுதியிலிருந்து  நடந்த பேரணியில் அக்கட்சி பங்குபற்றவில்லை.
 
ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் ஒப்பீட்டளவில் அம்பாறை மட்டகளப்பு மாவட்டங்களில் போராடும் அமைப்புக்கள் ஒற்றுமையாகத் திரண்டு தமது எதிர்ப்பைக் காட்டின. பொலிஸார் தடைகளை ஏற்படுத்திய போதிலும் அங்கு உள்ள அமைப்புகள் துணிச்சலாகத் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.
 
திருகோணமையில் கடற்கரையில் ஒரு கவன ஈர்ப்பு. ஆளுனர் அலுவலகத்திற்கு முன் ஒரு கவன ஈர்ப்பு. ஒற்றுமையில்லை.
 
வடக்கில் கிளிநொச்சியில் ஒரு சிறு ஊர்வலம் நடந்தது.முல்லைத்தீவில் ஒரு சிறு ஊர்வலம் நடந்தது. அவை  யாழ்பாணத்தில் நடந்த ஊர்வலத்தோடு இணையவில்லை.
 
யாழ்ப்பாணத்தில் இரண்டு ஊர்வலங்கள் நடந்தன. ஒன்று பெரியது. அது  நகரத்திலிருந்து தொடங்கி கச்சேரியை சென்றடைந்தது. மற்றது ஒப்பீட்டளவில் சிறியது. அது கிட்டு பூங்காவில் இருந்து தொடங்கி ஐநா அலுவலகத்தை சென்றடைந்தது. பெரிய ஊர்வலத்தில் பெரும்பாலான தமிழ் கட்சிகள் பங்குபற்றின. ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் அதில் பங்கு பற்றக்கவில்லை.
 
அதேசமயம் அக்கட்சியோடு தற்பொழுது முரண்பட்டு நிற்கும் மணிவண்ணன் அணியினர் அந்த ஊர்வலத்தில் காணப்பட்டார்கள். அதேசமயம்  கிட்டு பூங்காவில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியினர் காணப்பட்டார்கள். இவ்வாறு ஒரே மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்புக்கள் இரண்டாகப் பிரிந்து ஊர்வலம் நடத்த வேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டது? என்று சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டேன்.
 
யாழ்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தைச் சேர்ந்த ஒரு முதிய அம்மா சொன்னார் “ஊர்வலத்துக்கு சிலநாட்கள் முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் நிலை முக்கியஸ்தர் ஒருவரோடு நான் கதைத்தேன்.  அக்கட்சி ஞாயிற்றுக் கிழமை நடக்கவிருந்த ஊர்வலத்தில் பங்கேற்கப் போவதில்லை என்ற தொனிப்பட அவர் பதில் கூறினார்” என்று. கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த அமைப்பின் முக்கியஸ்தரான அம்மா ஒருவர் பல மாதங்களுக்கு முன்பு தமது கட்சிக்கு எதிராக தெரிவித்திருந்த கடுமையான விமர்சனங்களின் பின்னணியிலேயே தாங்கள் இவ்வாறு முடிவு எடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். நடந்து முடிந்த தேர்தலுக்கு முன் சுமந்திரன் சிறிதரனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததும் கிளிநொச்சியைச் சேர்ந்த இதே அம்மா  தான் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
 
அந்த ஒரு அம்மா தெரிவித்த கருத்துக்காக நீங்கள் முழுப் போராட்டத்தையும் புறக்கணிக்க வேண்டாம் என்ற தொனிப்பட யாழ்பாணச் சங்கத்தைச் சேர்ந்த அந்த அம்மா மேற்படி கட்சி முக்கியஸ்தரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். எனினும் அடுத்த நாள் யாழ்ப்பாணத்தில் இரண்டு ஊர்வலங்கள் இடம்பெற்றுள்ளன.
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஊர்வலத்துக்காக பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிக்கொண்டு யாழ் நகரத்தை நோக்கி வந்த ஒரு பேருந்து திசை திருப்பப்பட்டு  வேறு ஒரு ஊர்வலத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. பூநகரியில் ஒரு பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடக்கவிருந்த பேரணியில் பங்குபற்றுவதற்காக காத்திருந்த மக்களை ஏற்றுக் கொண்டு வந்த ஒரு பேருந்து வேறு ஒரு ஊர்வலத்தில் அவர்களை இறக்கி விட்டிருக்கிறது.
 
கடந்த 30 ஆம் திகதியும் அதற்கு முன் பின்னாகவும் நடந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்களின் தொகுக்கப்பட்ட காட்சி இது.
இது எதைக் காட்டுகிறது? காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் சங்கங்களுக்கு இடையே ஐக்கியம் இல்லை என்பதனையா? அல்லது அந்த சங்கங்கள் ஐக்கியப்பட முடியாதபடி அவை கட்சிகளால் பிரிக்கப்படுகின்றன என்பதயா?அல்லது அச்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கட்சிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் எடுக்கும் நிலைப்பாடுகள் ஐக்கியப்படுவதற்குத்  தடையாகக் காணப்படுகின்றனவா?
 
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல காணிக்கான போராட்டம் ;அரசியல் கைதிகளுக்கான போராட்டம் உள்ளிட்ட எல்லா மக்கள் போராட்டங்களும் கட்சி அரசியலுக்கு வெளியே பொதுமக்கள் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறான பொதுமக்கள் அமைப்புகளோ அல்லது செயற்பாட்டு அமைப்புகளோ தமிழ் மக்கள் மத்தியில் இல்லாத ஒரு வெற்றிடத்தில் அல்லது அப்படிப்பட்ட அமைப்புகளால் தலைமை தாங்குவதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான  சங்கங்கள் தயாராக இல்லாத ஒரு பின்னணியில் கடந்த 11 ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான  போராடங்கள் தேங்கி நிற்கின்றன. உரிய நீதியும் கிடைக்கவில்லை உரிய இழப்பீடும் கிடைக்கவில்லை.
 
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் சங்கங்கள் தங்களுக்கிடையே ஐக்கியப்பட முடியாமைக்கு இரண்டு தரப்புகளின் மீது குற்றம் சாட்டப்படுகிறது
 
முதலாவது- கட்சிகள். கட்சிகள் அந்தத் தாய்மாரை ஒன்றிணைக்கும் சக்தியற்று காணப்படுகின்றன. அல்லது கட்சிகளே அவர்களைப் பிரிக்கின்றன. அந்தத் தாய்மார் குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் காணப்பட்டாலும் அவர்களைக் கட்சி கடந்து ஒன்றிணைக்க எந்தக் கட்சித் தலைமையாலும் இன்று வரை முடியவில்லை.
 
அந்த தாய்மார் அரசியல் விளக்கத்தோடு போராட முன்வரவில்லை. இழப்பின் வலியே அவர்களைப் போராடத் தூண்டுகிறது.புத்திரசோகம்தான் அவர்களுடைய போராட்டத்தின் உணர்ச்சிகரமான அடித்தளம். எனவே அவர்களுக்கு அரசியல் விளக்கத்தைக் கொடுக்க வேண்டியதும் அந்த விளக்கத்தின் அடிப்படையில் அவர்களை ஒன்றிணைக்க வேண்டியதும் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும்தான். அந்தத் தாய்மார் ஏதாவது பிழை செய்திருந்தால் அதைப் பிள்ளைகளின் இடத்திலிருந்து பொறுத்துக் கொள்ள வேண்டியது கட்சிகளின் கடமையாகும். அவர்கள் பிழை விடுகிறார்கள் என்று கூறி ஏற்கெனவே நொந்து போயிருக்கும் அந்த தாய்மாரைப் பிரித்துக் கையாளக் கூடாது. நீதிக்கான போராட்டத்தின் ஒரு பகுதியே அவர்களுடையது. நீதிக்கான போராட்டம் என்பது தமிழ் தேசியத் திரட்சியினால் மட்டுமே வெற்றி பெறும். தேசியம் எனப்படுவது ஆகப் பெரிய திரளாக்கம் என்று புறப்பட்ட கட்சிகள் பாதிக்கப்பட்ட தாய்மாரைக் கூறு போடலாமா? இது யாருக்குச் சேவகம் செய்வதில் போய் முடியும் ?
 
.இரண்டாவது காரணம்- காணாமல் ஆக்கப்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புக்களைப் பின்னிருந்து ஊக்குவிக்கும் புலம்பெயர்ந்த அமைப்புக்கள் அல்லது தனி நபர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இந்தச் சங்கங்களை ஐக்கியப்பட விடுவதில்லை என்பது.
 
இந்த இடத்தில் ஒரு உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவியின்றி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இவ்வாறு ஆயிரம் நாட்களுக்கு மேலாக போராடியிருக்க முடியாது. எந்த உதவி அவர்களைத்  தளராமல் போராட வைக்கிறதோ அதே உதவிதான் அவர்களைப் பிரித்தும் கையாள்கிறது. குறிப்பிட்ட அமைப்புகளுக்கு உதவிபுரியும் புலம்பெயர்ந்த தரப்புகள் அந்த அமைப்புகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புகின்றன. எனவே இந்த அமைப்புகள் தங்களுக்கு இடையே ஐக்கியப்படுவதற்கு அவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்று அண்மை ஆண்டுகளில் இந்த அமைப்புகளை ஐக்கியப்படுத்த முயற்சித்த செயற்பாட்டாளர்களும்  சிவில் அமைப்புக்களும் தெரிவிக்கின்றனர்.
 
இவ்வாறு  கட்சி அரசியலுக்குள்ளும் புலம்பெயர்ந்த தரப்புகளின் உபயகாரர் மனோநிலை காரணமாக ஏற்படும் முரண்பாடுகளுக்குள்ளும் சிக்கி காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடும் அமைப்புக்கள் தங்களுக்கிடையே ஐக்கியப்பட முடியாமல் இருக்கின்றன. இந்த ஐக்கியமின்மையின் விளைவை வடக்கிலும் கிழக்கில் திருகோணமலையிலும்  கடந்த ஞாயிற்றுக்கிழமை காணக்கூடியதாக இருந்தது.
 
ஒருபுறம் சிங்கள மக்களை ஆகக்கூடிய பெருந்திரள் ஆக்கி ராஜபக்சக்கள் அசுர பலத்தோடு நாடாளுமன்றத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் இன்னொருபுறம் தோற்கடிக்கப்பட்ட மக்களும் அரசற்ற  தரப்பும் நீதி கோரிப் போராடும் தரப்புமாகிய தமிழ் மக்கள் கட்சிகளாலும் உதவி புரியும் நபர்கள் மற்றும் அமைப்புக்களாலும் பிரிக்கப்படுகிறார்களா?
 
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் மட்டுமல்ல இது போன்ற நீதி கோரும் எல்லாப் போராட்டங்களும் கட்சி சம்பந்தப்படாத அல்லது கட்சி கடந்த தேசியப் பேரியக்கம் ஒன்றினால்  முன்னெடுக்கப்பட வேண்டும். சாதாரண ஜனங்கள் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் அப்படித்தான். ஆனால் அவர்களுடைய தனிப்பட்ட கட்சிச் சாய்வுகள் அந்த சங்கங்களின் பொதுத் தன்மையை கட்சி சாரா தன்மையை சிதைக்கக் கூடாது. ஒரு கட்சிக்கு ஆதரவாக பகிரங்கமாக நிலைப்பாடு எடுப்பதும் ஒரு கட்சியை எதிர்த்து பகிரங்கமாக கருத்து தெரிவிப்பதும் நீதி கோரிப் போராடும் அமைப்புகளை பலவீனப்படுத்தும். கட்சிகள் மக்களை வாக்காளர்களாகவே பார்க்கும். வாக்காளர்கள் கட்சி சார்ந்து பிரிந்து நிற்பார்கள். எனவே மக்களை வாக்காளர்களாக பிரித்துப் பார்க்கும் கட்சி அரசியலுக்கு வெளியே மக்களை ஆகப்பெரிய திரட்சி ஆக்கும் மக்கள் இயக்க அரசியலை நோக்கி காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான  போராட்டம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அது கட்சிச் சாய்வுகளினாலோ அல்லது வெளியில் இருந்து உதவி செய்யும் நிதி உதவியாளர்களின் நிகழ்ச்சி நிரல்களினாலோ பிரிக்கப்பட முடியாத கட்டிறுக்கமான ஐக்கியப்பட்ட போராட்டமாக மாற வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு கட்சியும் அல்லது உதவி புரியும் அமைப்பும் பாதிக்கப்பட்ட அன்னையரை தங்கள் தங்கள் நிலைகளிலிருந்து பிரித்துக் கையாளுவார்கள். இது ஒரு கட்டத்தில் காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கான போராட்டத்தையே காணாமல் ஆக்கிவிடுமா ?

வர்த்தக‌ விளம்பரங்கள்