Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இலங்கையில் தொற்றாநோய்களால் வேகமாக அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இலங்கையில் தொற்றாநோய்களால் வேகமாக அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

12 தை 2021 செவ்வாய் 13:13 | பார்வைகள் : 15226


புகையிலை பாவனை, புகைப்பிடித்தல் மற்றும் மதுபாவனை போன்றன ஒழிப்பு தொடர்பில் பத்தரமுல்ல ‘வோட்டர்ஸ் எஜ்’ ஹோட்டலில் அண்மையில் விஷேட செயலமர்வு நடைபெற்றது. 

 
இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் தொற்றா நோய்கள் பெரிதும் அதிகரித்துள்ளன. தொற்றா நோய்கள் மனித வரலாற்றில் முன்னொரு போதுமே இவ்வாறு அதிகரித்திருக்கவில்லை. அதுவும் நவீன அறிவியலில் அபரிமித வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் இந்த யுகத்தில் இவ்வகை நோய்கள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
இவ்வகை நோய்கள் அதிகரிப்பதற்கு உணவு, நடத்தை மற்றும் பழக்க வழக்கம் என்பவற்றில் குடிபுகுந்துள்ள உடல், உள ஆரோக்கியத்துக்கு பொருத்தமற்றவை காரணிகளாக விளங்குவது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அவற்றில் புகையிலை உட்கொள்ளல், புகைபிடித்தல் மற்றும் மதுபாவனை என்பன முக்கியமானவையென ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. 
 
இவற்றின் பாவனை மற்றும் பழக்கவழக்கங்களால் பலவிதமான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. ஆனால் அப்பாதிப்புகள் உடனடியாக வெளிப்படாததன் விளைவாகவே அவை குறித்து பெரிதாகப் பொருட்படுத்தப்படாத நிலைமை காணப்படுகின்றது. இப்பழக்கவழக்கங்களின் விளைவாக  ஒருவரின் ஆயுட்காலம் சுமார் 20 வருடங்களால் குறைவடைய முடியுமென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன என்று சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் லக்ஷமி சோமதுங்க குறிப்பிடுகின்றார்.
 
ஆயுட் காலத்தில் இருபது வருடங்கள் என்பது ஒரு சாதாரண காலப் பகுதி அல்ல. புகையிலை பாவனை மற்றும் புகைப்பிடித்தலால் ஏற்படும் நோய்களால் வருடமொன்றுக்கு 8 மில்லியன் பேர் உலகெங்கிலும் மரணமடைவதாக உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பிட்டிருக்கின்றது. அதேநேரம் மதுப்பாவனையின் விளைவாக ஏற்படும் நோய்களாலும் சுமார் 3 மில்லியன் பேர் உலகெங்கிலும் மரணமடைவதையும் மறந்து விட முடியாது.
 
இலங்கையில் புகையிலை பாவனை மற்றும் புகைப்பிடித்தலுக்காக   நாளொன்றுக்கு 38 கோடி ரூபாவும் மதுப்பாவனைக்காக  57 கோடி ரூபாவும் செலவிடப்படுகின்றது. புகையிலையின் விளைவாக ஏற்படும் நோய்களால் தினமும் 55 பேரும், மதுப்பாவனையால் ஏற்படும் நோய்களால் தினமும் 50 பேரும் மரணமடைகின்றனர்' என்று புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்ர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.
இவரது தரவுகளின்படி, புகையிலை, மதுப்பாவனையினால் நாளொன்றுக்கு 100 கோடி ரூபா இழக்கப்படுவது தெளிவாகின்றது.
அதேநேரம் இப்பழக்கவழக்கங்களால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவென சுகாதார அமைச்சு வருடா வருடம் கோடிக்கணக்கில் செலவிடுவதையும் மறந்து விட முடியாது. இருந்தும் அரசின் செலவினம் பெரிதாக உணரப்படாத நிலைமையே காணப்படுகின்றது. ஏனெனில் இலவச சுகாதார சேவை நடைமுறையில் இருப்பதே அதற்கான காரணமாகும். எனவே உண்மை யதார்த்தத்தைப் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
இதேவேளை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான சிறுவர் நோயியல் நிபுணர் டொக்டர் அநுருத்த பாதெனியவின் கருத்துப்படி, 2010 ஆம் ஆண்டளவில் இந்நாட்டில் சுமார் 70 வீதமாகக் காணப்பட்ட தொற்றா நோய்கள் தற்போது 80 வீதத்துக்கும் மேல் அதிகரித்திப்பதாகத் தெரிகின்றது. இந்நிலைக்கு புகையிலை மற்றும் மது என்பன பெரிதும் பங்களிக்கின்றன.
 
பொதுவாக புகையிலை மற்றும் மதுப்பாவனை காரணமாக புற்றுநோய் ஏற்படலாம் என்ற கருத்து பரவலாகக் காணப்படுகின்றது. இந்நாட்டில் அதிகளவானோர் வாய்ப்புற்று நோய்க்கு உள்ளாகக் கூடியவர்களாக உள்ளனர். அதற்கு இப்பாவனைகள் தான் முக்கிய காரணமென   சுட்டிக் காட்டிய   சுகாதார அமைச்சின் புற்றுநோய்கள் கட்டுப்பாட்டுக்கான தேசிய வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன, 'புகையிலை பாவனை மற்றும் புகைப்பிடித்தலின் விளைவாக சுமார் 15 விதமான புற்றுநோய்களும், மதுப்பாவனையின் விளைவாக சுமார் 05 வகையான புற்றுநோய்களும் ஏற்பட முடியும்' என அவர் கூறியுள்ளார்.
 
புகையிலை பொருட்களில் நிக்கொட்டின், அமோனியா,சயனைட், தார் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கடும் நச்சுப் பதார்த்தங்கள் அடங்கலாக சுமார் 4 ஆயிரம் இரசாயனப் பதார்த்தங்கள் காணப்படுகின்றன. அவை புற்றுநோய்களுக்கு மாத்திரமல்லாமல் ஏனைய தொற்றா நோய்களுக்கும் காரணமாக அமையக் கூடியவையே. 
 
புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு புகைபிடிக்காதவர்களை விடவும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு மூன்று மடங்குகள் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.  இந்நாட்டில் தொற்றாநோய்களில் பிரதான இடத்தைப் பெற்று இருப்பது  இதய நோய்களேயாகும். இந்நாட்டின் 1997 முதலான சுகாதாரத் தரவுகளை எடுத்துப் பார்த்தால் அதிக மரணங்கள் இதய நோய்களால் ஏற்பட்டிருப்பதை அவதானிக்கலாம். இதற்கு புகையிலை பெரிதும் பங்களித்திருக்கின்றது.
 
அதேநேரம் இதய நோய்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தொற்றாநோயாக பக்கவாதம் விளங்குகின்றது. இப்பாதிப்பு புகைப்பவர்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பாவனை கொண்டவர்களுக்கு நீரிழிவு ஏற்பட்டு அவர்களது பாதங்களில் காயங்கள் ஏற்படுமாயின் அதன் விளைவாக பாதத்தை அகற்றக் கூடிய நிலைமையும் ஏற்படலாம்.
 
அத்தோடு நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுகின்றவர்களை எடுத்துப் பார்த்தால் அவர்களில் அரைப்பங்கினர் புகைபிடித்தல் மற்றும் புகையிலைப் பழக்கம் கொண்டவர்களாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு ஏற்படக் கூடிய அச்சுறுத்தலைக் கொண்டிருப்பவர்களுக்கு புகைபிடித்தல் பழக்கம் அப்பாதிப்பை விரைவுபடுத்த முடியும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
அத்தோடு புகைபிடித்தல் மற்றும் புகையிலைப் பாவனையின் விளைவாக இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதற்கான அச்சுறுத்தல் 8 மடங்காகக் காணப்படுகின்றது. சுவாசத்தொகுதி தொடர்பான நாட்பட்ட நோய்  ஏற்பட புகைபிடித்தல் சுமார் 90 வீதம் பங்களிக்கின்றது.
 
மேலும் புகைபிடிப்பவர் வெளிவிடும்யே புகையை சுவாசிப்பதால் புகைபிடிக்காதவருக்கும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படவே செய்கின்றன. குறிப்பாக புகைபிடிப்பவர் வாழும் வீடுகளில் உள்ள பிள்ளைகளும், பெண்களும் சுவாசத் தொகுதி தொடர்பான பலவிதமான நோய்களுக்கு உள்ளாகக் கூடியவர்களாக உள்ளனர். ஆஸ்துமா நோய்க்கும் புகைபிடித்தல் காரணம் ஆகும். 
 
இவ்வாறான ஆபத்தான பழக்கங்களை தவிர்த்துக் கொண்டால் பாதிப்புகள் தானாகவே பெரும்பாலும் நீங்கி விடும்.  இந்நாட்டில் புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுப்பாவனைக்கான செலவு பொருளாதார ரீதியில் பெரும் இழப்பாக அமைகின்ற அதேநேரம், அப்பாவனையினால் ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க செலவிடுப்படுகின்ற பணமும் மிக அதிகமாகும். 
 
ஆகவே புகையிலை பாவனை, புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பாவனையை தவிர்த்துக் கொள்வதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். அது தமக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டுக்கும் நன்மையாக அமையும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்