Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஐநா கூட்டத்தொடரின் பின்னணியில் நிலம் பற்றிய உரையாடல்கள்!

ஐநா கூட்டத்தொடரின் பின்னணியில் நிலம் பற்றிய உரையாடல்கள்!

3 சித்திரை 2021 சனி 17:09 | பார்வைகள் : 15855


கடந்த சில கிழமைகளுக்குள் நிலம் அதாவது தாயகம் தொடர்பாக இரண்டு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.முதலாவது இம்மாதம் ஒன்பதாம் திகதி யாழ் ஊடக அமையத்தில் நடந்த ஒரு மெய்நிகர் நிகழ்வு.இதில் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாகக் கொண்டியங்கும் ஒக்லாண்ட் என்று அழைக்கப்படும் ஒரு சிந்தனைக் குழாம் முதல்நாள் எட்டாம்திகதி வெளியிட்ட ஓர் ஆவணத்தொகுப்பு அடுத்தநாள் தாயகத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. முடிவற்ற யுத்தம் என்ற பெயரிலான இந்த ஆவணத்தொகுப்பு தமிழ்ப்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு பற்றிய தகவல்களைத் திரட்டித் தருகிறது. 2009க்கு பின் தமிழ் பகுதிகளில் நிலம் எவ்வாறு படைத்தரப்பால் திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்படுகிறது என்பதனை விவரமாக தொகுத்துத் தருகிறது.இந்நிறுவனம் ஏற்கனவே இலங்கை தொடர்பில் வேறு ஆவணங்களையும் வெளியிட்டிருக்கிறது.

 
யாழ் ஊடக அமையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அறிமுக நிகழ்வில் ஓக்லாண்ட் நிறுவனத்தின் முக்கியஸ்தர்களும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரான விக்னேஸ்வரனும் நல்லை சிவகுரு ஆதீனத்தின் குருமுதல்வரும் நிலாந்தனும் உரையாற்றினார்கள்.இந்த ஆவணத்தை தொகுக்கும் வேலைகளில் ஒக்லண்ட் நிறுவனத்துக்கு பின்புலமாக இருந்தது விக்னேஸ்வரனுக்கு நெருக்கமான புலம்பெயர்ந்த தரப்புக்களே என்று தெரியவருகிறது.அவர்களுடைய ஒத்துழைப்பின் பின்னணியில்தான் மேற்படி சிந்தனைக் குழாம் இப்படி ஒரு ஆவணத்தை தொகுத்ததது.விக்னேஸ்வரன் அதை தனது கட்சியின் சாதனையாகக் காட்ட விரும்பவில்லை.இது தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் நடந்த நிகழ்வை ஒரு கட்சி நிகழ்வாக அன்றி பொது நிகழ்வாகவே அவருடைய கட்சியினர் ஒழுங்குபடுத்தினார்கள். ஒரு மக்கள் கூட்டத்தின் தாய்நிலம் அபகரிக்கப்படுவது தொடர்பான  ஆவணத் தொகுப்பை ஒரு கட்சியின் சாதனையாக வெளியிடாமல் உலக அங்கீகாரத்தை பெற்ற ஒரு சிந்தனை  குழாத்தின் வெளியீடாக அறிமுகப்படுத்தியது விக்னேஸ்வரனின் வெற்றி என்றே குறிப்பிட வேண்டும். அது ஒரு இனத்துக்கான ஆவணம் அதை அவர் கட்சிக்குரியதாக  காட்டவில்லை .இது கட்சிகளை நிர்மாணிப்பதை விடவும் தேசத்தை நிர்மாணிக்கும் ஓர் அரசியல் போக்கின் நல்ல முன்னுதாரணம் என்று கூறலாம்.
 
இந்த  மெய்நிகர் நிகழ்வுக்கு சில வாரங்கள் கழித்து மற்றொரு மெய்நிகர் நிகழ்வை விக்னேஸ்வரனின் கட்சியினரே புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு ஒழுங்குபடுத்தினார்கள். அதுவும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான ஒரு அனைத்துலக கருத்தரங்கு ஆகும்.அக்கருத்தரங்கில் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழ்ப்பரப்பிளும்  உள்ள சட்டச் செயற்பாட்டாளர்களும் புலமை யாளர்களும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளரான நவநீதம்பிள்ளை அம்மையாருமுட்பட வெளிநாட்டு துறைசார் நிபுணர்களும் உரை நிகழ்த்தினார்கள். ஏறக்குறைய ஒரு நாளின் நாலில் ஒரு பகுதி நேரம் அதாவது ஆறு மணித்தியாலங்கள் நடந்த அந்த மிக நீண்ட கருத்தரங்கில் முக்கியமான அம்சம் என்னவென்றால் புலம்பெயர்ந்த தமிழ் தரப்பில் உள்ள இளையவர்கள் குறிப்பாக புலமைசார் தகமை பெற்ற இளையோர் அதில் உரை நிகழ்த்தியமை ஆகும்.மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் அக்கருத்தரங்கில் பங்குபற்றினார்கள் என்பதையும் விக்னேஸ்வரன் மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்டினார். முதலாவது அவருடைய தலைமுறை. இரண்டாவது-நடுத்தர வயதை சேர்ந்த  செயற்பாட்டாளர்கள். மூன்றாவது-புலம்பெயர்ந்த தமிழ்ப்பரப்பில் மேலெழுந்து வரும் இளைய தலைமுறை.இவ்வாறு மூன்று தலைமுறைகளையும்  நிலம் தொடர்பான ஒரு கருத்தரங்கில் ஒன்றிணைத்தமை ஒரு முன்னுதாரணம்.
 
இக்கருத்தரங்கையும் ஒரு கட்சி நிகழ்வாக விக்னேஸ்வரனின் கட்சியினர் ஒழுங்குபடுத்தவில்லை. மாறாக நில ஆக்கிரமிப்பை புலமைக்  கண்கொண்டு சட்டக் கண்கொண்டு அணுகும் அனைத்துலக புலமைசார் கருத்தரங்காகவே கட்டமைத்திருந்தார்கள். இதுவும் கட்சிகளை நிர்மாணிப்பதற்கு பதிலாக தேசத்தை நிர்மாணிக்கும் ஓர் அரசியல் போக்கின் முக்கியமான ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.அதிலும் குறிப்பாக இந்நிகழ்வில் விக்னேஸ்வரன் சிறப்புப் பேச்சாளராக சம்பந்தரை  அழைத்திருந்தார்.தனது அரசியல் வைரியை ஓர் அனைத்துலக நிகழ்வில் அதிதியாக அழைத்தமை என்பது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவது. மேலும் கஜேந்திரகுமாருக்கும் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது.ஆனால் பதில் கிடைக்கவில்லையாம்.
 
இக்கட்டுரை விக்னேஸ்வரனின் கட்சிக்கு காசில்லாத ஒரு விளம்பரம் அல்ல.மாறாக நல்லதை யார் செய்தாலும் அதை ஊக்குவிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஜெனிவா கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த  ஒரு கால கட்டத்தில் இந்த இரு மெய்நிகர் நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.எனவே இவ்விரு நிகழ்வுகளையும் ஒழுங்குபடுத்திய காலம்; அதை ஒழுங்குபடுத்திய கட்சி திரைமறைவில் நின்றமை ;அரசியல் விரோதங்களை மறந்து ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவது;மக்களைத் திரளாக்குவது என்ற அடிப்படையில் சிந்தித்தமை போன்றவை நல்ல முன்னுதாரணங்கள் ஆகும்.அதை எந்தக்கட்சி செய்தாலும் பாராட்ட வேண்டும்.
 
தமது தாய்நிலம் தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பின் விழிப்பையும் அக்கறையையும் பங்கீடுபாட்டையும் இந்த இரு நிகழ்வுகளும் காட்டுகின்றன. எனவே தாயகத்துக்கு வெளியேயும் ஒரு உளவியல் தாயகம் பலமாக காணப்படுகிறது என்ற உணர்வை இவ்விரு நிகழ்வுகளும் வெளிப்படுத்தின.
 
நிலம் தொடர்பான விழிப்புணர்வு என்பது நீதிக்காகப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தை பொறுத்தவரை அத்தியாவசியமானது. அரசறிவியலின் ஆரம்பப் பாடங்களில் தேசம் எனப்படுவது ஒரு பெரிய மக்கள் திரள் என்று வரைவிலக்கணம் செய்யப்படுகிறது.ஒரு பெரிய மக்கள்திரளை தேசமாக வனையும் அம்சங்களாவன முதலாவது தாயகம். அதுதான் பாரம்பரிய தாயகம் அல்லது நிலம். இரண்டாவது இனம். ஒரு இனமாக திரட்சியாக காணப்படுவது. மூன்றாவது மொழி ஒரு பொது மொழியைக் கொண்டிருப்பது. நாலாவது பொதுப் பண்பாடு. ஐந்தாவது பொதுப் பொருளாதாரம். இந்த ஐந்து அம்சங்களும் ஒரு மக்கள்திரளை தேசமாக கோர்த்துக் கட்டுகின்றன. இந்த ஐந்து அம்சங்களுக்கும் எதிரான தாக்குதலே இன ஒடுக்குமுறை எனப்படுகிறது.இந்த ஐந்து அம்சங்களையும் அழிப்பதே இனப்படுகொலை எனப்படுகிறது. ஒரு மக்கள் கூட்டத்தின் தேசிய இருப்பை பௌதீக மற்றும் உளவியல் ரீதியாக அழிப்பது அல்லது நீண்டகால நோக்கில் நீர்த்துப்போகச் செய்வது எல்லாவற்றையும் இனப்படுகொலையின் வெவ்வேறு வடிவங்களாகவே பார்க்கவேண்டும்.இது மேற்சொன்ன மெய்நிகர் கருத்தரங்கில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இளம் தலைமுறையினரால் கூர்மையாக சுட்டிக்காட்டப்பட்டது.
 
 
 
தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரளவிடாமல் தடுக்கும் உத்திகள் இலங்கைத்தீவு கொலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற கையோடு  தொடங்கப்பட்டன. இலங்கைத் தீவின் முதலாவது பிரதமர் டி எஸ் சேனநாயக்கவின் காலத்தில் 1949இல் திட்டமிட்ட அரசின் ஆதரவுடனான குடியேற்றங்களின் மூலம் நில ஆக்கிரமிப்பு தொடக்கப்பட்டது. நில ஆக்கிரமிப்பு தமிழ் மக்களைப் பொறுத்தவரை தாயகத்தை அபகரிப்பது அல்லது சிதைப்பது. சிங்கள மக்களைப் பொறுத்தவரை அது சிங்கள பௌத்த விரிவாக்கம். இதன் தந்தையாகக் கருதத்தக்க டி.எஸ். சேனநாயக்கவிலிருந்து தொடங்கி இப்பொழுது மட்டக்களப்பில் மயிலத்தனைமடு மேய்ச்சல் தரை வரையிலும் தாய்நிலம் தொடர்ச்சியாக அபகரிக்கப்படுகிறது. இவ்வாறு நிலத்தை அபகரித்து அரசின் அனுசரணையுடனான குடியேற்றங்களின்மூலம் தமிழ்மக்களின் குடித்தொகை அடர்த்தியை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக வந்த சிங்கள அரசாங்கங்கள் அம்பாறை மாவட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டன. திருகோணமலை மாவட்டத்திலும் அவர்கள் வெற்றியை நெருங்கிவிட்டார்கள்.
 
அடுத்தது முல்லைத்தீவு மாவட்டம். இலங்கைத் தீவிலேயே சன அடர்த்தி குறைந்த ஒரு மாவட்டம் அது.அதோடு அங்கே தமிழ்மக்களின் பாவனையில் இருக்கும் மொத்த காணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 19 விகிதம் என்று கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவின் பின்னிணைப்பில் காணப்படுகிறது. அந்த 19 விகிதத்தையும் கூட இப்பொழுது அரசு திணைக்களங்கள் அபகரிக்க முற்படுவதை ஒக்லாண்ட் நிறுவனத்தின் ஆவணம் கூர்மையாக வெளிப்படுத்துகின்றது. இவ்வாறு நிலத்தை அபகரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் தாயகத்தை சிறுக்கச் செய்யலாம். நில அபகரிப்பு என்பதனை அல்லது தமிழர் தாயகத்தைச் சிதைத்தல் என்பதனை இலங்கை அரசாங்கங்கள் பல தசாப்தங்களாக நீண்ட கால நோக்கில் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றன.
 
 
 
அரசின் அனுசரணையுடனான குடியேற்றத் திட்டங்கள் மூலம் ஒருபுறம் நிலம் அபகரிக்கப்டுக்கப்படுகிறது. இன்னொருபுறம் தாயகத்தின் நிலத் தொடர்ச்சி அறுக்கக்கப்படுகிறது. அதன் விளைவாக மணலாறு மாவட்டத்தில் சில பத்து ஆண்டுகளுக்கு முன் அங்கு சில ஆயிரங்களாக குடியமர்த்தப்பட்ட மக்கள் இப்பொழுது ஒரு தேர்தல் தொகுதிக்குரிய வளர்ச்சியை நெருங்கி வருகிறார்கள். கடந்த பொதுத்தேர்தலின் போது தாமரை மொட்டுக்கு அதிகம் வாக்குகள் கிடைத்த பிரதேசங்களுக்கு நிறம் தீட்டிப் பார்த்தால் இது தெரியவரும். தாமரை மொட்டு நிறம் வடக்குக்கும் கிழக்குக்கும் இடையே ஒரு பகுதியில் செறிவாக காணப்படுகிறது.அதுதான் மணலாறு.அதாவது பௌதீகரீதியாக வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலை அவர்கள் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறார்கள்.
 
இப்பொழுது வவுனியா மாவட்டத்திற்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் இடையில் உள்ள நிலத்தொடர்பையும் அறுப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன.நிர்வாக நடைமுறைகளின் ஊடாக செய்யப்படக்கூடிய மாற்றங்களின்மூலம் பொருளாதார அபிவிருத்தி வலையங்களை உருவாக்குவதன்மூலம் தமிழ் மாவட்டங்கள் சிங்கள மக்கள் செறிந்து வாழும் நிர்வாக அலகுகளிற்குள் கொண்டுவரப்படுகின்றன. இதுவும் ஆக்கிரமிப்பின் ஒரு பகுதிதான். மகாவலி அபிவிருத்தித் திட்டங்களும் அந்த நோக்கிலானவைதான் .நீரைத் தருவதாகக் கூறி நிலத்தைப் பிடிப்பது. பண்டைய சிங்கள் பௌத்த நாகரீகத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்று நீர்பாசனத் திட்டங்களாகும். அந்த மகிமைக்குரிய நீர்ப்பாசன நாகரீகத்தின் நவீன தொடர்ச்சியான மகாவலி அபிவிருத்தித் திட்டம் தமிழர்களைப் பொறுத்தவரை நில ஆக்கிரமிப்பாக மாறிவிட்டது.
 
நில ஆக்கிரமிப்பு எனப்படுவது இலங்கைத் தீவை பொறுத்தவரை டி.எஸ் சேனநாயக்கவின் காலத்திலிருந்து தொடங்கி கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இது விடயத்தில் சேனநாயக்கவும்சரி ராஜபக்சக்களும்சரி தொடர்ச்சியாக ஒரே விதமாகத்தான் சிந்திக்கின்றார்கள். தாயகக் கோட்பாட்டை சிதைத்தால் தமிழ் மக்களின் போராட்டம் படுத்துவிடும் என்று ஒருமுறை ஜெனரல் சிறில் ரணதுங்க கூறியிருந்தார். அவர் ஜெயவர்த்தனாவின் காலத்தில் பாதுகாப்புத்துறை செயலராக இருந்தார். அக்காலகட்டத்தில்தான் மணலாற்றில் குடியேற்றங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.
 
எனவே தாயகத்தை சிதைக்கும் சுமார் 70 ஆண்டுகால அரசியலின் பின்னணியில் தாயகத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் என்ற அடிப்படையில் பார்த்தால் கடந்த சில கிழமைகளுக்குள் நிகழ்ந்த இரண்டு மெய்நிகர் நிகழ்வுகளும் முக்கியமானவை. தமிழ் மக்களை ஒரு தேசமாக கட்டியெழுப்பும் நோக்கிலானவை. குறிப்பாக ஜெனிவாத் தீர்மானம் மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் வெற்றி பெறவில்லை என்பதை நிரூபித்திருக்கும் ஒரு பின்னணியில் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாக கட்டியெழுப்புவதற்குரிய தற்காப்பு நடவடிக்கைகளை தங்களால் இயன்ற அளவுக்கு முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு தமிழ் மக்கள் தமது சொந்த பாதுகாப்பு கவசங்களைக் கட்டி எழுப்பலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய இரண்டு நிகழ்வுகள் இவை.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்