Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கோட்டபாயவின் எதிர்காலம்

கோட்டபாயவின் எதிர்காலம்

31 ஆவணி 2022 புதன் 12:52 | பார்வைகள் : 11114


 “ போர் உச்சமடைந்திருந்த போது, 1991இல், இராணுவத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்குச் சென்றது போலவே, போராட்டம் உச்சமடைந்த போது, அவர் நாட்டை விட்டு வெளியேறினார். இதனால் தப்பியோடிய இராணுவ அதிகாரி, தப்பியோடிய ஜனாதிபதி என்ற பெயர் அவரை விட்டுப் போகப் போவதில்லை”

 
மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டுக்குத் திரும்பப் போகிறார். எந்த நேரத்திலும் அவர் கொழும்பு திரும்பலாம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
 
மாலைதீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என ஓடி ஒளிந்து கொண்டிருந்த, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, வேறெங்கும் இருப்பதை விட, இலங்கையில் இருப்பது தான் பாதுகாப்பானது.
 
அவர் பாதுகாப்பற்றது எனக் கருதியது, காலிமுகத்திடல் போராட்டத்தை தான். அந்த மக்கள் எழுச்சிக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தான் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
 
அந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தை ரணில் ஒடுக்கி விட்டார். அவர் போராட்டத்துக்கு முன்னின்று உழைத்தவர்களையெல்லாம் தனித்தனியாக்கி, கைது செய்து சிறைக்குள் அடைத்து, பிணையில் விடுவித்து இன்னும் சிலரை தடுத்து வைத்திருக்கிறார்.
 
மீண்டும் இந்தப் போராட்டங்கள் தீவிரம் பெறுவது இப்போதைக்கு சாத்தியமில்லை.
 
அவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டாலும், அதில் கோட்டா இலக்கு வைக்கப்படுவார் என்ற நிலை இல்லை.
 
எனவே, கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவது தான் தற்போதைக்கு சரியான தெரிவாக உள்ளது.
 
சிங்கப்பூர், தாய்லாந்து என்று நாடு நாடாக தங்கியிருப்பதற்கு செலவு அதிகம். அதைவிட, அவர் அங்கெல்லாம் சுதந்திர மனிதராக உலா வரவும் முடியவில்லை.
 
விடுதி அறைக்குள் – கிட்டத்தட்ட சிறைக் கூடத்துக்குள் முடங்கியிருப்பது போலத் தான் அவர் இருக்கிறார். இதுவே அவருக்கு உளவியல் ரீதியானதொரு சவால் தான்.
 
அவர் நாடு திரும்பினாலும் கூட அந்தச் சவாலில் இருந்து இலகுவாக விடுபட முடியாது.
 
ஏனென்றால், அவரது பாதுகாப்புக் கருதி, எந்த நேரமும் அவர் வீட்டுக்குள் முடக்கிக் கிடப்பது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.
 
எவ்வாறாயினும், தப்பியோடிய இராணுவ அதிகாரி, தப்பியோடிய ஜனாதிபதி என்ற பெயர் அவரை விட்டுப் போகப் போவதில்லை.
 
போர் உச்சமடைந்திருந்த போது, 1991இல், இராணுவத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்குச் சென்றது போலவே, போராட்டம் உச்சமடைந்த போது, அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.
 
தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவி விலகமாட்டேன் என்று அடம்பிடித்த கோட்டா, கடைசியில் தனது பெயர் கெட்டுப் போவதைப் பற்றிக் கூட கவலைப்படாமல், நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
 
அவர் எடுத்த அந்த முடிவு, ராஜபக்ஷ குடும்பத்தினருக்குக் கூட தெரியாது என, மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
 
போகவா என்று கேட்டிருந்தால், தான் வேண்டாம் என்று தடுத்திருப்பேன் என்றும், போகும் போது கூறியதால் எதையும் பேசவில்லை எனவும், அவர் தெரிவித்திருக்கிறார்.
 
ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற எடுத்த முடிவு, தான், நாட்டின் அரசியல் குழப்பங்களை தணிப்பதற்கு உதவியது என்பதில் சந்தேகமில்லை.
 
இல்லையேல் நிலைமைகள் மேலும் மோசமடைந்திருக்கலாம்.
 
ராஜபக்ஷவினருக்கும் கோட்டாவுக்கும் இடையில் தெளிவானதொரு ஒன்றுமை அல்லது, சமாந்தரமான சிந்தனை காணப்படவில்லை என்பது அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ ஆங்கில வாரஇதழுக்கு அளித்த செவ்வியில் இருந்து உணர முடிகிறது.
 
அதாவது, கோட்டாவிடம், அவர்கள் எதிர்பார்த்தது வேறு. அவர் நடந்து கொண்டது வேறு.
 
இந்த அணுகுமுறை தோல்விகள் ராஜபக்ஷவினரின் ஒட்டுமொத்த திட்டங்களையும் குழப்பி விட்டது.
 
பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபயவின் அணுகுமுறைகளைத் தான், ராஜபக்ஷவினர் எதிர்பார்த்தனர்.
 
“பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது நல்ல நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தினார். ஜனாதிபதியாக அவர் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளானார். 
 
முன்னர் ஒரு கடும்போக்குவாதியாக இருந்த அவர் மென்மையானவராக மாறினார். அவர் அதனைச் செய்திருக்கக் கூடாது.” என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
 
இதன் மூலம், அவர் எதிர்பார்த்தது, முன்னைய கடும்போக்காளரான கோட்டாபய ராஜபக்ஷவைத் தான் என்பதை உணர முடிகிறது.
 
கோட்டாவை ஜனாதிபதியாக்கிய விடயத்தில் ராஜபக்ஷவினரின் இரண்டு எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.
 
ஒன்று, கடும்போக்காளராக இருந்து நாட்டை நிர்வகிப்பார் என்பது. அது நடக்கவில்லை என்பதை மஹிந்த வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
 
இரண்டாவது, தனது சொற்படி ஆட்சியை நடத்துவார் என்ற மஹிந்தவின் எதிர்பார்ப்பும் தவறாகிப் போனது.
 
அவர் நிபுணர்களின் ஆலோசனைகளை நம்பினார், முடிவுகளை எடுத்தார் என்று மஹிந்த ராஜபக்ஷ வெறுப்புடன் கூறியிருக்கிறார்.
 
மஹிந்தவுக்கும் கோட்டாவுக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியான போது, அதனை வதந்தி என்றும், ஊகங்கள் என்றும், சகோதரர்களைப் பிரிக்கும் சதி என்றும் சிலர் கூறினார்கள். இன்னும் சிலர் அழகான கற்பனை என்றும் கூறினர்.
 
கோட்டாபய ராஜபக்ஷவை தன் கைக்குள் வைத்திருக்கும் வாய்ப்பை கொண்டிருக்கவில்லை என்பதை, தனது செவ்வியில் இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ.
 
அதாவது, தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து ராஜபக்ஷவினர் போட்ட கணக்கிற்கும், வெற்றிக்குப் பின்னரான செயற்பாடுகள் தொடர்பாக போட்ட கணக்கிற்கும் இடையில் ஏற்பட்ட குழப்பம் தான் நிலைமையை சிக்கலாக்கியிருக்கிறது.
 
ஆனாலும், முழுப் பழியையும் கோட்டாவின் மீது போட மஹிந்த ராஜபக்ஷ தயாராக இல்லை.
 
ஏனென்றால், கோட்டா நாடு திரும்ப போகிறார். பழியை அவர் மீது போட்டால், நாடு திரும்பிய பின்னர் சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.
 
அதனால் தான், தற்போதைய நெருக்கடிகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ தாம் உள்ளிட்ட, முன்னர் ஆட்சியில் இருந்த அனைவரையும் பொறுப்பாளியாக்க முயன்றிருக்கிறார்.
 
ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் சிறுகச் சிறுக விட்ட தவறுகள், எல்லாம், கோட்டாவின் தவறான முடிவுகளால், அவரது கழுத்தை இறுக்கும் நிலைக்கு கொண்டு சென்றது.
 
நாடு திரும்பும் கோட்டா அடுத்த என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி உள்ளது.
 
எஞ்சிய காலத்தை ஓய்வாக கழிக்கலாம். ஆனாலும், அவர் ஏற்கனவே எதிர்கொண்ட பல்வேறு வழக்குகள் அவரைத் துரத்தாமல் விடாது.
 
அமெரிக்காவுக்குச் சென்று மகனுடன் இறுதிக்காலத்தை கழிக்கலாம். ஆனால், அமெரிக்கா அதற்கு அனுமதிக்குமா என்ற சிக்கல் இருக்கிறது.
 
ஏற்கனவே அவர் ஜனாதிபதியாக இருந்த போதே அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. தற்போது முன்னாள் ஜனாதிபதியாக அமெரிக்கா அவருக்கு கதவைத் திறக்குமா என்ற சந்தேகம் உள்ளது.
 
அவ்வாறு திறந்தாலும், அல்லது வேறெந்த நாட்டில் அரசியல் புகலிடம் தேடிக் கொண்டாலும், அவரால் சட்டத்தின் துரத்தல்களில் இருந்து இலகுவாக தப்பிக்க முடியாது.
 
போர்க்குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அவர், தண்டனையை பெறுவரா இல்லையா என்பதை விட, அவர் நிம்மதியாக உறங்க முடியாதளவுக்கு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
 
இது தவிர கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து அரசியலில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளதா என்றால், அதுவும் அரிது தான்.
 
ஏனென்றால், கோட்டா ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் ஜனாதிபதியாக தனது முத்திரையைப் பதிக்கவும் இல்லை.
 
சறுக்கி விழும் போதெல்லாம், தூக்கி நிறுத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருப்பது போல, கோட்டாவுக்கு தனிப்பட்ட ஆதரவாளர்களோ, கட்சியோ கிடையாது.
 
இன்னொரு முறை கோட்டாவை நம்பி ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியலை அவரது கையில் கொடுப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கவும் மாட்டார். எனவே, கோட்டா மீண்டும் அரசியலுக்கு வருவார் என்பது கற்பனை.
 
அதேவேளை, கோட்டா நாடு திரும்புவது தவிர்க்க முடியாதது போலவே, அவர் எதிர்காலத்தில், சர்ச்சைகள், சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாமல் நிம்மதியாக இருப்பதும் கடினம் தான்.
 
- சத்ரியன்
 

வர்த்தக‌ விளம்பரங்கள்