Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கும் 1971ஆம் ஆண்டு நிலைவரத்திற்குமான தொடர்பு

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கும் 1971ஆம் ஆண்டு நிலைவரத்திற்குமான தொடர்பு

4 மாசி 2023 சனி 14:31 | பார்வைகள் : 10305


இலங்கை அதன் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இவ்வேளையில், ஆட்சிமுறை நிறுவனங்களுக்கு இடையிலான அதிகார வேறாக்கலை ஒழுங்குபடுத்தும்  தடுப்புக்கள் மற்றும் சமப்படுத்தல்களினதும் (Checks and balances), சட்டத்தின் ஆட்சியினதும் சீர்குலைவு குறித்து சிந்தித்துப் பார்க்கவேண்டியது முக்கியமானதாகும்.
 
1953, 1971, 1983 ஆண்டுகளின் நெருக்கடிகளாக இருந்தாலென்ன, நீண்டகால உள்நாட்டுப் போர் மற்றும் தற்போதைய நெருக்கடியாக இருந்தாலென்ன.
 
அவற்றுக்காக பொறுப்புக்கூற வேண்டும் என்ற கடப்பாடு உணர்வு சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்த மூன்று குடும்பங்களிடம் இருந்தும் வெளிப்பட்டதாக இல்லை.
 
நல்லாட்சி, சமூக நீதி மற்றும் பொருளாதார முகாமைத்துவ தகுதி பற்றியும் அந்த குடும்பங்கள் அக்கறை காட்டவில்லை.
 
பதிலாக, அவை மேலும் கூடுதலாக மத்தியமயப்படுத்தப்பட்ட - பொறுப்புக்கூறலுக்கு அப்பாற்பட்ட அதிகாரத்தையே கோரியிருக்கின்றன.
 
தற்போது அர்த்தபுஷ்டியான, அரசியல் மாற்றத்துக்கான கோரிக்கையை நசுக்குவதற்கு ராஜபக்ஷ குடும்பமும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களும் சேர்ந்து நிற்கிறார்கள்.
 
அதற்காக அவர்கள் கொடுமையான பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற சட்டங்களை பயன்படுத்துகிறார்கள்.
 
இந்த கட்டுரை 1971ஆம் ஆண்டின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கிளர்ச்சிக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் பின்னணியில் இருந்த பொருளாதார மற்றும் கட்டமைப்பு ரீதியான காரணங்களை ஆராய்கிறது.
 
தற்போதைய நெருக்கடியை போன்றே 1970களிலும் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி கண்டதுடன், வெளிநாட்டுக் கடன்களும் அதிகரித்தன. வேலையில்லா திண்டாட்டமும் தீவிரமடைந்தது.
 
1960களில் கைத்தொழில் துறையின் பருமன் வளர்ச்சியற்றதாக மந்த நிலையில் (12 - 13 சதவீதம்) காணப்பட்டது. பெருமளவிலான வருமானம் சேவைத்துறைகள் மற்றும் விவசாயத்துறையின் மூலமாகவே பெறப்பட்டன. 
 
ஏற்றுமதித்துறையும் அடிப்படையில் விவசாய உற்பத்திகளிலேயே தங்கியிருந்தது. நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டிருந்தது.
 
1957ஆம் ஆண்டில் 9 கோடி 50 இலட்சம் ரூபாவாக இருந்த கடன், 1966ஆம் ஆண்டில் 34 கோடியே 90 இலட்சம் ரூபாவாகவும் 1969ஆம் ஆண்டில் 74 கோடியே 40 இலட்சம் ரூபாவாகவும் உயர்ந்தது.
 
தற்போதைய நிலைவரத்தை போன்றே அன்றும் வெளிநாட்டுக் கடனை மீளச்செலுத்துவதற்கான பணத்தை வெளிநாட்டு கடனுதவிகள் மூலமாகவே பெறவேண்டியிருந்தது. 
 
நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பும் வீழ்ச்சி கண்டது.
 
இன்றுள்ளதை போன்றே இறக்குமதியின் பெரும்பகுதி உணவுப்பொருட்களாகவே (சுமார் 53 சதவீதம்) இருந்தது.
 
1971ஆம் ஆண்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்தது. 44 இலட்சம் தொழிலாளர் படையில் 585,000 பேர் உத்தியோகபூர்வமாக வேலையில்லாதவர்களாய் இருந்தனர்.
 
கலாநிதி என்.எம்.பெரேராவின் பொருளாதார நிருவாகம் இதை 7 இலட்சம் என்று கணிப்பிட்டது.
 
வேலையில்லாத 585,000 பேரில் 460,000 பேர் கிராமபுறங்களை சேர்ந்தவர்களாகவும், 250,000 பேர் 19 - 24 வயதுடையோராகவும் இருந்தனர்.
 
167,000 பேர் இரண்டாம் நிலைக் கல்வியை பெற்று மூன்றாம் நிலைக் கல்விக்கு சென்றனர்.
 
அரசகரும 'பயனாளிகளான' 1956ஆம் ஆண்டு தொடங்கிய யுகத்தின் சிறுவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொருளாதார உறுதிமொழிகளின் பயனை அடைய முடியவில்லை.
 
1971ஆம் ஆண்டு அரசாங்கத்தின் அடக்குமுறையின் விளைவாக 10,000 - 15,000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
 
இதை நாட்டின் ஆட்சியாளர்கள் ஒருபோதும் ஒத்துக்கொண்டதில்லை.
 
பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.
 
61 குடிமக்களும் 63 ஆயுதப்படையினரும் உயிரிழந்ததாக அரசாங்கம் அறிவித்தது.
 
ஆயுதப்படைகள் செய்த நீதி விசாரணைக்கு புறம்பான கொலைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து எந்தவித விசாரணைகளும் நடத்தப்படவில்லை.
 
அத்தகைய கொடுமைகளை செய்தவர்கள் தண்டனைக்குள்ளாகாமல் இருக்கும் போக்கு வழமையானதாகியது.
 
கிளர்ச்சியின் தலைவர்கள் (அவர்களில் நானும் ஒருவன்) மீது வழக்கு தொடுக்கும் விடயத்தில் சட்டத்தின் ஆட்சி துவம்சம் செய்யப்பட்டது. ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படும் நடைமுறை இரத்து செய்யப்பட்டு சித்திரவதை மூலம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் வழக்குகளில் அனுமதிக்கப்பட்டன.
 
ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டபோதிலும், அது குறித்து ஒருபோதும் விசாரணை செய்யப்படவில்லை. அடக்குமுறையும் கிரமமாக முன்னெடுக்கப்பட்டது. 
 
பொருளாதார பிரச்சினைகளாக இருந்தாலென்ன, அரசியல் மற்றும் நீதி நிர்வாகத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாக இருந்தாலென்ன... எந்த கட்டமைப்பு ரீதியான பிரச்சினையையும் ஆராய்ந்து, தீர்வு காண்பதில் நாட்டம் காட்டப்படவில்லை. முன்னெப்போதும் இல்லாத கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.
 
பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதி செய்வதில் அக்கறை காட்டப்படவில்லை. அரசினால் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரிப்பதில் தயக்கம் காட்டப்பட்டது.
 
1980களில் பொருளாதார திசைமார்க்கம் மாற்றமடைந்தது. நவதாராள வாதம் மந்திரமானது. நலன்புரி ஏற்பாடுகள் படிப்படியாக இல்லாமல் செய்யப்பட்டன.
 
இலங்கை நாடானது இப்போது உல்லாச பிரயாணத்துறை, ஆடை உற்பத்தி, வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள் அனுப்புகின்ற பணம் மற்றும் தேயிலை ஏற்றுமதியிலேயே தங்கியிருக்கிறது.
 
இந்நிலையில் தேசிய கடன் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆளும் குடும்பத்தவர்களின் தற்பெருமைக்காகவே முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்காக கோடிக்கணக்கான டொலர்கள் செலவிடப்பட்டன.
 
யாருக்கு அவை தேவை, யார் அவற்றை பயன்படுத்தப்போகிறார்கள் என்பதை பற்றி எந்த யோசனையும் இல்லாமல் விமான நிலையங்கள், ஸ்டேடியங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், மாநாட்டு மண்டபங்கள் மற்றும் துறைமுகங்கள் நிர்மாணிக்கப்பட்டன.
 
2000ஆம் ஆண்டில் கடன் நிகர உள்நாட்டு உற்பத்தியின் 79 சதவீதமாக உயர்ந்தது. அது, தொடர்ந்து அதிகரித்தவாறு, கொவிட் பெருந்தொற்று நாட்டை பாதிப்பதற்கு முன்னதாக 100 சதவீதத்தை எட்டியது.
 
இதனால் பொருளாதார உறுதிப்பாடின்மை மோசமானது. சனத்தொகையின் உயர்மட்டத்தில் உள்ள 20 சதவீதத்தினரின் கைகளில், நாட்டின் வருமானத்தின் 42 சதவீதம் சென்றடைகின்ற அதேவேளை சனத்தொகையின் கீழ்மட்டத்தில் உள்ள 40 சதவீதத்தினரிடம் 17.8 சதவீத வருமானம் இருக்கிறது.
 
ரணிலின் மீள் எழுச்சி 
 
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் விளைவாக சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்ட பிறகு பொருளாதாரத்தில் ஏற்பட்ட குறுக்கம் நாட்டின் வெளிநாட்டு நாணயக் கையிருப்புக்கு நெருக்குதல்களை கொடுத்தது.
 
வரிகளை குறைப்புச் செய்ததன் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ நிலைவரத்தை மேலும் மோசமாக்கினார். அந்த வரிக்குறைப்பு நாட்டுக்கு பல நூறு கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியது.
 
அடுத்து அவர் பசளை இறக்குமதியை தடை செய்தார். பசளை வகைகளை இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு நாணயம் இல்லாமையும் அந்த தடைவிதிப்புக்கு ஒரு காரணம். இதனால் விவசாய உற்பத்தியில் படுமோசமான வீழ்ச்சி ஏற்பட்டது. 
 
குறிப்பாக, முக்கியமான ஏற்றுமதி சம்பாத்தியத்தை தரும் தேயிலை, இறப்பர் உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி பெரும் பாதிப்பை உண்டாக்கியது. 
 
பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டுவந்த நிலையில் உணவு வகைகள், எரிபொருட்கள், மருந்து வகைகள், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.
 
சனத்தொகையில் உயர்மட்டத்தில் உள்ள 20 சதவீதத்தினரால் நிலைமையை சமாளிக்கக்கூடியதாக இருந்த அதேவேளை பெரும்பாலான மக்களுக்கு அன்றாட வாழ்க்கை பெரும் சுமையானது.
 
தன்னியல்பாக மூண்ட மக்கள் கிளர்ச்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக நிர்ப்பந்தித்தது.
 
அதையடுத்து நீண்டகாலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அடையமுடியாமல் இருந்த ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றம் ஜனாதிபதியாக தெரிவுசெய்தது.
 
போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தி, அவர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை கையாளுவதற்கு பதிலாக விக்ரமசிங்கவின் அரசாங்கம் அரச அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது.
 
பொருளாதார முகாமைத்துவம் தெரியாதவர்களிடமும் அரசாங்க பணத்தை சூறையாடியவர்களிடமும் தற்போது மீண்டும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளுக்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதை காண்கிறோம்.
 
தவறான முகாமைத்துவம், ஊழல், பொருளாதார மற்றும் அரசியல் முறைமையில் பரவலாக காணப்படும் விரயம் ஆகியவையே இன்றைய நெருக்கடிகளுக்கு பிரதான காரணிகள்.
 
ஆனால், முன்வைக்கப்படும் தீர்வுகள் அந்த காரணிகளை கவனத்தில் எடுத்தவையாக இல்லை.
 
வரி செலுத்த இயலாத பிரிவினரே பெரும் பொறுப்பை சுமக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகள் உரிய முறையில் கையாளப்படாவிட்டால், அது இன்னொரு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு வழிவகுக்கும்.
 
இலங்கை அதன் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், தற்போதைய நெருக்கடி எவ்வாறு ஏற்பட்டது, எவ்வாறு அந்த நெருக்கடியை தீர்ப்பது என்பது தொடர்பில் ஆழமாக சிந்திக்கவேண்டியது அவசியமாகும்.
 
இல்லையேல், கடந்த காலத்துக்குள் மீண்டும் வாழ நாம் நிர்ப்பந்திக்கப்படுவோம்.
 
முறைமை மாற்றத்தை செய்யத் தவறினால், தனிப்பட்ட முறையிலும் பொருளாதார மட்டத்திலும் பேரளவிலான இழப்புக்களை சந்திக்கவேண்டியிருக்கும் என்பதை 1971, 2020 ஆண்டுகள் எமக்கு நினைவூட்டுகின்றன.
 
முறைமை மாற்றத்தை செய்வதே, 1971ஆம் ஆண்டில் அநியாயமாக தடுத்துவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கும், அரசின் கைகளில் பலியான பெயர் தெரியாத  ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கும் எம்மால் செய்யக்கூடிய நீதியாகும்.
 
நன்றி வீரகேசரி

வர்த்தக‌ விளம்பரங்கள்