பண்டைய கால சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம் முதன் முறையாக கண்டுபிடிப்பு!

12 ஐப்பசி 2019 சனி 04:10 | பார்வைகள் : 12142
எகிப்து நாட்டில் உள்ள லக்சார் பகுதியில் நடைபெற்றுவரும் அகழாய்வில், பண்டைய காலத்தில் சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம் இருந்ததற்கான ஆதாரங்கள் முதன் முறையாக கிடைத்துள்ளன.
தொல்பொருள் ஆய்வாளரான ஜாஹி ஹவாஸ் தலைமையிலான குழு ஒன்று, எகிப்தில் உள்ள லக்சார் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில் அங்குள்ள மேற்கு பள்ளத்தாக்கு பகுதியில் பண்டைய காலத்தைச் சேர்ந்த பல்வேறு அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக விதவிதமான மண்பானைகள், அடுப்பு, தண்ணீர் தொட்டி, மூன்றாம் அமென்ஹொடாப் மன்னருக்கு சொந்தமானதாக கருதப்படும் வளையம், இறக்கைகள் கொண்ட ஹோரஸ் எனும் கடவுளின் சிலை, அரச சவப்பெட்டிகளை அலங்கரிக்கப் பயன்படுத்தும் தங்கத்தால் ஆன மணிகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு லக்சார் பகுதியில் கல்லறையும் கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கு லக்சார் பகுதியில், பண்டைய காலத்தில் சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைப்பது இதுவே முதன் முறை எனவும் கூறப்படுகிறது.