Paristamil Navigation Paristamil advert login

மழை...!!

மழை...!!

11 தை 2021 திங்கள் 16:24 | பார்வைகள் : 13449


மழையை
எளிதில் புரிந்துகொள்ள முடியாது.
அது எப்போது பெய்யும்
எப்போது நிற்கும்
யார்க்கும் தெரியாது.
 
மழைபற்றிய முன்னறிவிப்புகள் யாவும்
கணிப்புகள்தாம்.
கணித்தபடியே வந்து போகுமென்று
உறுதியில்லை.
 
மழை யார் கூரைகளை விரும்புகிறது
மழைக்கு எந்த நிலம் பிடித்திருக்கிறது
மழை எந்த ஓடை குளத்தைத் தேர்ந்தெடுக்கிறது
எவர்க்கும் தெரியாது.
 
இத்தனை ஏக்கத்திற்குப்பின் ஏன் பெய்கிறது
இத்தனை கண்ணீருக்குப்பின் ஏன் கனிந்தது
இத்தனை வறட்சியை எங்கொளிந்து ரசித்தது
தெரியவில்லை.
 
வரவேண்டிய நேரத்திற்கு வந்திருந்தால்
காடு செழித்திருக்கும்.
பெய்யவேண்டிய அளவு பெய்திருந்தால்
ஏரி ததும்பியிருக்கும்.
இவ்வாறு எண்ண நேர்ந்ததே
மனிதக் கீழ்மைதான்.
மழையை அளப்பதும் மடத்தனம்தான்.
 
மழை பெய்கிறது
அது பெய்யும்வரை பெய்யட்டும்
அதற்கு எல்லாம் தெரியும்
அவ்வளவுதான் !

வர்த்தக‌ விளம்பரங்கள்