Paristamil Navigation Paristamil advert login

அறிந்தும் அறியாத இளம் வயதில்............

அறிந்தும் அறியாத இளம் வயதில்............

5 ஆவணி 2013 திங்கள் 10:14 | பார்வைகள் : 14713


 இளம் வயது நட்பு தவிர்க்க முடியாதது. அவசியமானதும் கூட. இதில் பல சாதக, பாதகங்கள் உள்ளன என்பது இந்த கட்டத்தை கடந்த பிறகே உணர முடியும். இளம் வயது நட்பு தேவை தான். ஆனால் அதுவே எதிர் காலத்தை வளப்படுத்தக் கூடிய ஆரோக்கியமான நட்பாக இருக்கவேண்டும். 

 
அதுதான் நட்புக்கு பெருமை. இளைய தலைமுறையினர் ஒரு காலகட்டத்திற்கு மேல் பெற்றோரிடம் சொல்ல முடியாத விஷயங்களை தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள். அதில் ஒரு சுவாரசியமும் உள்ளது. ஒன்றாக படிப்பது, ஒன்றாக ஊர் சுற்றுவது இப்படி பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு உற்சாகத்தைப் பெறுகிறார்கள். 
 
இதுவே குழந்தைப் பருவத்தில் அறிவுரை சொல்ல தலைப்பட்டால் எடுபடாது. 'போய்யா போ' என்று கை உயர்த்தி சொல்லி தங்கள் நட்புக் கதவை அடைத்து விடுவார்கள். சொன்னால் அதையும் தாண்டி நாமாக அக்கறை எடுத்தபடி அடுத்த கட்ட முயற்சியைத் தொடர்ந்தால் நம்மைப் பார்த்த மாத்திரத்தில் முகம் திருப்பிக் கொண்டு போய் விடுவார்கள். 
 
 இளம் வயதில் தான் தங்களை முற்றிலும் வித்தியாசமானவர்களாக வெளிப்படுத்திக் கொள்ள விரும்புவார்கள். பலவிதமாக உடை உடுப்பது, அழகுபடுத்திக் கொள்வது, வித்தியாசமாக சாப்பிடுவது என்று எல்லாவற்றிலும் ஒரு மாறுதலை ஏற்படுத்துவார்கள். இந்த வயதில் தங்கள் வயது கொண்ட எதிர்தரப்பாருடன் சகஜமாக பழகுவதை ஒரு பெருமையாக நினைத்துக் கொள்கிறார்கள். 
 
அதற்காக நட்பு வட்டத்தில் தங்களை முன்னிலைப்படுத்த விரும்புகிறார்கள். அதற்காக தங்கள் சக்திக்கு மீறிய காரியங்களை செய்யவும் தயங்க மாட்டார்கள். பல வேண்டாத பழக்க வழக்கங்கள் தோன்றுவது இந்த வயதில் தான். அதனால் பெற்றோர்கள் அவர்களை மிகுந்த கவனத்தோடு சிநேக மனப்பான்மையோடு கண்காணிக்க வேண்டும். 
 
எதையுமே விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் பருவம் இது. நன்மை தீமைகளை அலசி ஆராயும் அனுபவம் இல்லாத பருவம் என்பதால், நன்மை தீமைகளை நாம் தான் சொல்லி புரிய வைக்க வேண்டும். நல்ல செயல்களை செய்யவும், மகிழ்ச்சியாக பேசிப் பழகவும் இந்த வயதுக்காரர்கள் அதிக விருப்பத்துடன் இருப்பார்கள். 
 
ஆனால் அவர்களுடன் பழகும் நபர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது நம் பார்வை வளையத்தில் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் பிறந்து வளர்ந்த சூழ்நிலைக்கேற்றாற்போல் குணநலன்களை பெற்றிருப்பார்கள். அதனால் இவர்களில் நல்லவர் கெட்டவர் என்று யாரையும் குறை சொல்ல முடியாது. 
 
நம் வீட்டுப் பிள்ளைகள் மீது நாம் தான் கவனம் செலுத்த வேண்டும். வெளிநட்பில் பிடிப்பு வந்து விட்டால் முடிந்தவரை பெற்றோரிடமிருந்து விலகவும் முயல்கிறார்கள். இது அவர்களுக்கு ஆபத்தானது என்பது ஆரம்பத்தில் புரிவதில்லை. நட்பு என்பது உன்னதமானது தான். அது நாம் யாரிடம் நட்பு கொண்டிருக்கிறோம் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. 
 
புரியாத வயதில் புது உலகத்தில் காலடி எடுத்து வைக்கும் பருவத்தில் பார்வையில் படுவதெல்லாம் மகிழ்ச்சியே அளிக்கும். ஆனால் அறியாமல் செய்யும் தவறுகள் வெளிச்சத்திற்கு வரும்போது தான் குடும்பத்தையே தலை குனிய வைக்கும். தன் தோழிக்கு பெற்றோர் போதுமான அளவு ‘பாக்கெட் மணி’ தருவதில்லை என்று தெரிந்ததும் ஜூலி அவளை ஒரு பகுதி நேர வேலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறாள். 
 
அதுவும் ஓவியத்திற்கு போஸ் கொடுக்கும் வேலை. ஒரு மணி நேரம் கொடுக்கும் போசுக்கு நல்ல தொகை கிடைத்தது. தன் கைசெலவுக்கு போக எஞ்சியதை அம்மாவிடமும் கொடுத்தாள். திடீரென்று ஒருநாள் அவள் படம் நெட்டில் வந்தது. 
 
குடும்பமே அதிர்ந்தது. ஓவியத்திற்கு போஸ் கொடுத்த அவள் முகத்தை மட்டும் கட் பண்ணி ஒரு ஏடாகூட உடம்பில் பொருத்தியிருந்தார்கள். இதைப் பார்த்து அதிர்ந்துபோன திவ்யா, 'நான் இப்படியெல்லாம் போஸ் தரவில்லையே' என்று அழுதாள். என்ன செய்வது... 
 
எந்த இடத்தில் என்ன சூழ்ச்சி இருக்கிறது என்பது யாருக்கு தெரியும்? அதுதான் மானத்திற்கு கொடுத்தவிலை என்பது அப்போது தான் புரிந்தது. என்னதான் உயர்ந்த நட்பாக இருந்தாலும் சில சமயம் அதுவே சிக்கலில் முடிந்து விடும். தன் பலம், பலவீனம், குடும்ப நிலமை எல்லாவற்றையும் மற்றவர்களிடம் சொல்லி புலம்புவதில் ஒரு சுகம். 
 
இதனை மற்றவர்கள் அவர்களுக்கு தகுந்தபடி பயன்படுத்தி கொள்ளும்போது அந்தரங்கம் வெளியரங்கமாகி நட்பு உதிர்ந்து போகிறது. சில சமயங்களில் இதுவே அடிதடிவரை போய்விடுவதும் உண்டு. எந்த நேரமும் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதில் ஒருசிலருக்கு குஷி. சினிமா, தியேட்டர், ஷாப்பிங் மால், காட்டேஜ் என்று சுற்றிக் கொண்டே இருப்பார்கள். 
 
வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்காது. இப்படியே சுற்றிக் கொண்டிருந்த பிரியாவை ஒருநாள் பெற்றோர் கடுமையாக கண்டித்தார்கள். அவளும் நண்பர்களிடம் நடந்தவையெல்லாம் சொல்லி அழுதாள். அவர்கள் கொடுத்த யோசனைப்படி பெற்றோருக்கு தற்கொலை மிரட்டலை விடுத்தாள். 
 
யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் நான் சாகப்போகிறேன் என்று கடிதம் எழுதிவிட்டு தூக்க மாத்திரைகளை விழுங்கி விட்டது போல நடித்தாள். அவள் சாப்பிட்டது ஒரு மாத்திரை தான். ஆனால் பாட்டில் முழுவதும் காலியாக இருந்தது. சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டால் என்ன பலன்... அதற்கு முன்னால் சாப்பிட்டால் என்ன பலன் என்பதை தெரிந்து ஆபத்தில்லாமல் சாப்பிட்டு அழகாக நடித்தாள். 
 
வெளியே சென்று வீடு திரும்பியவர்கள் கதிகலங்கி விட்டனர். அவர்கள் கதறுவதை பார்த்து ரசித்தாள். பிறகு அவளுடைய கண்டிஷனுக்கெல்லாம் ஒப்புக் கொண்டார்கள். அவளை இனி யாரும் கட்டுப்படுத்த மாட்டோம் என்று வாக்குறுதியளித்தார்கள். 
 
மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்தாள். தொலைபேசியை சுழற்றியவள் நம் பிளான் படி நடந்து விட்டது என்று தனது தோழியிடம் பேசிய போது அவளே மாட்டிக் கொண்டாள். “பரவாயில்லையே நான் சொன்ன முறையில் நடித்து எல்லாரையும் வழிக்கு கொண்டு வந்துவிட்டாய் போலிருக்கிறதே. 
 
இப்போது உன்னை எப்படி பார்த்துக் கொள்கிறார்கள்?” என்று கேட்டாள் தோழி. பதிலுக்கு மகள் பேசிய அனைத்தும் மாடியில் இருக்கும் அவள் அப்பாவின் காதுக்குப்போய்விட்டது. தற்செயலாக தொலைபேசியை எடுத்தவர் அனைத்தையும் கேட்டுவிட்டார். அவ்வளவு தான் எல்லோரும் பிய்த்து எடுத்து விட்டார்கள். இது போன்ற சிறுபிள்ளைத்தனமான இளவயது குறும்புக்கு சமயத்தில் குடும்பமே பலியாக வேண்டியிருக்கும். 
 
இம்மாதிரியான விபரீதம் தவிர்க்க என்ன செய்யலாம்? 
 
உங்கள் வீட்டு இளசுகள் யாரிடம் நட்பு வைத்திருக்கிறார்கள்? அவர்களுடைய குடும்ப சூழல் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எங்கு செல்கிறார்கள், யாரோடு செல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் போவதாகச் சொன்ன இடத்திற்கு தான் செல்கிறார்களா, அல்லது வேறு இடத்திற்கு போகிறார்களா என்று கண்காணியுங்கள். 
 
பழக்க வழக்கத்தில் மாறுதல் ஏற்பட்டால் உஷாராகுங்கள். என்னென்ன விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும். கூடுமானவரை குடும்ப விஷயங்களை பேசாதிருக்க வலியுறுத்துங்கள். அவர்களுடைய முகத்தில் அடிக்கடி சிடுசிடுப்பு தோன்றுகிறதா என்று பாருங்கள். 
 
திடீரென அதிக பணம் கேட்டால் அது நியாயமான தேவைக்காகத்தானா என்பதை தெரிந்து கொண்டு பணம் கொடுங்கள். எதையாவது மறைக்க முற்படுகிறார்களா என்று கவனியுங்கள். படிப்பில் கவனம் செலுத்த மறுத்தால் அதற்கு என்ன காரணம் என்பதை துப்பறியுங்கள். கல்வியை பாதிக்கும் நட்பை 'கட்' பண்ண நாசூக்கான வழி வகைகளை கையாளுங்கள். 
 
ஒழுங்காக பள்ளி, கல்லூரிக்கு போகிறார்களா என்று கண்காணியுங்கள். செல்போனில் ரகசியமாக பேசிக் கொள்கிறார்களா என்று கவனியுங்கள். அடிக்கடி கவலைப்படுவது, எடுத்ததற்கெல்லாம் அழுவது, மன அழுத்தம், விரக்தி இதெல்லாம் இளம் வயது பிரச்சினைகள். இதுவே கடைசியில் தவறான முடிவுக்கு கொண்டு விடும். 
 
நட்பு வட்டம் பெரிதாகும் போது பெரிய தவறுகள் கூட தூசியாக தெரியும். விளையாட்டாக செய்யும் பல விஷயங்கள் வினையாக முடிந்து விடும். அவர்களுடன் மனம் விட்டுப்பேசி பிரச்சினைகளை புரிய வைக்க முயலுங்கள். இதை அன்பும் அக்கறையுமாய் செய்யும் போது பெற்றோரின் பாச வளையத்திற்குள் பிள்ளைகளின் வெளி நட்பு வளையம் கட்டப்பட்டு விடும். 

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்