Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

உங்களின் காதல் எந்த வகை?

உங்களின் காதல் எந்த வகை?

17 பங்குனி 2014 திங்கள் 12:02 | பார்வைகள் : 16704


காதல் இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் 'அவனும், அவளும்' பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள். பிடித்தமானவரை கவர்ந்து விடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை எத்தனை? கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது, குட்டிக்கரணம் அடிப்பது, கலையாத தலையை கலைத்து விட்டு சீவிக் கொள்வது, சோகமாக இருக்கும் அவன் முகம் அவளைக் கண்டதும் மலர்ந்துவிடுவது என எத்தனை 'ரொமான்டிக்' காட்சிகள் ஒவ்வொரு இளைஞனின் வாழ்விலும். அப்படி, நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம்.

உங்கள் 'ரொமான்டிக்' செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எத்தகையது என்பதை விவரிக்கிறார்கள்.

மன்மதன் காதல்

காதல் பாடல் பாடிக் கொண்டிருக்கிறீர்களா? அதிலும் உணர்ச்சி ஊட்டும் வரிகளை அழுத்தமாக உங்கள் உதடுகள் உச்சரிக்கிறதா? அப்படியெனில் உங்களுக்கு காதல் உணர்வுகள் அதிகம். காதல்வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம்.

உங்கள் கட்டுக்கடங்காத விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக காதலியின் விருப்பத்தை எதிர்பார்த்து பாடலாக பாடி அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இந்த வகை ரொமான்டிக்கை ஆய்வாளர்கள் `மன்மதன் காதல்’ என்கிறார்கள். இந்த வகையில் உள்ள ஒரே ஒரு குறைபாடு காதலர் இருவரில் ஒருவரது ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனாலும் உங்களுக்குள் நல்ல புரிதலும், மற்றவர் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி விட்டுக் கொடுத்தலும் நிகழும். இப்படி தீவிர காதலுணர்வு கொண்ட காதலர்கள் மகிழ்ச்சியாகவும், கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்.

கவன ஈர்ப்பு காதல்

நீங்கள் காதலிக்கும் பெண்ணை தினமும் பார்க்கிறீர்கள். ஓரளவுதான் பழக்கம். ஆனால் நெருக்கமில்லை. மற்றவர்களோடு கூட்டத்தோடு கூட்டமாக மட்டுமே சந்திக்க முடிகிறது. அப்போது அவளை கவருவதற்காக, அவள் விரும்பும்படியாக அல்லது அவள் கேட்கும் படியாக பாடுவது, பேசுவது என்று கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறீர்களா? உங்கள் பேச்சை அவளும் ரசித்து புன்னகைக்கிறாள். ஆனால் பதில் எதுவும் சொல்வதில்லை. இப்படி இருக்கிறதா? உங்கள் நிலைமை.

ஆராய்ச்சியாளர்கள் இதனை 'கவனஈர்ப்பு காதல்' என்கிறார்கள். இது முழுமையான காதல் அல்ல. உங்களுக்குள் காதல் உணர்வுகள் நிரம்பி இருக்கிறது. ஆனால் அவளுக்குள் அதுபோன்ற உணர்வு நிறைய இருக்காது. நிலைமை இப்படி இருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் ரசிப்பீர்கள். அவள் தனிமையில் சந்திப்பதையோ, நெருக்கத்தை அனுமதிப்பதையோ விரும்பமாட்டாள். இது பொழுதுபோக்கு காதலென்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அவள் மீது அன்பு, அக்கறை, மரியாதை எல்லாமே இருக்கிறது. இளமையின் குறுகுறுப்பு இல்லாத பார்வையே பார்க்கிறீர்கள். பேசவும் செய்கிறீர்கள். அதில் உள்ளர்த்தமோ, ரகசியமோ எதுவுமில்லை. அவளும் அப்படியே பழகுகிறாள். 'இது எந்த வகை காதல்?' என்றுதானே கேட்கிறீர்கள்.

சேமிப்பு காதல்

இப்படிப்பட்ட காதலை, ஆய்வாளர்கள் 'சேமிப்பு காதல்' என்று வகைப்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட இது ஆழமான நட்புணர்வே. இருவரும் ஆழமான அன்பு வைத்திருப்பார்கள். காதல் உணர்வையும் புரிந்து வைத்திருப்பீர்கள்.

'காதலி கிடைத்தால் இவளைப்போல கிடைக்க வேண்டும்' என்று ஏங்கவும் செய்வீர்கள். ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அளவுக்கு நேசம் வைத்திருப்பீர்கள். நீங்கள் விரும்பினால் இந்த நட்பை வாழ்க்கை முழுவதும் நீடிக்கவும் செய்யலாம்.

திட்டக்காதல்

'உங்களை பிடித்திருக்கிறது' என்று உங்கள் காதலி சொல்லிவிட்டாள். உங்களுக்கும் அவளைப் பிடித்திருக்கிறது. நன்றாகவே பேசிக் கொள்கிறீர்கள். ஆனால் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் எல்லை மீறல் இல்லவே இல்லை. காமத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள் ஆனால் விரசம் இல்லை. பிரச்சினையைப் பற்றி பேசுகிறீர்கள், உங்கள் குறையை அவளும், அவளது குறையை நீங்களும் சுட்டிக்காட்டி பேசிக் கொள்கிறீர்கள், முரண்பாடு ஏற்பட்டாலும் முட்டிக் கொள்வதில்லை…!

உங்கள் காதல் இந்த நிலையில் இருக்கிறதா?

இது 'திட்டக் காதல்' வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுக்கவும், வாழவும் விரும்பும் ஜோடி நீங்கள். உங்கள் உணர்வுகளும் கூட எல்லைக்குட்பட்டதுதான். உங்கள் அன்பும் என்றும் நீடித்திருக்கும்.

இனிப்பு காதல்

அடிக்கடி தீண்டிக் கொண்டும், சீண்டிக் கொண்டும் இருப்பார்கள் சில காதலர்கள். பெரும்பாலும் சீண்டல்கள் எல்லைமீறும். இருந்தாலும் ஒருவரை ஒருவர் தடுப்பதில்லை. அந்த சீண்டலை அனுமதிக்கிறீர்கள்.

இப்படிப்பட்ட காதலராக நீங்கள் இருந்தால்?


இதனை 'இனிப்பு காதல்' என்று வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இவர்களுக்குள் ஆழமான காதல் உணர்வு இருக்கும். அதிக உணர்ச்சி கொண்டவராகவும், கொஞ்சம் கூச்சம் உடையவராகவும் இருப்பார்கள்.

இவர்கள் காதலில் காமம் கலந்திருப்பதால், ஒருவரின் தீண்டலை இன்னொருவர் தடுக்கமாட்டார். இவர்களுக்குள் தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும், சில ஒளிவு மறைவு ரகசியங்களும் இருக்கும். ஆனால் காதலை கடைசிவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

வெற்றிக்காதல்

காதலி போனில் பேசும்போது லேசாக இருமும் சத்தம் கேட்டால் போதும் உடனே ஆபீசுக்கு விடுமுறை எடுத்துவிட்டு காதலியை நேரில் பார்க்க கிளம்பிவிடுகிறீர்களா? அவள் விளையாட்டுக்காக 'உடனே பார்க்க வேண்டும் போலிருக்கிறது வருவாயா?' என்றால் என்ன வேலையிருந்தாலும் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு அவளிடம் போய் ஆஜராகி விடுகிறீர்களா? இதுபோன்ற ஆழ்ந்த காதலை அவளும் உங்களிடம் வைத்திருக்கிறாளா?

உங்கள் காதல் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இதனை 'வெற்றிக் காதல்' என்கிறார்கள், ஆய்வாளர்கள். இப்படிப்பட்ட காதலர்கள் ஒருவருக் கொருவர் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள். பிரச்சினை என்றால் தன்னையே தரவும் தயாராவார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்