Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

மது குடிக்கும் மங்கைகள் என்ன ஆவார்கள்?

மது குடிக்கும் மங்கைகள் என்ன ஆவார்கள்?

26 பங்குனி 2016 சனி 10:31 | பார்வைகள் : 15684


 மதுவின் பிடி மனித வாழ்க்கை கலாசாரத்தோடு இணைந்து விட்டது என்பது கொடிய உண்மை. மது தனது பிடியை சமூகத்தை நோக்கி நெருக்கிக் கொண்டே போகிறது. மது அருந்தும் விஷயத்தில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது வேதனையின் உச்சம்.

 
சில பெண்கள் தங்கள் உயர்ந்த அந்தஸ்தை காட்டிக்கொள்ள குடிக்கிறார்கள். தான் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவள் இதெல்லாம் அங்கே சாதாரணம் என்கிறார்கள். வெளிநாட்டு தட்பவெப்பம் வேறு. இந்திய தட்பவெப்பம் வேறு. ரத்தம் உறைந்து போகும் அளவிற்கு குளிரில் வசிப்பவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள மது அருந்தும் கட்டாயத்திற்கு இயல்பாகவே தள்ளப்படுகிறார்கள். இங்கு அப்படியான சூழல் இல்லை. அப்படியிருந்தும் தேவையில்லாமல் மது அருந்துகிறார்கள்.
 
விடுமுறையை கழிக்க மது விருந்து என்று ஏற்பாடு செய்து மகிழ்கிறார்கள். எந்த நேரம் என்ன விளைவு உண்டாகும் என்று யாராலும் அனுமானிக்க முடியாது. காரணம் எதுவாக இருந்தாலும் விளைவு ஆபத்தானது.
 
மது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிக பாதிப்பை உண்டுபண்ணும். பெண்கள் மது போதையில் வீழ்ந்துவிட்டால் போதை தெளிய காலதாமதமாகும். ஆண்கள் உடலில் இருக்கும் தண்ணீரை விட பெண்கள் உடலில் தண்ணீரின் அளவு குறைவு. இதனால் போதை தலைக்கேறினால் இறங்குவது சிரமம். பெண்களுக்கு உடல்ரீதியாக போதையை தாங்கும் சக்தி மிக குறைவு.
 
பெரும்பாலான பெண்கள் தனியாக குடிக்க முன்வருவதில்லை. வீட்டில் உள்ள ஆண்களே இதற்கு பழக்கி விடுகிறார்கள் அல்லது வேறுவழியில் பழகிக்கொள்கிறார்கள். பெரிய அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு உடனிருக்கும் ஆண்கள் குடிக்க கற்றுக்கொடுத்து விட்டு, அதன் மூலம் சில சந்தர்ப்பங்களில் அப்பெண்ணை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். தனிமை, காதல் தோல்வி, கணவன் மீதான வெறுப்பு, குடும்பப் பிரச்சினை என்று ஏதேனும் விஷயத்தின் ஆறுதலுக்காக குடிக்க ஆரம்பித்து பிறகு அடிமையாகிவிடுகிறார்கள்.
 
குடிக்கு அடிமையாகிக்கிடக்கும் ஆண் சமூகத்தை திருத்தும் பொறுப்பு பெண்களிடம் தான் உள்ளது. அப்படிப்பட்ட நிலை யிருக்கும் பெண்களே குடிக்கும் போது அதை ஒரு வெறுமையோடு பார்க்க வேண்டியுள்ளது. மேலும் குடியால் நேரடியான உடல்நல பாதிப்புகள் வெகு சீக்கிரத்தில் ஏற்படுவதும் பெண்களுக்கே!.
 
உடல் எடை கூடுவது, கல்லீரல் பாதிப்பு, இதயநோய், மார்பக புற்றுநோய், வயிற்றுப்புண், கண்பார்வை மழுங்குதல் போன்ற பல வியாதிகளுக்கு வழிவகுக்கிறது குடி.
 
ஆண்கள் குடியில் சிக்கிக்கொண்டால் குடும்பத்தை பெண்கள் எப்பாடுபட்டாவது நிமிர்த்திவிடுவார்கள். பெண்கள் குடியில் மூழ்கிவிட்டால் வீடும் நாடும் நிலைகுலைந்து போய்விடும்.
 
அந்தஸ்துள்ள பெண்கள் மட்டுமில்லாது அடிமட்டத்திலிருக்கும் பெண்களும் குடிக் கிறார்கள். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். தொடர்ந்து குடிக்கும் பெண்களுக்கு குழந்தை உண்டாகும் வாய்ப்பு மிக அரிது.
 
போதையினை உடலின் எந்த பாகமும் சேர்த்து வைத்துக்கொள்வதில்லை. அதனால் உடல் பல விதத்திலும் கட்டுப்பாடின்றி இயங்கி, தள்ளாட்டம் அடைந்து, மூளை சோர்வடைகிறது. உடலுக்கு வேகமும் ஆவேசமும் பன்மடங்கு அதிகமாகிறது. இதனால் உடலில் சேர்ந்திருக்கும் வைட்டமின், மினரல்கள் அதீதமாக செலவாகி உடல் சோர்ந்து உதறல் ஆரம்பமாகிறது. மன அழுத்தம், இதய துடிப்பு குறைவது, இயல்பை மீறி மூச்சு வாங்குவது, நரம்பு தளர்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. உடலில் பொட்டாசியம், மெக்னீஷியம் குறைவதால் பலவீனம், பசியின்மை ஆகியவை உண்டாகிறது.
 
குறிப்பாக மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் பிறரை காட்டிலும் குடிக்கும் பெண்களுக்கு அதிகமாக உள்ளது. சமூகவிரோதிகளால் தவறாக நடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கும் அவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள்.
 
பள்ளி, கல்லூரி மாணவியர்களிடம் மதுபழக்கம் துளிர்விட ஆரம்பித்திருப்பது உடனே கிள்ளியெறியப்பட வேண்டியது. குடி அவர் களின் எதிர்காலத்தை மொத்தமாக கருவறுக்கும் செயலின் தொடக்கம். படிப்பில் அக்கறையின்மை, கவனக்குறைவு, மிகுதியான கோபம், சிடுசிடுப்பு, மனச்சோர்வு, உடற்சோர்வு, திடீரென்று வியர்த்தல், நா வறட்சி, தலைவலி, கண்கள் சிவந்து காணப்படுவது, உடல்மெலிவு அல்லது பருமனாவது, தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுதல், மேலும் மாதவிடாய் சிக்கல்கள் என்று நீண்ட பட்டியலை நீட்டுகிறார்கள் மருத்துவர்கள்.
 
அதிகமாக குடிக்க பழகிவிட்டால் திடீரென்று நிறுத்தவும் முடியாது. அவ்வாறு முயற்சித்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும் இக்கட்டான சூழல் உருவாகும். குடியினில் தொடங்கி, புகையிலை பொருட்கள், பான் பொருட்கள் என்று போதைப் பழக்கம் நீளும்.
 
இன்று அதிகமாக தற்கொலை செய்துகொள்பவர்களில் குடிக்கு அடிமையான பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
 
நாட்டின் வருமானத்தின் முக்கிய காரணிகளாக மது, சிகரெட், புகையிலை, பான் பொருட்கள் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பதால் இவற்றை தடைசெய்ய அரசு தயக்கம் காட்டுகிறது. அதற்கு பதிலாக வரிகள், விலை ஆகியவற்றை அதிகரித்து கட்டுப்படுத்த முயல்கிறது.
 
பெண்களுக்கு தனியாக ‘‘மது பார்’’ வேண்டுமென கோரிக்கை வைக்கும் நிலைக்கு இன்றைய சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது என்கிற போதே குடியின் கோர முகம் வெளிச்சத்திற்கு வருகிறது.
 
நாட்டுச்சூழலுக்கு குடிப்பழக்கம் உகந்ததல்ல என்பதை குடிப்பவர்களும் அதை ஊக்குவிப்பவர்களும் உணர்ந்தாலொழிய இந்த அவல நிலை மாறாது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்