Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

முதலில் காதல்.. முழுவதும் நேசம்..

முதலில் காதல்.. முழுவதும் நேசம்..

25 ஆடி 2020 சனி 11:10 | பார்வைகள் : 12968


 வாழ்க்கை துணையுடன் புதிய பயணத்தை தொடங்கும்போது அவரின் பலத்தையும், பலவீனத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவருக்கு உரிய அங்கீகாரமும் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் கேலி, கிண்டலுக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது.

 
வாழ்க்கையில் சந்தித்த சுவாரசியமான சம்பவங்கள், இதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியங்கள் பற்றி துணையிடம் பேசலாம். அப்படி ஆழ்மனதில் இருக்கும் முக்கியமான விஷயங்களை வெளிப்படுத்தும்போது சற்று அசவுகரியங்களை உணரலாம். ஆனால் இத்தகைய விஷயங் கள் துணைக்கு நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுக்கும். ஏனெனில் துணை உங்களை முழு மனதோடும், ஆத்மார்த்தமாகவும் நம்ப வேண்டும். ஆரம்பத்தில் இது எளிதான விஷயம் அல்ல. ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பும், நேசமும்தான் உறவை பலப்படுத்தும்.
 
 
எல்லா பெண்களுமே திருமணத்திற்கு முன்பு மாமியார் பற்றி வேறுவிதமான கருத்துக்களை கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட பெண்களிடம் தனது தாயாரின் சுபாவங்களையும், குணாதிசயங்களையும் ஆரம்பத்திலேயே கணவர் எடுத்துச்சொல்லிவிட வேண்டும். மாமியாரின் செயல்பாடுகளின் மீது மனைவிக்கு ஆட்சேபம் ஏற்பட்டால் பக்குவமாக சொல்லி புரிய வைக்க வேண்டும். மாமியார், மனைவி இருவரின் நடவடிக்கைகளில் வெளிப்படும் நல்ல விஷயங்களை பாராட்ட வேண்டும். அது இருவருக்கும் இடையேயான இடைவெளியை குறைக்க உதவும்.
 
திருமணமான ஆரம்ப நாட்கள் வேடிக்கையாகவும், சுவாரசியமிக்கதாகவும் நகரும். இருவரும் சந்தோஷ தருணங்களை அனுபவிப்பார்கள். அதேநேரத்தில் திருமணத்திற்கு முன்பு கணவரின் உலகம் எப்படிப்பட்டதாக இருந்தது? அதனை இப்போதும் அப்படியே தொடர விரும்புகிறாரா? என்பதை கேட்டு அவரது உணர்வுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். திருமணத்திற்கு முன்பு இருந்ததைப் போல சில மணி நேரங்களை கழிப்பதற்கும் அனுமதிக்க வேண்டும். இது கணவன்-மனைவி இருவருக்குமே பொதுவானது.
 
குடும்ப பொறுப்புகளை நிர்வகிப்பதில் இருவருக்கும் பங்கு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க தொடங்கும். அதனை நினைவில் கொண்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும்.
 
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்வதற்கு அன்பு போதுமானது என்று சொல்வது எளிதானது. ஆனால் அன்பு மட்டுமே எல்லா தேவைகளையும் நிவர்த்தி செய்துவிடாது. குடும்பத்தின் பெரும்பாலான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் தேவை. திருமணமான புதிதில் இருந்தே தேவையற்ற செலவுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. பணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தை நல்லபடியாக கட்டமைக்க முடியும்.
 
திருமணமான புதிதில் இருக்கும் காதலும், நேசமும் சில காலத்திற்குள் முடிவுக்கு வந்துவிடுகிறது என்ற வருத்தம் இருவரிடமும் வெளிப்படுவதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது. இருவருமே எதிர்பார்க்காத நேரத்தில் சின்ன சின்ன ‘சர்ப்பிரைஸ் கிப்ட்’கள் மூலம் அவ்வப்போது அன்பை வலுப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். பெரும்பாலானோர் திருமணமாகி நீண்ட காலத்திற்கு பிறகுதான் திருமணமான புதிதில் பகிர்ந்துகொண்ட நேசத்தை உணர்கிறார்கள். அப்படி அல்லாமல் எல்லா நேரமும் அன்பை வெளிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
 
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் திருமணம் மாற்றத்தையும், திருப்பத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும். திருமண தம்பதிகள் திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கைமுறையில் இருந்து புதிய சூழலுக்கு மாற வேண்டியிருக்கும். குடும்ப பொறுப்பையும் சுமக்க வேண்டியிருக்கும். பெரும்பாலான தம்பதிகளுக்கு முந்தைய வாழ்க்கை முறையை விட மகிழ்ச்சியான வாழ்க்கையை திருமணம் ஏற்படுத்தி கொடுக்கும். சிலருக்கு சவாலானதாக மாறும். திருமணத்திற்கு பிறகு எதிர்கொள்ளும் இயல்பான மாற்றங்கள் பற்றியும், அவற்றை எதிர்கொள்ளும் விதம் பற்றியும் பார்ப்போம்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்