Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

காதலை வெளிப்படுத்த, காதலரின் சுபாவங்களை பரிசோதிக்க நவீன தேர்வுமுறை....

காதலை வெளிப்படுத்த, காதலரின் சுபாவங்களை பரிசோதிக்க நவீன தேர்வுமுறை....

7 வைகாசி 2022 சனி 01:13 | பார்வைகள் : 13029


 காதலை வெளிப்படுத்த, காதலரின் சுபாவங்களை பரிசோதிக்க, ‘டீன் ஏஜ்’ இளசுகள் எடுத்துக்கொள்ளும் நவீன தேர்வுமுறைதான், ‘டே அவுட்டிங்’. அதாவது தூரத்தில் பார்த்து ரசித்தவரை, பெற்றோர் நிச்சயித்த (பெண்/ஆண்) நபரை பற்றி தெரிந்து கொள்ள இந்த ‘அவுட்டிங்’ சமாச்சாரங்கள் உதவுகின்றன. நம்முடைய காதலரை, வருங்கால இணையை இந்த அவுட்டிங் சந்திப்பின்போது ‘இம்ப்ரஸ்’ செய்யவேண்டிய கட்டாயம், எல்லோருக்கும் இருக்கிறது. அதனால் ‘அவுட்டிங்’ விஷயத்தை ரொம்ப சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். அதற்கு நிச்சயம் மதிப்பு கொடுக்கவேண்டும். அதற்கான சில டிப்ஸ் இதோ....

 
எங்கே சந்திக்க போகிறீர்கள் என்பது மிக முக்கியம். சினிமா, பார்ட்டி என எக்கச்சக்க இடங்கள் இருந்தாலும், சிறந்த தேர்வாக அமைவது ரெஸ்டாரெண்டுகள்தான். காரணம், இந்த முதல் சந்திப்பில்தான் உங்களை பற்றி அவரும், அவரைப் பற்றி நீங்களும், நிறைய பேசித்தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கும். அதற்கு, எந்த இடையூறும், கவனச்சிதறலும் இல்லாமல் இருப்பது முக்கியம். எனவே இரைச்சல் இல்லாத ரெஸ்டாரெண்டை தேர்வு செய்து அங்கு செல்வதே சிறப்பானது.
 
 
உங்களை நீங்கள் எவ்வாறு வெளிப்படுத்திக்கொள்கிறீர்கள் என்பது மிக முக்கியம். அதற்கேற்றார் போல உடை உடுத்துங்கள். அதை தேர்வு செய்வது மிக சுலபம். சில உடைகளை அணியும்போதே நமக்குள், ஒருவித ‘பாசிட்டிவ்’ எனர்ஜி பெருக்கெடுக்கும். அந்த ஆடைதான் ‘பெஸ்ட் சாய்ஸ்’. ரொம்ப பார்மலாய் இல்லாமல், ரொம்பவும் கேஷுவலாய் இல்லாமல் செமி பார்மலில் செல்வது சிறப்பானது. காரணம், உங்கள் ஜோடியின் ரசனை பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாதே... கூட்டத்தில் ‘நான் இங்கதான் இருக்கேன் பாரு’ என காண்பித்து கொடுக்கும் பளீர் வகையறா காஸ்ட்யூம்களை தவிர்க்க வும்.
 
அலுவலகத்திற்கு செல்வது போலவே, அவுட்டிங் விஷயத்திலும் நேர மேலாண்மை மிக முக்கியம். குறித்த நேரத்தில் அங்கு இருப்பவர்களுக்கு எக்ஸ்ட்ரா மதிப்பெண்கள் கிடைக்கும். எனவே, மற்ற வேலைகளை எல்லாம் முன்கூட்டியே முடித்துவிட்டு திட்டமிட்டு கிளம்புங்கள். காரணம், ‘காத்திருத்தல் சுகம்’ எல்லாம் காதல் வந்தபின்தான். இப்போது இல்லை.
 
ரெஸ்டாரெண்டில் நீங்கள் எப்படி அமர்கிறீர்கள் என்பதும் முக்கியமானது. முதல் சந்திப்பிலேயே அருகில் அமர்வதை தவிருங்கள். எதிர் எதிரே அமருங்கள். முகத்தோடு முகம் பார்த்து பேசுவதுதான் சிறப்பு. பேசும்போது கண்களை அலைபாய விடாதீர்கள். எதிரில் இருப்பவரின் கண்ணைப் பார்த்து பேசுங்கள். சந்திப்பில் மிக முக்கியமானது இது.
 
இருவருக்கும் பிடித்த பொதுவான விஷயங்களை பற்றி பேசுங்கள். எதிரில் இருப்பவர் கவனம் உங்கள் மேல் இல்லையென்றால் நீங்கள் போரடிக்கும் விதத்தில் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உடனே பேச்சை மாற்ற வேண்டியது அவசியம். ‘நான், எனது’ என அதிக சுய புராணம் ஒப்புவிக்க வேண்டாம். நடுநடுவே வாய்க்கு ஓய்வு கொடுத்து காதுக்கு வேலை கொடுங்கள்.
 
* பேச்சின் நடுவே அவ்வப்போது ஜாலியாய் ஏதாவது சொல்லி புன்னகையை தவழ விடுங்கள். நிஜ வாழ்க்கையில் ஆக்‌ஷனை விட காமெடிக்குதான் மதிப்பு அதிகம். எதிரே இருப்பவரின் பேச்சையும் ரசித்து கேட்டு புன்னகையை வெளிப்படுத்துங்கள். பிறரை கிண்டல், கேலி செய்வதன் மூலம் எதிரில் இருப்பவரை சிரிக்க வைக்க முயற்சி செய்யாதீர்கள். ‘ஓவர் ஹியூமர் சென்ஸ்’ நல்லதல்ல.
 
ரெஸ்டாரெண்டில் இருக்கிறீர்கள்தான்; அதற்காக உணவு அட்டவணையை எடுத்து, மளமளவென ஆர்டர் செய்யாதீர்கள். அட்டவணையை எதிரில் இருப்பவரிடம் கொடுத்து அவர் விரும்பும் உணவை ஆர்டர் செய்ய சொல்லுங்கள். அவர் சொல்லி முடித்ததும், ‘இங்கே இந்த குறிப்பிட்ட உணவு சூப்பராக இருக்கும்’ என ஆலோசனை கொடுங்கள். உணவு வகைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். ஆர்டர் செய்த அனைத்தையும் உடனே சாப்பிட்டு விடாதீர்கள். உரையாடல்களின் நடுவே கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிடுங்கள்.
 
பில் செட்டில் செய்வதில் தயக்கம் வேண்டாம். அது உங்களைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களை விதைக்கக்கூடும். எனவே ஜென்டில்மேனாக பில் தொகையை செலுத்திவிடுங்கள். நீங்கள் கொடுப்பீர்கள் என அவரும், அவர் கொடுப்பார் என நீங்களும் தயங்குவது தர்ம சங்கடம். அதை தவிர்த்திடுங்கள்.
 
கிளம்பும்போது, ‘இந்த சந்திப்பு நன்றாக இருந்தது’ என ஒரு கமெண்டை தட்டிவிடுங்கள். ‘போகும் வழியில்தான் எனக்கும் வீடு. சேர்ந்தே போகலாமா?’ எனக் கேட்டுப் பாருங்கள். சிலருக்கு இது பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமலும் போகலாம். பிடித்திருந்தால் யோகம் உங்களுக்கு. மறுத்தால் வற்புறுத்தாமல் வழியனுப்பி விடுங்கள்.
 
ரொமான்டிக் தருணங்களை குலைக்கும் மிகப்பெரிய தொல்லை, நம் மொபைல்தான். எனவே உள்ளே செல்லும்போதே மொபைலின் வாயை அடைத்துவிட்டு (சைலண்ட் மோட்) செல்லுங்கள். எந்த காரணத்திற்காகவும் மொபைலை பாக்கெட்டில் இருந்து எடுக்க வேண்டாம். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளியுலக விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், இந்தக்காட்சியில் நீங்கள்தான் ஹீரோ/ஹீரோயின் என்பதை மறந்து விடாதீர்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்