Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இன்பத்தை கருவாக்கினாள் பெண்

இன்பத்தை கருவாக்கினாள் பெண்

29 கார்த்திகை 2021 திங்கள் 07:00 | பார்வைகள் : 16648


 ஆண், பெண் இருவருக்கும் உடலில் உள்ள பிரச்னைகளாலும் குழந்தையின்மை ஏற்படலாம். குழந்தையின்மைக்காக சிகிச்சைக்கு வருபவர்களில் யாராவது ஒருவருக்கு உடலில் பிரச்னை இருப்பது குறைவே.

 
ஆணும் பெண்ணுமாய் இரண்டு உயிர்கள் படைக்கப்பட்டதன் முதல் நோக்கம் இனவிருத்தி. இதற்கான உபகரணம்தான் தாம்பத்தியம். ஒரு மனித உயிரை உற்பத்தி செய்வதென்பது இயந்திரத்தனமாக நடப்பதில்லை.
 
ஈர்த்து, இணைத்து, காதல் கொள்ளச் செய்து… காமத்தால் அந்தக் காதலை வற்றாதிருக்கச் செய்து… அன்பின் பிணைப்பால் ஆயுள் உள்ளவரை அடுத்தடுத்த சந்ததியரோடான சங்கிலியை வலிமையுறச் செய்கிறது. ஆண் பெண் என்ற இரு உயிர்களுக்கு இடையில் இன்று வரை வற்றாது இயங்கும் பாசம் கூட இனத் தேவைதான்.
 
 
ஆறறிவு கொண்ட மனித இனம் தாம்பத்தியத்தை ரசனையால் அதனை அழகுறச் செய்கிறது. மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்ய அந்த இருவரது ஆயுளின் அந்தி வரை இணைந்து பயணிக்க… அந்தப் பயணம் நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் இனிக்க வேண்டுமல்லவா… அந்த இணைப்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் உருவாக்கித் தருவது தாம்பத்தியம்.
 
தாம்பத்தியத்தின் விளைவாக தங்களது மழலைச் செல்வத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டால் அந்த ஏக்கம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், மன உளைச்சல் என பல கட்டங்களாக வளர்ந்து அவர்களது தாம்பத்திய இன்பத்தைத் தகர்த்துவிடுகிறது. பிரச்னையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாததும் தாம்பத்தியம் பற்றிய தவறான நம்பிக்கைகளுமே இதற்குக் காரணம் என்கிறார் சிறுநீரக சிறப்பு மருத்துவரான கபிலன்.
 
குழந்தையின்மைக்கான காரணம் மற்றும் தாம்பத்திய உறவின் இன்பத்துக்கு அதுவே எப்படி பிரச்னையாக மாறுகிறது? இதற்கான தீர்வு குறித்தும் விரிவாகப் பேசுகிறார். குழந்தையின்மைக்கான காரணங்களை தெளிவாகப் புரிந்து கொள்வதும் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும்.
 
திருமணமான தம்பதியர் வேலைச் சூழல் காரணமாக மாதத்தில் சில முறை மட்டும் தாம்பத்யம் வைத்துக் கொள்வது, கணவர் வெளி ஊரில் பணியாற்றுவதால் சில மாதங்களுக்கு ஒரு முறை சந்திப்பதும் நீண்ட நாட்கள் கழித்து தாம்பத்யம் வைத்துக் கொள்வதும் குழந்தையின்மைக்கான காரணமாக இருக்கலாம்.
 
இருவரும் ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்துப் புரிந்து கொள்வது அவசியம். பாசிட்டிவ்வான விஷயங்களைப் பாராட்டிக் கொள்வது, ‘நீ இந்த டிரஸ்ல அழகா இருக்க’ என பாராட்டுவது, ‘உனக்கு நான் முக்கியமானவன்…’ ‘இந்த உலகத்திலேயே எனக்கு முதன்மையானவள் நீ’ என்பது போன்ற அன்பின் வெளிப்பாடுகள் அவசியம். தொடர்ச்சியாக தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வதும் அவசியம். அதே சமயம் உடலிலும் எந்தப் பிரச்னைகளும் இருக்கக் கூடாது.
 
ஆணுறுப்பு விறைப்புத்தன்மையில் பிரச்னை, விரைவாக விந்து வெளியேறுதல் பிரச்னைகள் இருந்தாலும் குழந்தையின்மை மற்றும் தாம்பத்யப் பிரச்னைகள் இரண்டும் இணைந்து தாக்கும். பாரம்பரியமான குடும்பம், செக்ஸ் பற்றியெல்லாம் பேசக்கூடாது, யோசிக்கவே கூடாது என வளர்க்கப்பட்ட ஆணும் பெண்ணும் திருமணத்துக்குப் பின் செக்ஸ் வைத்துக் கொள்ளவே கூச்சப்படலாம், பெண் அருவெறுப்படையலாம். செக்ஸ் பற்றின விழிப்புணர்வு இருக்காது. குழந்தை வரம் கேட்டுக் கோயிலுக்குப் போவார்கள், விரதம் இருப்பார்கள்.
 
செக்ஸ் என்பது இயல்பு வாழ்க்கையின் தேவை என்ற எண்ணமே அவர்களுக்கு இருக்காது. தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வதில் தயக்கம், குழப்பம் இருப்பதாலும் குழந்தை உருவாகாமல் போகலாம்.
 
பெண் உடலுறவின் போது ஒத்துழைக்காதது, ஆண் முழு ஈடுபாட்டுடன் தாம்பத்ய உறவு கொள்ளாமல் செயல்படுவது இருவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். மன உளைச்சலை உண்டாக்கும். திருமணத்துக்கு முன் தெளியான பாலியல் கல்வி அவசியம். செக்ஸ் பற்றி ஏற்கனவே மனதில் சேர்த்து வைத்திருக்கும் தயக்கங்களையும் உடைக்க வேண்டும்.
 
ஆண், பெண் இருவருக்கும் உடலில் உள்ள பிரச்னைகளாலும் குழந்தையின்மை ஏற்படலாம். குழந்தையின்மைக்காக சிகிச்சைக்கு வருபவர்களில் யாராவது ஒருவருக்கு உடலில் பிரச்னை இருப்பது குறைவே. 50 சதவீதம் பேரில் ஆண், பெண் இருவருக்குமே பிரச்னை உள்ளது. சிகிச்சைக்கு வரும் தம்பதியரில் இருவருமே சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
 
ஆண்களைப் பொறுத்தவரை விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது முக்கியமான பிரச்னையாக உள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களுக்கு வயதாகும்போது விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். தாமதமாகத் திருமணமாகும்போது விந்தணுக்கள் குறைபாடு ஏற்படலாம்.
 
வேலைக்காக 30 வயதுக்கு மேல் திருமணம் செய்வது. திருமணத்து பின் சில காரணங்களுக்காக குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடுவதாலும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இவர்களுக்கு விந்தணுக்களின் உற்பத்தியில் பிரச்னை இருக்கலாம். விந்தணுக்கள் பயணிக்கும் குழாயில் அடைப்பு இருக்கலாம். இதெல்லாம் சரி செய்யக் கூடிய பிரச்னைகளே.
 
வெரிக்கோ சீல் கண்டிஷன் என்பது விந்தணுக்களை எடுத்துச் செல்லும் நரம்புக்குழாயில் பின்னோக்கிச் செல்லும் நிலை இருக்கலாம். விந்தணுக்கள் விரைவாக வெளியேறுவது என ஆணுக்கு இருக்கும் பிரச்னையை பரிசோதனை மூலம் சரியாகக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் சரி செய்ய முடியும். ஒரு சிலருக்கு என்ன செய்தாலும் விந்தணுக்களின் உற்பத்தியை சரி செய்ய முடியாமல் போகலாம். இதனை சிகிச்சையால் சரி செய்ய முடியாத ஒரு பிரச்னையாகப் பார்க்கலாம்.
 
பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது பாலிசிஸ்டிக் ஓவரீஸ் டிசீஸ், கரு முட்டை வெளியேறும் குழாயில் அடைப்பு இருக்கலாம். கரு முட்டை உற்பத்தியாகி கருக்குழாய் வழியாக கருப்பையை வந்தடைய வேண்டும். ஆணுறுப்பில் இருந்து விந்தணுக்கள் வெளியேறி கருமுட்டையை அடைந்து குழந்தைப் பேறு நிகழ்கிறது. பெண்களுக்கு டியூபில் அடைப்பு இருக்கும் பட்சத்தில் முட்டை வெளியேறாது. இதுபோன்ற காரணங்களால் குழந்தையின்மை என்ற நிலை ஏற்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்