பொய்களை பரப்புவோருக்கு பிரதமர் மோடி சாடல்
2 புரட்டாசி 2026 புதன் 07:20 | பார்வைகள் : 140
சமூகத்தின் ஒரு பிரிவினர் அவநம்பிக்கையையும், பொய்களையும் பரப்புவதாக குற்றம் சாட்டி, இந்தியப் பொருளாதாரத்தை விமர்சித்து வரும் ராகுல் உள்ளிட்டோரை பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
7.8 சதவீத வளர்ச்சி
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவில் கூறியிருப்பதாவது:
எனது சக குடிமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 7.8 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் நாடு மகிழ்ச்சியில் திளைக்கிறது. இந்த நாட்டின் மக்களின் உறுதிப்பாட்டிற்கும், அவர்களின் கடின உழைப்பிற்கும் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். நாட்டு மக்களின் கடின உழைப்பால் இது நிகழ்ந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குப் பிறகு எங்கும் நிலையான சூழல் இல்லாதபோதும், இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. பல்வேறு தடைகளைத் தாண்டி 7.8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளோம். சமூகத்தின் ஒரு பிரிவினர் அவநம்பிக்கையையும், பொய்களையும் பரப்புகின்றனர்.
உலகளாவிய நெருக்கடி
உலகம் மோதல்களில் சிக்கியுள்ளது. எல்லா திசைகளிலிருந்தும் போர் குறித்த செய்திகள் வருகின்றன. உலகம் பல்வேறு நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ளது. விநியோகச் சங்கிலிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில், நாடு தனது வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
உலகளாவிய சீர்குலைவுகளுக்கு மத்தியில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ள, உள்நாட்டு உற்பத்தித் திறன்களை வலுப்படுத்துவது இன்றியமையாததாக இருக்கும். அதற்கு, தற்சார்பு இந்தியாவாக மாறுவது அவசியம்.
தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்
வெறும் பொழுதுபோக்குக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதையும், அத்தியாவசியத்துக்கு அதிகமாகத் தங்கம் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அந்த அளவுக்கு விரைவாக வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.



