சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு! 22 வயது இளம்பெண் பலி

சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு! 22 வயது இளம்பெண் பலி

31 ஆவணி 2026 திங்கள் 08:13 | பார்வைகள் : 205


வடக்கு சுவிட்சர்லாந்தில் இரவு நேர இசை நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 05 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுரிச் நகருக்கு அருகில் உள்ள ஆராவ் எனும் நகரில் அமைந்துள்ள குதிரைப் பந்தய மைதானத்தில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்நாட்டு நேரப்படி அதிகாலை 2:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த 22 வயது பெண்ணைத் தவிர, 24 முதல் 27 வயதுக்குட்பட்ட 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 05 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் இசை அமைத்துக்கொண்டிருந்த 'டேக்கிபோ' என்ற சுவிஸ் டிஜே , இந்த தாக்குதலில் தனது நெருங்கிய நண்பரை இழந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற நபர் யார்? அவரது பின்னணி அல்லது தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

கொலையாளியைக் கைது செய்வதற்காகச் சுவிஸ் பொலிஸார் அப்பகுதி முழுவதையும் தீவிரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ஆர்காவ் ரேசிங் கிளப் இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவசரக்காலச் சேவையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

 

 

தொடர்ந்து படிக்க