தமிழக கவர்னராக கிரண்குமார் ரெட்டி? வெளியான தகவல்

தமிழக கவர்னராக கிரண்குமார் ரெட்டி? வெளியான தகவல்

30 ஆவணி 2026 ஞாயிறு 11:09 | பார்வைகள் : 224


தமிழக கவர்னராக ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரள கவர்னராக பதவி வகித்து வரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இந்நிலையில், தமிழகத்தின் புதிய கவர்னராக ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி நியமிக்கப்படலாம் என டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

### யார் இந்த கிரண் ரெட்டி?

ஆந்திர முன்னாள் முதல்வரான கிரண்குமார் ரெட்டி, ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தவர். ஒன்றுபட்ட ஆந்திராவின் கடைசி முதல்வராகவும் அவர் பதவி வகித்தார்.

ஆந்திரப் பிரிவினைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர், 2023-ல் பா.ஜ.,வில் இணைந்தார். தற்போது பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

### பின்னணி என்ன?

முன்னாள் முதல்வர் நல்லாரி கிரண்குமார் ரெட்டிக்கும், முதல்வர் விஜய்க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பக்கம் கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே, கிரண்குமார் ரெட்டி தமிழக கவர்னராக நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட கிரண்குமார் ரெட்டி, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் சபாநாயகராகவும், முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். இந்த அனுபவத்தின் அடிப்படையில், கவர்னர் பதவிக்கு அவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தொடர்ந்து படிக்க