கொழும்பில் பட்டம் பெற வந்த பெண்ணை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய காதலன்

கொழும்பில் பட்டம் பெற வந்த பெண்ணை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய காதலன்

29 ஆவணி 2026 சனி 16:14 | பார்வைகள் : 436


கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற யுவதி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்தைப் பொலிஸார் உடனடியாகச் செயற்பட்டு முறியடித்துள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழக ஸ்ரீபாலி பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்ற யுவதி ஒருவர், அவரது காதலனால் காரில் கடத்திச் செல்லப்பட்டார்.

பிற்பகல் 1:30 மணியளவில் நாரஹேன்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, நாரஹேன்பிட்டி - நாவல வீதியில் காரை நிறுத்தப் பொலிஸார் உத்தரவிட்டனர்.

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றதால், பொலிஸார் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்போது சாரதி காரைக் கைவிட்டுத் தப்பி ஓடினார்.

காரை சோதனையிட்ட பொலிஸார், உள்ளே இருந்த யுவதியைப் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர் கொழும்பு சட்டவைத்திய அதிகாரி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடத்தப்பட்ட யுவதி மற்றும் தப்பிச் சென்ற காதலன் இருவரும் மாத்தறை  பகுதியை சேர்ந்தவர்கள்.

காதலனுக்குத் தெரிவிக்காமல் யுவதி பட்டமளிப்பு விழாவுக்கு வந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்தது யுவதியின் தந்தை ஆவர்.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் சந்தேகநபருடையது என்றும், அதை யுவதியின் தந்தையே விழாவுக்கு ஓட்டி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

தப்பிச் சென்ற காதலன் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுகளைக் கொண்டவர்.

தற்போது கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தப்பிச் சென்ற சந்தேகநபரைப் பிடிக்க கொழும்பிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சா மற்றும் கொழும்பு தெற்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் லூஷன் சூரியபண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படிக்க