Paristamil Navigation Paristamil advert login

உலகக்கோப்பையில் மிரட்டும் பிரெஞ்சு அணி: எம்பாப்பே அதிரடி !!

உலகக்கோப்பையில் மிரட்டும் பிரெஞ்சு அணி: எம்பாப்பே அதிரடி !!

1 ஆடி 2026 புதன் 07:30 | பார்வைகள் : 472


உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரெஞ்சு அணி தனது அபார ஆட்டத்தால் மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நியூயோர்கில் நேற்று 30ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 16-வது சுற்றுப் போட்டியில் ஸ்வீடன் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரெஞ்சு அணி, தாம் ஏன் இந்த தொடரின் முக்கியமான விருப்ப அணியாக கருதப்படுகிறோம் என்பதை நிரூபித்துள்ளது. 

குழு சுற்றில் காட்டிய அதே தீவிரத்தையும் தாக்குதல் ஆட்டத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்திய "Les Bleus” அணி, ரசிகர்களிடமும் கால்பந்து விமர்சகர்களிடமும் பாராட்டுகளை குவித்துள்ளது. போட்டிக்குப் பின்னர் பேசிய பயிற்சியாளர் Didier Deschamps , “நாங்கள் ஒரு முக்கிய பணியில் இருக்கிறோம்” என உறுதியுடன் தெரிவித்தார். தனது கடைசி உலகக்கோப்பை பயணமாக இருக்கக்கூடிய இந்த தொடரில், மூன்றாவது உலகக்கோப்பை நட்சத்திரத்தை நாட்டுக்கு பெற்றுத்தர வேண்டும் என்பதே அணியின் ஒரே இலக்காக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அணியின் முன்னணி நட்சத்திரமான Kylian Mbappé, இந்த உலகக்கோப்பையிலும் அதிரடி ஆட்டத்தை தொடர்கிறார். இத்தொடரில் ஏற்கனவே மூன்றாவது இரட்டை கோல்களை பதிவு செய்துள்ள அவர், உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் (19 கோல்கள்) அடித்த வீரர் பட்டத்திற்காக லியோனல் மெஸ்ஸியுடன் ஒரு கோல் மட்டுமே பின்தங்கியுள்ளார். அவருக்கு பின்னால் Michael Olise தனது துல்லியமான தாக்குதலை மேலும் பலப்படுத்தி வருகிறார்.மேலும் Le Ballon d'or விருது பெற்ற Ousmane Dembéléவும் அணியின் தாக்குதல் வரிசையில் இருப்பது எதிரணிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

அதேவேளை, தாக்குதல் ஆட்டத்தை முன்னிறுத்தியும் பாதுகாப்பில் பிரெஞ்சு அணி உறுதியான கட்டுப்பாட்டை பேணி வருகிறது. இந்த உலகக்கோப்பையில் இதுவரை இரண்டு கோல்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ள பிரான்ஸ், ஸ்வீடன் அணியின் முக்கிய வீரரான Viktor Gyökeresயும் முற்றிலும் கட்டுப்படுத்தியது. அணியின் ஒற்றுமை மற்றும் வீரர்களுக்கிடையிலான நம்பிக்கை தான் தற்போதைய வெற்றியின் முக்கிய காரணம் என துணைத் தலைவர் Aurélien Tchouameni தெரிவித்துள்ளார். 

அடுத்த சுற்றில் paraguay அணியை எதிர்கொள்ளவுள்ள பிரெஞ்சு அணி, எந்தவித அலட்சியமும் இன்றி தொடர்ந்து முன்னேற உறுதியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.