Paristamil Navigation Paristamil advert login

மின்சார ஆட்டோக்கள், டூவீலர்கள் மட்டும் பதிவு: டில்லி அரசு முடிவு

மின்சார ஆட்டோக்கள், டூவீலர்கள் மட்டும் பதிவு: டில்லி அரசு முடிவு

30 ஆனி 2026 செவ்வாய் 07:10 | பார்வைகள் : 161


டில்லி அரசின் மின்சார வாகனங்கள் தொடர்பான கொள்கையின்படி வரும் ஜனவரி 1 முதல் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் என்றும், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் டூவீலர்களுக்கான பதிவு செய்வது 2028 ஏப்ரல் 1 முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது; இந்த புதிய மின்சார வாகனங்கள் கொள்கை ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். முதல் ஆண்டு மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் வாங்குபவர்களுக்கு மானியமாக, ரூ.30 ஆயிரமும், மூன்று சக்கர வாகனங்கள் வாங்குவோருக்கு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இந்த கொள்கை 2030 ஜூலை1 வரை அமலில் இருக்கும்.

இந்த கொள்கையை அடுத்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாக அமல்படுத்த ஆக்கப்பூர்வமான திட்டம் உருவாக்கப்படும். இதற்காக டில்லி அரசு அடுத்த 4 ஆண்டுகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளது. கூடுதலாக, மின்சார வாகனங்கள் உள்கட்டமைப்பு மற்றும் ஆண்டுதோறும் செலுத்தும் சாலை வரிகளை ரத்து செய்யயும் திட்டத்திற்காக 8 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

இதனால், டில்லி மக்கள் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பலன்களை பெறுவார்கள். இதில், வாகனங்கள் வாங்குவதற்கான ஊக்கத்தொகை, பழைய வாகனங்களை அழிப்பதற்கான ஊக்கத்தொகை, சார்ஜிங் உள்கட்டமைப்பு உருவாக்குதல் ஆகியன அடக்கம். இந்த திட்டத்தை அமல்படுத்தும் ஒரே மாநிலம் டில்லி அரசு மட்டுமே. இந்த திட்டம் டில்லி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்த பிறகு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த திட்டத்தின்படி டில்லியில் பதிவு செய்யப்படும் 30 லட்சம் விலை குறைவான கார்களுக்கு சாலை வரியும், பதிவுக் கட்டணமும் கிடையாது.மின்சாரத்தில் இயங்கும் டூவீலர்களுக்கு முதலாண்டு ரூ.30 ஆயிரமும், 2ம் ஆண்டு ரூ.20ஆயிரம் , மூன்றாம் ஆண்டு ரூ.10 ஆயிரமும் மானியம் வழங்கப்படும்.

கடந்த சில ஆண்டுகளாகவே டில்லி கடுமையான காற்றுமாசால் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் 23 சதவீதம் மாசு ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தவே மின்சார வாகனங்கள் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இந்த கொள்கை 2020 ஆக., அறிமுகம் செய்யப்பட்டது. அது 2023 ஆகஸ்ட் மாதம் காலாவதியானது. இதனையடுத்து இந்த கொள்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.