Paristamil Navigation Paristamil advert login

அனைத்து மாநிலங்களிலும் எம்.பி., தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிப்பு: மத்திய அரசு

அனைத்து மாநிலங்களிலும் எம்.பி., தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிப்பு: மத்திய அரசு

30 ஆனி 2026 செவ்வாய் 05:14 | பார்வைகள் : 180


அனைத்து மாநிலங்களிலும் லோக்சபா எம்.பி., தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

கடந்த  ஏப்ரல் மாதம் பார்லிமென்ட் சிறப்புகூட்டத்தொடர் நடந்தது. இந்தத் தொடரில், லோக்சபா மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை 2029 ம் ஆண்டு முதல் அமல்படுத்தவும், அதற்கு ஏற்ற வகையில் லோக்சபாவின் எண்ணிக்கையை 543 ல் இருந்து 850 ஆக அதிகரிக்க  வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் 131 வது திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களை  மத்திய  அரசு கொண்டு வந்தது.

ஆனால், இதனால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்தன.  இதனால், தொகுதி மறுவரையறை மற்றும்  மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள் தோல்வி அடைந்தன.

திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்பிக்கள் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி எம்பிக்கள் 6 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்துள்ளனர். இதனால்,  தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வந்தன.

இதற்காக, ஒவ்வொரு மாநிலத்திலும் லோக்சபா எம்பி தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தும் பல்வேறு விதிமுறைகளை  மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மக்கள் தொகை கட்டுப்படுத்தியதால், தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என தென் மாநில அரசுகள் அச்சம் தெரிவித்துள்ளதை மனதில் வைத்து இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

முந்தைய மசோதா அடிப்படையில் 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கு இடையே, பின்பற்றப்பட்டவிகிதாசாரத்தை மாற்றாமல் அப்படியே தக்கவைக்கவும் மத்திய அரசு ஆலோசித்து  வருகிறது. இம்மசோதா தொடர்பாக  மத்திய அரசு ஆலோசிக்கும் பல்வேறு வழிமுறைகளில் இதுவும் ஒன்று.  ஆனால், இதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் முடியாத நிலையில்,  2011ம் ஆண்டு மக்கள் தொகைகணக்கெடுப்பின்படி  லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும்.

தேவையான ஆதரவை பெற்ற பிறகே, இம்மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.