Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ...விரைவில் மாற்றம்!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ...விரைவில் மாற்றம்!

29 ஆனி 2026 திங்கள் 14:09 | பார்வைகள் : 160


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் பலரை கட்சி பணிக்கு அனுப்ப, பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது; இது தவிர, பல மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2024ல் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மத்தியில் பொறுப்பேற்றது. மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.

ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி திரவுபதி முர்முவை சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சந்தித்து பேசியது, இந்த யூகத்தை உறுதிப்படுத்தியுள்ளது

இது குறித்து, பா.ஜ., மேலிட வட்டாரங்கள் கூறியதாவது:

ஓரிரு நாட்களில் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம். அமைச்சர்களுக்கு புதிய ஆற்றல் தேவை என்ற கருத்து, அரசின் உயர்மட்ட தலைவர்களிடையே வலுத்து வருவதால், முக்கிய பொறுப்புகளில் புதுமுகங்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

சில மத்திய அமைச்சர்கள் கட்சி பொறுப்புகளுக்கு மாற்றப்படலாம். அதேவேளையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அமைச்சரவையில் சேர்க்கப்படுவர். சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம்.

'நீட்' வினாத்தாள் கசிவு, மத்திய இடைநிலை கல்வி வாரிய மாணவர்களுக்கு டிஜிட்டல் மதிப்பெண் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி போன்றவற்றின் காரணமாக, கல்வி அமைச்சராக உள்ள தர்மேந்திர பிரதான் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.

பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து குறைந்தது இருவர் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம்.

மத்திய அமைச்சர்களான பங்கஜ் சவுத்ரி மற்றும் ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோர், கட்சியின் உத்தர பிரதேசம், டில்லி மாநில தலைவர்களாக உள்ளனர். ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை பா.ஜ., பின்பற்றுவதால், இருவரும் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்படலாம்.

மத்திய அமைச்சர்களான ஜார்ஜ் குரியன், ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோரின் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் கடந்த 21ம் தேதியுடன் முடிவடைந்தது. இருவருக்கும், ராஜ்யசபா தேர்தலில் மீண்டும் போட்டியிட மேலிடம் வாய்ப்பு அளிக்கவில்லை.

குரியன் தன் பதவியை ராஜினாமா செய்த நிலையில், ரவ்னீத் சிங் தொடர்ந்து அமைச்சராக நீடிக்கிறார். வரவிருக்கும் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்துமாறு, கட்சி தலைமை அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அதனால், அவரின் அமைச்சர் பதவியும் மாற்றப்படலாம்.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் மாநிலங்களில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அம்மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், மோடி அமைச்சரவையில் கூடுதலாக இடம் பெறலாம்.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்ற நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.,க்களும் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புள்ளது.

திரிணமுல் காங்கிரஸ், சிவசேனா உத்தவ் தாக்கரே அணி மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.பி.,க்கள், மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், மாற்றப்படும் அமைச்சரவையில் அவர்களுக்கும் இடம் கிடைக்கலாம்.

பீஹார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாரும் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படலாம். ஏற்கனவே மத்திய அமைச்சராக முன்னர் பதவி வகித்த அனுராக் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம். தற்போது, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்திருப்பதால், அந்த துறைக்கு திறன்மிக்க ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படலாம்.

அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே அமைச்சரவையில் மாற்றங்கள் செய்ய பா.ஜ., முடிவு செய்துள்ளது.

முக்கிய முடிவுகளை கடைசி நிமிடம் வரை ரகசியமாகவே வைத்திருப்பது பிரதமர் மோடியின் வழக்கம் என்பதால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே இது குறித்த தெளிவான விபரங்கள் தெரிய வரும்.

இவ்வாறு பா.ஜ., மேலிட வட்டாரங்கள் கூறின.

சிலருக்கு கவர்னர் பதவி

கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், மத்திய பிரதேச கவர்னர் மங்குபாய் படேல் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது. உத்தரகண்ட் கவர்னர் குர்மித் சிங் பதவிக்காலம் வரும் செப்டம்பரில் நிறைவடைகிறது. இது தவிர, கேரள கவர்னர் உட்பட சில கவர்னர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களின் பொறுப்புகளை கவனித்து வருகின்றனர்.

இந்த சூழலில், அமைச்சரவையில் இருந்து வெளியேறும் சிலருக்கு, கவர்னர் பதவி வழங்க வாய்ப்புள்ளதாகவும் டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.