Paristamil Navigation Paristamil advert login

கடல் முதல் வான் வரை பாதுகாப்பு வலிமை அதிகரிப்பு!: பிரதமர் பெருமிதம்

கடல் முதல் வான் வரை பாதுகாப்பு வலிமை அதிகரிப்பு!: பிரதமர் பெருமிதம்

29 ஆனி 2026 திங்கள் 13:04 | பார்வைகள் : 156


விமான தொழில்நுட்ப துறையில் நம் நாடு மிக முக்கியமான சாதனையை படைத்துள்ளது. கடல் முதல் வான் வரை நம் நாடு பாதுகாப்பு நிறைந்ததாகவும்; தற்சார்பு கொண்டதாகவும் மாறி வருகிறது,'' என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மன் கீ பாத்' எனப்படும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம், மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில், நேற்று அவர் ஆற்றிய 135வது உரையில், நம் நாடு தற்சார்பு கொண்டதாக மாறி வருகிறது என பெருமிதம் தெரிவித்தார். கடந்த ஆறு மாதங்களில், நாடு அடைந்துள்ள முக்கிய தற்சார்பு சாதனைகளை அவர் பட்டியலிட்டார்.

eதற்சார்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது:

இந்த ஆண்டின் முதல் பாதி, நிறைவு பெறப் போகிறது. மனதின் குரல் நிகழ்ச்சியில் கடந்த ஆறு மாதங்களில் நடந்த சாதனைகள் குறித்து நாம் பேசி இருக்கிறோம்.

இந்த மாதத்தில் கூட விமான தொழில்நுட்ப துறையில் நம் நாடு பெரிய வெற்றியை ஈட்டி இருக்கிறது. சி - 295 ரக ராணுவ போக்குவரத்து விமானம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, அதன் முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறது.

இதே போன்று, 40 விமானங்களை குஜராத்தின் வதோதராவில் நாமே தயாரித்து வருகிறோம்.

இதனால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும், விமான துறையும் பலன்பெறும்.  தவிர, இந்தத் துறையில் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். மேலும், தற்சார்பு பாரதம் என்ற உறுதியும் வலுவடைந்து வருகிறது.

மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஐ.என்.எஸ்., துனகிரி, ஐ.என்.எஸ்., ஷன்சோதக் மற்றும் ஐ.என்.எஸ்., அக்ரே ஆகிய போர்க் கப்பல்கள் நம் கடற்படையில் சேர்க்கப்பட்டன.

இந்த மூன்று கப்பல்களும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டவை.

டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், உள்நாட்டு தயாரிப்பில் உருவான எல்.ஆர்.எல்.ஏ.சி.எம்., எனப்படும் தொலைதுார நில தாக்குதல் ஏவுகணை சோதனையை இந்த மாதத்தில் தான் வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறது.

நம் நாட்டின் தொழிற்துறை கூட்டாளிகளும், டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகளும் இணைந்து, இந்த ஏவுகணையை உருவாக்கி இருக்கின்றனர்.

கடல் முதல் வான் வரை இன்று நம் நாடு பாதுகாப்பாகவும், தற்சார்பு கொண்டதாகவும் மாறி வருகிறது. டில்லியில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலை பி.டெக்., பட்டப் படிப்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பாடங்களை தொடங்கவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

நம் நாட்டின் பாரம்பரிய அறிவுடன்,  நவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

உலகின் மூலை முடுக்கெல்லாம் நம் கலாசாரம் சென்றடைந்து வருகிறது. கரீபியன் தீவு நாடான டொமினிக்கன் குடியரசில், இந்தியர்கள் 100 பேர் தான் வசிக்கின்றனர்.

அங்குள்ள ஸ்பெயின் மொழி பேசும் உள்ளூர் மக்கள் இணைந்து, இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வேத இலக்கியத்தை பயின்று வருகின்றனர்.

இதற்காக 'பிரம்மகமல் டொமினிகானா' என்ற பெயரில் குழுவை தொடங்கி, ஸ்ரீ ருத்ரம், ஸ்ரீ சூக்தம் போன்ற வேத பாராயணங்களை கற்று வருகின்றனர். இதற்கான முறையான பயிற்சிகள் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை.

எனினும், ஒலிப்பதிவுகளை கேட்டு, வேத மந்திரங்களின் உச்சரிப்புகளை கற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தங்கம் வாங்காதவர்களுக்கு நன்றி!

மனதின் குரல் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து மோடி கூறியதாவது:

மேற்காசியா போர் காரணமாக, சில காலம் தங்கம் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். வெளிநாடுகளுக்கு உல்லாச பயணம் செய்வதையும் தவிருங்கள்; குழுவாக கார்களில் பயணிக்கும் 'கார் பூலிங்' முறைக்கு ஊக்கமளியுங்கள் என வலியுறுத்தி இருந்தேன். நிலத்தை காக்க, இயற்கை உரங்களை அதிக அளவில் பயன்படுத்துங்கள் என விவசாயிகளிடமும் கேட்டுக் கொண்டேன்.

இந்த வேண்டுகோளுக்கு மக்கள் செவிசாய்த்து, ஆதரவு அளித்து வருகின்றனர். அதற்காக என் நன்றியை நாட்டு மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன். தேச கட்டுமானத்தில் மக்களின் பங்களிப்பு நிச்சயம் வெற்றியை ஈட்டி தரும்.

இவ்வாறு அவர் கூறினார்.