Paristamil Navigation Paristamil advert login

பெண் உட்பட 5 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

பெண் உட்பட 5 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

28 ஆனி 2026 ஞாயிறு 17:55 | பார்வைகள் : 199


சுமார் 29.2 மில்லியன் ரூபாய் சந்தை மதிப்புடைய ‘ஹஷிஷ்’ மற்றும் ‘குஷ்’ போதைப்பொருட்களை இலங்கைக்குள் கடத்தி வர முயன்ற பெண் உள்ளிட்ட 5 இலங்கை விமானப் பயணிகளைக் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் கேகாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் இன்று (28) அதிகாலை 04.30 மணியளவில் தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பொலிஸாரின் சோதனைகளில் இருந்து தப்புவதற்காகச் சந்தேக நபர்கள் ஒரு புதிய தந்திரத்தைக் கையாண்டுள்ளனர். விமான நிலையத்தின் வரி விலக்கு வணிக வளாகத்தின் பெயர் அச்சிடப்பட்ட பாலித்தீன் பைகளுக்குள், 15 கண்ணாடிக் குப்பிகளில் இந்த போதைப்பொருட்களை அடைத்து மறைத்துக் கொண்டு வந்துள்ளனர்.

விமான நிலையத்தின் பிரதான வெளியேறும் முனையத்தைக் கடந்து, போதைப்பொருட்களை நாட்டிற்குள் எடுத்துச் செல்ல முயன்ற போதே இவர்கள் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஐவரிடமும் வான்புலனாய்வு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பொலிஸார் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.