Paristamil Navigation Paristamil advert login

மீன் பிரியாணி

மீன் பிரியாணி

28 ஆனி 2026 ஞாயிறு 06:00 | பார்வைகள் : 153


பிரியாணி சாப்பிட பிடிக்காதவர்கள் என்று யாருமில்லை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் இதுவும் ஒன்று. அதேபோல் மீன் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது, அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

எப்போதும் மீன் வாங்கினாலும் குழம்பு அல்லது வறுத்து சாப்பிடுவது தான் வழக்கம், ஆனால் இந்த முறை மீன் வாங்கினால் கண்டிப்பாக இந்த மீன் பிரியாணியை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள், அனைவரும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும்.அந்தவகையில் உதிரி உதிரியாக மீன் பிரியாணியை வீட்டிலேயே மிக எளிதான செய்முறையில் எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 1/2 கிலோ
வஞ்சரம் மீன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
பழுத்த தக்காளி - 3
தேங்காய் பால் - அரை கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 3
பட்டை - 1
ஏலக்காய் - 3
பிரியாணி இலை - 1
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையானவை :
துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
பச்சமிளகாய் - 2
காய்ந்த சிகப்பு மிளகாய் - 2
சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
இஞ்சி துண்டு - 1
பூண்டு - 6 பல்

செய்முறை :

பாசுமதி அரிசியை இரண்டு மூன்று முறை அலசி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுமார் அரை மணிநேரம் வரை ஊறவைத்து கொள்ளுங்கள்.

அடுத்து மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சோம்பு, பச்சை மிளகாய், காய்ந்த சிகப்பு மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மைய விழுதாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் மற்றும் சிறிதளவு நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து கலந்து பிறகு அதில் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் அதில் புதினா மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து வதக்கி பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கலந்துவீட்டுக்கொள்ளுங்கள்.

மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் அலசிய வஞ்சரம் மீன் துண்டுகளை சேர்த்து கவனமாக கிளறி பிறகு அதில் உறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து அதனுடன் தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு 2 விசில் வரும் வரை வேகவிடவும். 

குக்கரில் பிரஷர் தானாக அடங்கியவுடன் மூடியை திறந்து பார்த்தால் சுவையான மீன் பிரியாணி சாப்பிட தயாராக இருக்கும். இதை சுடசுட தட்டில் போட்டு வெங்காய பச்சடி வைத்து சாப்பிட்டால் சுவையாக அள்ளும்...